

அறிவியலை மிக எளிய மொழியில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் நன்மாறன் திருநாவுக்கரசு இந்நூலில் எழுதியிருக்கிறார். இந்நூலைப் படித்தவுடன் மாணவர்களின் அறிவியல் தேடல் அதிகமாகும் என்பது உறுதி. மாணவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் இது ஆசிரியர்களும் பெரியவர்களும் படிக்க வேண்டிய நூல். - அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.
காந்தி உங்கள் உறவினர், பூமிக்கு நீர் எங்கிருந்து வந்தது? உயிர்களைக் கட்டுப்படுத்துகிறதா நிலா? டைனசோர்களை உயிருடன் கொண்டுவர முடியுமா? தாவரங்கள் பேசிக்கொள்ளுமா? நாம் ஏன் கனவு காண்கிறோம்? ஏன் செல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்? விண்வெளியின் தூரத்தை அளப்பது எப்படி? - இது போன்ற 25 சுவாரசியமான கட்டுரைகள் அடங்கிய நூல் இது.
விடை தேடும் அறிவியல்
நன்மாறன் திருநாவுக்கரசு
விலை: ரூ.120
இந்து தமிழ் திசை பதிப்பகம்
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
இந்து தமிழ் திசை நூலுக்கு விருது: பிரியசகி எழுதி ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பெரிதினும் பெரிது கேள்’ நூல் சிறந்த சிறார் நூலுக்கான செளமா இலக்கிய விருதை வென்றுள்ளது. இந்த நூல் தற்காலத்தில் மாணவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு வழிகாட்டக்கூடியதாகும்.
சக வயதினரோடு கூடிப் பழகுதல், குழுவாக இணைந்து ஓடி ஆடி விளையாடுதல், வகுப்பறையில் ஒன்றுசேர்ந்து கற்றல் போன்ற இனிமையான அனுபவங்களை ஒருசேரத் தரக் கூடியது பள்ளிக்கூடம். ஆனால், பெருந்தொற்றால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம்.
அதனால் துளிர்களுக்கு இதில் சொல்லப்பட்ட ‘கூடி’, ‘இணைந்து’, ‘சேர்ந்து’ போன்ற சொற்கள் அந்நியமாகிப் போயிற்று. இதன் பின்விளைவு என்னவென்பது, இரண்டாண்டுக் காலம் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடக் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டபோது அனைவருக்கும் உறைக்கத் தொடங்கியது.
சிறாரிடம் பல்வேறு நடத்தைச் சிக்கல்கள் ஆங்காங்கே தென்பட்டன. சிலர் கற்றலில் சறுக்கினர்; சிலர் தன்னம்பிக்கை இழந்து தடுமாறினர்; சிலரோ ஆசிரியர்களிடமே தகாத முறையில் நடந்துகொண்டனர்; சிலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் அபாயத்திலிருந்தனர்; இப்படிப் பல. வயதில் பெரியவர்கள் பலரின் இயல்பு வாழ்க்கையைப் பெருந்தொற்றுக் காலம் இடைமறித்தது என்றால், மாணவர்களின் வாழ்க்கையை அது தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அதற்கான தீர்வாக எழுதப்பட்ட நூல் இது.
பெரிதினும் பெரிது கேள்
பிரியசகி
விலை: ரூ.150இந்து தமிழ் திசை பதிப்பகம்
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
ஆஹா!: ஆங்கிலத்தில் கம்பராமாயணம்: வ.வே.சுப்பிரமணியம், ‘உலகில் ஒருவர் அடைய வேண்டிய பேறுகளில் ஒன்று கம்பராமாயணத்தைப் படிப்பது’ என்று எழுதினார். அந்தப் பேறு நெடுங்காலமாகத் தமிழ் வாசகர்களுக்கு மட்டுமே கிடைத்துவந்தது. ஆறு காண்டங்கள்; 42,000 வரிகள் கொண்ட செய்யுள்களாக அமைந்த கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது எக்காலத்திலும் சவாலான பணிதான்.
1917இல் வ.வே.சு.லண்டனில் இருந்தபோது, பால காண்டத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக மொழிபெயர்த்து வெளியிட்டார். மறைந்த ஆங்கிலப் பேராசிரியர் பி.எஸ்.சுந்தரம் மேற்கொண்ட மொழிபெயர்ப்பு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் 1989இல் வெளியிடப்பட்டது. இது ஆறு காண்டங்களுக்கும் தனித் தனி நூல்களை உள்ளடக்கியது. பி.எஸ்.சுந்தரத்தின் மொழிபெயர்ப்பு, 2014இல் பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் வழியே சுருக்கமான வடிவில் வெளியானது.
கம்பராமாயணத்தின் முழுமையான, தமிழ் இலக்கியப் பின்புலம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பு சாத்தியமாகாமலேயே உள்ளது. இந்தத் தேவைகளை நிறைவேற்றும்வகையில், பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம், கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்க்கும் ஒரு பெருந்திட்டம் ஒன்றை அண்மையில் அறிவித்துள்ளது. ஒவ்வொரு காண்டத்தையும் ஒவ்வொரு அறிஞர் மொழிபெயர்க்க உள்ளார்.
செய்யுள், விளக்கம் இரண்டுக்குமான மொழிபெயர்ப்பும் இதில் அமையும். அட்லாண்டாவில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தில் சமயங்கள் துறையில் பணிபுரியும் ஷிவ் சுப்பிரமணியம் (பால காண்டம்), இஸ்ரேலைச் சேர்ந்த இந்தியவியல் அறிஞரான டேவிட் ஷூல்மன் (அயோத்தியா காண்டம்), சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விட்னி காக்ஸ் (ஆரண்ய காண்டம்), தற்சார்பான அறிஞரான ஜெனிஃபர் க்ளேர் (கிஷ்கிந்தா காண்டம்), சமயப் படிப்புகள் - ஒப்பியல் இலக்கிய அறிஞரான அர்ச்சனா வெங்கடேசன் (சுந்தர காண்டம்), சமூக, பண்பாட்டு மானுடவியலாளரான அனிருத்தன் வாசுதேவன் (யுத்த காண்டம் - 1 மற்றும் 2) ஆகியோர் மொழிபெயர்க்க உள்ளனர்.
இந்த ஏழு தொகுதிகளுடன், டேவிட் ஷூல்மனும் அர்ச்சனா வெங்கடேசனும் இணைந்து, நூல் அறிமுகத்துக்கான தொகுதியை எழுத உள்ளனர். மொத்தம் எட்டுத் தொகுதிகளாக இம்மொழிபெயர்ப்பு, 2028-2030இல் வெளிவர உள்ளது. ராமாயணத்தின் காவியச் சிறப்பும் கம்பர் அதில் காட்டிய தனித்தன்மையும் தற்கால ஆங்கில வாசகர்களையும் வசப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். - ஆனந்தன் செல்லையா