

அந்நிய மண்ணைத் தங்களது ஆளுகையின்கீழ்க் கொண்டுவர அங்கு பேசப்படும் மொழிகளை ஆக்கிரமிப்பாளர்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது வரலாற்றினூடாக ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது. ‘வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும்’ (மொழியில் உதித்த பேரரசு) நூல், ஆங்கிலேயர்களுக்கும் தமிழ் மொழிக்குமான தொடர்பைப் பல்வேறு ஆவணச் சான்றுகளுடன் விவரிக்கிறது. பயன்பாட்டு நோக்கிலான தொடர்பு, பின்னாள்களில் சில ஆங்கிலேயர்களுக்கு உறவாகவே வளர்ந்ததும் இதில் பேசப்பட்டுள்ளது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ந.கோவிந்தராஜன் இந்நூலை எழுதியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பின்னர், மற்ற பாளையக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கத்துடன் மேஜர் பானர்மென் அனுப்பிய சுற்றறிக்கை, பேச்சுத் தமிழிலேயே அமைந்திருந்தது. இந்த உத்தரவைத் தாங்கிய செப்பேட்டில் தொடங்கும் இந்நூல், ஆங்கிலேயர்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக எழுதிய சொற்பட்டியல்களையும் நூல்களையும் முன்வைத்து, அவர்கள் நாக்கில் தமிழ் புழங்கிய விதத்தைக் கூறுகிறது.
துரைமாரின் வீட்டில் உணவு சமைப்பதை மேற்பார்வை செய்கிற பட்லர், சமைக்கும் குசினிக்காரர், மொழிபெயர்ப்பு வேலை செய்த துபாஷி, துரைசானி ஆகியோரிடையேயான மாதிரி உரையாடல்களும் ஆங்கிலேயரது பேச்சுப் பயிற்சிக்காகப் பரப்பப்பட்டன. சாதியை ஆங்கிலேயர்கள் எதிர்கொண்ட முறையை அவற்றினூடாக இந்நூல் சுட்டுகிறது. நூலில் இடம்பெற்றுள்ள பழைய காலச் சித்திரங்கள், சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.
வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும்
(மொழியில் உதித்த பேரரசு)
ந.கோவிந்தராஜன்
க்ரியா பதிப்பகம்
விலை: ரூ.650
தொடர்புக்கு: 72999 05950
நவீனக் கவிதைகளில் பெரியார்! - தமிழ் நவீனக் கவிதையியலின் பாடுபொருள்களில் திராவிடக் கூறுகள் வெளிப்பட்ட அளவுக்குச் சில ஆண்டுகளுக்கு முன், தந்தை பெரியாரின் பங்களிப்பு குறித்த கவிதைகள் இல்லை என்னும் பார்வை முன்வைக்கப்பட்டது. அதன் எதிரொலிப்பாக சுகுணா திவாகர் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ‘அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்’. பெரியார் மிகத் தீவிரமாகக் களமாடிய அரை நூற்றாண்டில் நிகழ்ந்த பல்வேறு அரசியல், சமூக விளைவுகளின் அடிப்படைகளை மையமாகக் கொண்டு கவிதைகளாக்கியுள்ளார் சுகுணா திவாகர். ஒவ்வொரு கவிதைக்கும் பின்னால் உள்ள வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டிக்கொள்ளும்போது, கவிதை இன்னும் செறிவானதாக மாறுகிறது.
தொகுப்பின் தலைப்புக் கவிதையான ‘அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்’, ‘வணக்கம் வணக்கம்’ என்று தொடங்குகிறது. நமஸ்காரம் என்பது வணக்கமான கதை தெரிந்தால் இந்த வணக்கத்தின் மதிப்பு இன்னும் கூடும். அதேபோல பெயரழிப்புப் போராட்டம், பால்ய திருமணம் எதிர்ப்பு எனப் பல்வேறு மாற்றங்களை வரிசையாக அடுக்கி முன்நகர்ந்து செல்கிறது கவிதை.
