

காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் முசிறி. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பிறந்த ஊர். ஊருக்கு வெளியே ஆற்றின் கரையில் இயங்கி வந்தது அரசு நூலகம். அந்த நூலகக் கட்டிடம் காலத்தால் சிதிலமடைந்தபோது, அதே இடத்தில் அதைப் புதுப்பிக்கும் முயற்சிகளை நூலகரும் நூலகத் துறையும் மேற்கொண்டு வருவதை அறிந்த உள்ளூர் மக்கள், முசிறியில் இயங்கும் ‘களம்’ இலக்கிய அமைப்பின் மூலம் ஒரு குறுக்கீடு செய்தார்கள்.
ஊரின் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு, நூலகம் விரிவாக்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருந்தது. மக்களின் விருப்பத்துக்கு உயிரூட்டிச் செயல் வடிவம் கொடுக்க எப்போதும் ஓர் அமைப்பு அல்லது இயக்கம் தேவைப்படும். அந்த இடத்தில் தன்னார்வமாக வந்துநின்றது முசிறியின் ‘களம்’ இலக்கிய அமைப்பு. ஊராட்சியாக இருந்த முசிறி, இன்று நகராட்சி ஆகிவிட்டது. நகராக விரிவு கொண்டுவிட்டதைக் கவனத்தில் கொண்ட ஒரு புதிய நூலகம் தேவை.
முசிறியின் சார் ஆட்சியராக 20 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய விஜயகுமார், இப்போது கூடுதல் தலைமைச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார். அவரைச் சந்தித்துக் களம் அமைப்பினர் வழிகாட்ட வேண்டினர். பழைய ஊரின் மீது கொண்ட அன்பால் அவர் வழிகாட்ட, திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு உதவியுடன் களம் அமைப்பினர் நூலகத் துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றி, ஊரின் மையத்தில் ஓர் இடத்தை அடையாளம் காட்டினர்.
மாவட்ட ஆட்சியர் அந்த 10 சென்ட் இடத்தை நூலகத் துறைக்குக் கைமாற்றித் தந்தார். இனி கட்டிடம் கட்ட வேண்டும். களம் அமைப்பினரின் கனவு நூலகமாக அது மலர வேண்டுமானால், மக்கள் பங்கேற்புடன்தான் அது சாத்தியம். களத்தில் இறங்கினர் களம் அமைப்பினர்.
ரூ.30 லட்சத்தை நண்பர்கள், ஊர் மக்களிடம் இருந்தும் திரட்டி, அரசிடம் அளித்தனர். அரசின் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் அரசு இரண்டு மடங்குப் பணமாக ரூ.60 லட்சமாக மாற்றியது. திட்டம் இன்னும் விரிவடைந்து, ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயில் நூலகக் கட்டிடத்துக்கான வரைவு உருவானது.
இதற்கிடையில், தேர்தல் நடந்து புதிய அரசு பொறுப்பேற்கிறது. களம் அமைப்பினர் நிதித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரனைச் சந்தித்துப் பேசினர். அவர் அரசு அதிகாரிகளிடம் நூலகத்தின் அமைப்பு, நூலகம் இயங்க வேண்டிய முறை குறித்து உரையாடல் நிகழ்த்தி, நூலக உருவாக்கத்தின் உந்துசக்தியாக இருந்தார்.
ஒரு புதிய அலுவலர்கள் குழுவுடன் இணைந்து மீண்டும் பணி தொடங்கினர். பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமாரையும் களம் அமைப்பினர் சந்தித்தனர். திருச்சி மாவட்ட நூலகர் சிவக்குமாரும் மக்களோடு இணைந்து கூடவே நின்றார்.
பொதுமக்கள் வாசிப்பதற்கான பகுதி, மகளிருக்கான தனிப்பகுதி, குழந்தைகளுக்கான நூலகப் பகுதி, போட்டித் தேர்வுக்குப் படிப்போருக்கான தனிப்பகுதி, கூடவே ஒரு கூட்ட அரங்கு என ஒரு முழுமையான நூலகமாக அது மலர்ந்தது. அங்கே இருந்த அரசு அலுவலகம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வேறிடத்துக்கு மாற்றி இடத்தை வழங்க, குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடலும் உருவானது.
தமிழக நூலக ஆணைக் குழுவின் இயக்குநர் இளம்பகவத் இப்படியான ஒரு மக்கள் நூலகத்துக்குப் புதிய நூல்கள் வாங்குவதற்காக 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். களம் அமைப்பினர் நன்கொடையாகப் பல நூறு புத்தகங்களைப் பெற்று நூலகத்துக்கு வழங்கினர்.
தமிழக முதல்வர் காணொளி வாயிலாக இந்நூலகத்தைத் திறந்துவைத்து, இப்போது நூலகம் செயல்படத் தொடங்கிவிட்டது. மக்களை வாசிப்பை நோக்கிக் கவர்ந்திழுக்கும் முசிறி மக்களின் இந்த முயற்சி பின்பற்றத்தக்கது. இதுபோன்ற அதிசயங்கள் இன்றைக்கும் சாத்தியம் என முசிறி முரசறைந்து சொல்வதாகவே உணர்கிறேன்.
- தொடர்புக்கு: tamizh53@gmail.com