Published : 19 May 2018 08:52 AM
Last Updated : 19 May 2018 08:52 AM

நல்வரவு: உப்புச்சாடிக்குள் உறையும் துயரக்கடல்

‘எழுத்துகள் எனக்கு வெறும் எழுதுகோலின் பிரசவம் இல்லை. எல்லா உறவுகளாலும் நிராகரிக்கப்பட்ட என் ஏக்கங்களை கூர் உடைந்த பேனாக்களால் எழுதித் தீர்க்கிறேன்’ என்று சொல்லும் ஈழத்துக் கவிஞர் தமிழ் உதயாவின் ஐந்தாவது கவிதை நூல். துயர்மிகு வாழ்வின் வலிகளுக்கிடையே சுரக்கும் அன்பை மிகக் குறைந்த சொற்களால் கவிதையாக்கியுள்ளார். ‘சிறகு செய்வோம்/ நாம் முடித்து/ பிரிந்து போகையில்/ அது பறக்க வேண்டுமல்லவா/ துயரங்களைத் தூக்கிக்கொண்டு!’ எனும் வரிகளில் கவனிக்க வைக்கிறார் தமிழ் உதயா.

உப்புச்சாடிக்குள் உறையும் துயரக்கடல்

தமிழ் உதயா

விலை: ரூ.70, நன்செய் பிரசுரம்

திருத்துறைப்பூண்டி - 614713.

: 9789381010

கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரும் மணிநாத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. 15 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் சாதாரண உழைப்பாளி மக்களைப் பற்றியும் அவர்களது நிரந்தரமற்ற பணிச்சூழலைப் பற்றியும் பெரும் அக்கறையோடு பேசுகின்றன. சமூக உண்மைகளை உரத்த குரலில் முழங்குகின்றன. சென்னையில் பெரு வெள்ளத்தின்போது நடைபெற்ற நிகழ்வுகளை அப்படியே சொல்லும் ‘வெள்ளப்பெருக்கு’ம், தர்மபுரி சம்பவத்தை வேறொரு கோணத்தில் பார்க்கும் ‘தப்புக்கொட்டை’யும் இவரது சமூக அக்கறைக்குச் சான்றான கதைகள்.

பதிலிகள்,

மணிநாத்

விலை: ரூ.150, காவ்யா வெளியீடு

சென்னை - 600024. 044-23726882

கடந்த இரண்டாண்டுகளில் செ.வை.சண்முகம் பங்கேற்ற கருத்தரங்குகளில் வாசித்த 9 கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. ‘மொழித் தொல்லியல்’ எனும் முதல் கட்டுரையே தொல் மொழி, இலக்கியத் தொல்லியல், இலக்கணத் தொல்லியல், எழுத்தாக்கம் உள்ளிட்ட பல உட்தலைப்பு களின் கீழ் விரிவான ஆய்வுக் கட்டுரையாக உள்ளது. வ.சுப.மா-வின் தொல்காப்பியச் சிந்தனை, சங்க இலக்கியத்தில் சூழலியல், கவிதைக் கருத்தாடல் நோக்கில் திருக்குறள் ஆகிய கட்டுரைகள் சண்முகத்தின் இலக்கிய, மொழியியல் சிந்தனையின் விரிந்த தளத்தை உணர்த்துவதாக உள்ளன.

மொழித் தொல்லியல்

முனைவர் செ.வை.சண்முகம்

விலை: ரூ.125, மணிவாசகர் பதிப்பகம்

சென்னை - 600108. 044-25361039

நல்ல திரைப்பட ரசனையை மேம்படுத்தும் நோக்கில் ‘புதுகைத் திரைப்பட சங்கம்’ அமைப்பின் மூலமாக உலகத் திரைப்படங்களைத் திரையிட்டுவரும் எஸ்.இளங்கோ, திரைப்படங்களின் உள்ளடக்கமாகத் துலங்கிய உள்ளம் கவர்ந்த 15 திரைக்கதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். ஒரு திரைப்படத்தின் உயிர்நாடி கதையே என்பதையும், அதைக் காட்சி வடிவத்தில் சொல்ல வேண்டிய நுட்பமான பார்வை குறித்தும் பகிர்ந்துள்ளார். கதைகளை நீட்டி முழக்காமல் சுருக்கமாக அதே நேரத்தில் சுவை குன்றாமல் சொல்லியவிதம் ரசிக்க வைக்கிறது.

போப்பின் கழிப்பறை

எஸ்.இளங்கோ

விலை: ரூ.80, அகரம் வெளியீடு

தஞ்சாவூர் - 613007. 04362-239289

தொகுப்பு: மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x