பெரியாரின் இயல்புக் குணங்களை விதந்தோதிக்கொண்டிராது, அரசியல் குணங்களை சுகுணா கையிலெடுத்ததே தொகுப்பின் பலமாக மாறியுள்ளது. காந்தியார் மறைவின்போது நடந்த கூட்டம் பற்றிய கவிதையில் அதை முழுமையாகக் காண முடியும். வரலாற்றுச் சம்பவங்களை மொழியால் அழகூட்டி ஜோடனையாக்கவோ, பெருமிதச் செருக்கோடு முன்மொழியவோ முயலாது, சமகாலச் சூழலோடு அச்சம்பவத்தின் விளைவுகளைப் பொருத்திப் பார்க்கும் விதமாக, அப்பாடுபொருளை நவீனத்தன்மையோடு கவியாக்கம் செய்வதில் முனைப்புக் காட்டியுள்ளார்.
அதனால்தான் இவை புகழஞ்சலியாக மாறாது, கவிதைகளாக நிலைத்துள்ளன. பெரியாரின் சிலைகளை உடைப்பவர்கள் பற்றி ‘மெடிக்கல் மிராக்கிள்’ எனும் கவிதை ‘அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் / மருந்துப் புட்டிகளை உடைப்பது / மனநோயாளிகளின் வழக்கம்தானே’ என்று முடிகிறது.
கவிதை மாதிரியான நுண்கலை வடிவத்தைக் கருத்தியல் என்னும் முன்திட்டமிடலோடு அணுகினால் கவித்துவம் பின்னோக்கிச் சென்றுவிடும் என்பது சிலரின் கருத்தாக இருக்கும். இத்தொகுப்பின் கவிதைகளை அணுகுவதற்கும் அரசியல் சம்பவங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா, தெரிந்துகொண்டுதான் வாசிக்க வேண்டுமா என்று கேள்விகளும் எழுப்பப்படலாம். இதே கேள்வியை வேதாந்தம், இசை, நாட்டார், பக்தி உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் கவிதைகளுக்கும் எழுப்பலாம் இல்லையா? ஒன்றின் கைப்பிடித்து அழைத்துச் சென்று வேறொன்றாக மாற்றுவதும் கலையின் அம்சங்களில் ஒன்றுதானே. - விஷ்ணுபுரம் சரவணன்
அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்
சுகுணா திவாகர்
கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை
விலை: ரூ.90
தொடர்புக்கு: 9444272500
இணையற்ற வீரம்: கம்பராமாயணத்தில் வீடணன் தன் தமையன் ராவணனுக்கு அறிவுறுத்துவதாக அமைந்த இரணிய வதைப் படலத்தையொட்டித் தனி நூலை எழுதியிருக்கிறார் பேராசிரியரும் எழுத்தாளருமான முகிலை இராசபாண்டியன்.
முக்கடவுளரும் தேவர்களும் தன் பெயரை உச்சரித்து வணங்கிய நிலையில், தனக்குப் பிறந்த பிள்ளையே அவர்களுக்கு ஆதரவாளனாக மாறித் தோல்விக்கு ஆட்படுத்திய கதை இரணியனுடையது. கடவுளருக்கு இணையாகவும் அவர்களுக்கு மேலாகவும் வைத்து எண்ணப்படும் தவ வலிமைகளைக் கொண்டவன் அவன்.
உலகெலாம் உயர்ந்தோன்; இறவா வரமும் பெற்றவன். புராணங்களை அறிவுக்கு உட்படுத்தியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முறைமையோடு எழுதப்பட்டுள்ளது இந்நூல். கம்பன் விவரிக்கும் தமிழ் மாட்சியை வியப்பதோடு கந்தபுராணக் கதை மாந்தரையும் களங்களையும் பாவேந்தரின் மறுபடைப்பாக்கத்தையும் ஒப்பிட்டு ஆராய்கிறது.
இரணியனும் அவன் வழி நிற்கும் அசுரர்களும் தமக்கென்று தனியாகப் பின்பற்றிய வேதம் நல்லொழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது; மேருவும் மகேந்திரமும் மந்தரமும் குமரிக்கண்டத்து மலைகள், அங்கு ஏழு மலைகள் தொடராக அமைந்திருந்தன என்பது போன்ற தகவல்கள் நமது தொன்மங்களை மறுவாசிப்புச் செய்ய வேண்டியதன் தேவையை உணர்த்துகின்றன. - செ.இளவேனில்
இரணியன்,
முகிலை இராசபாண்டியன்,
பென் பேர்டு பப்ளிகேஷன்ஸ்,
விலை: ரூ.150
தொடர்புக்கு: 8220063246