

பெண்களை அதிகாரப்படுத்துவது தொடர்பாக உலகமெங்கும் பல்வேறு நாடுகள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், அதன் உள்ளூர் வடிவமாக ‘புழுதி’ இயக்கம் சார்பாகப் பெண் ஆளுமைகள் 19 பேரை நேர்காணல் செய்து அவற்றைத் தொகுத்திருக்கிறார் பத்மா அமர்நாத். எழுத்தாளர்,
பேராசிரியர், காவல் துறை அதிகாரி, தொழிலதிபர், திரையாளுமை எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களின் நேர்காணல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆளுமைகள் ஒவ்வொருவரும் வாழ்க்கையையும் பெண்ணுரிமையையும் அணுகும் விதத்தை இந்த நேர்காணல்கள் முன்வைக்கின்றன. ‘பெண்ணாக இருப்பதே பெருமை’ என்று ஒருவர் சொன்னால் மற்றொருவரோ, ‘நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுசெய்ய நீங்கள் யார்?’ எனக் கேட்கிறார்.
இருவருமே பெண்ணுரிமையைத்தான் பேசுகிறார்கள். இந்த நூலில் இடம்பெற்றிருப்பவர்களின் பார்வை வேறு; கோணம் வேறு. ஆனால், அனைவரது இலக்கும் பெண் விடுதலை. விறுவிறுப்பான திரைக்கதைகளைவிட வாழ்க்கைக் கதைகள் சுவாரசியமும் திருப்பங்களும் நிறைந்தவை. இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் நேர்காணல்களும் அதற்கு விதிவிலக்கல்ல. - ப்ரதிமா
நம் வெளியீடு | பகைவர்களை அழிக்கும் முருகன்: முருகன் என்கிற பெயருக்கு அழகு என்று பொருள். இப்பெயரை ஒருமுறை உச்சரிக்கும்போது முப்பெரும் தேவர்களும் அருள் வழங்க வருகிறார்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். ‘மு’ என்னும் எழுத்து முகுந்தனையும் (திருமால்), ‘ரு’ என்னும் எழுத்து ருத்ரனையும் (சிவபெருமான்), ‘க’ என்னும் எழுத்து கமலனான நான்முகனையும் (பிரம்மதேவன்) குறிப்பிடுகின்றன.
‘முருக’ என்கிற பெயரை உச்சரிக்கும்போதும் முருகப் பெருமானை அழைக்கும்போதும், மும்மூர்த்திகளின் அருளும் நமக்குக் கிடைக்கிறது. ஆறு முகங்களைக் கொண்டதால் முருகப் பெருமானை ‘ஆறுமுகன் என்று அழைத்தாலும், அவர் ஆறு பகைவர்களை அழிக்கிறார்’ என்பதை அறிகிறோம். முருகக் கடவுளைப் பற்றி இன்னும் பல தகவல்களுடன் தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல்.
காக்கும் கார்த்திகைச் செல்வன்
கே.சுந்தரராமன்
இந்து தமிழ் திசைப் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 74012 96562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
கருத்தியல் தளத்திலான நல்வரவு: மதுரையிலிருந்து 2018இலிருந்து வெளிவரும் ‘மானுடம்’ இதழ் ‘சான்றோர்க்கு அணி’ என்னும் அடிக்குறிப்புடன் காலாண்டு இதழாக வெளிவந்து, தற்போது 25ஆவது சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. ‘வராக்கிரம சோழ பேரளத்துக் குடும்பன் வாரியூர் கல்வெட்டு கூறுவதென்ன?’ என்னும் அட்டைப்பட வரிகளோடு தொடங்கும் இந்த இதழில், ஆய்வறிஞர்கள் அ.கா.பெருமாள், பொ.வேலுச்சாமி, வெ.பக்தவத்சல பாரதி, க.பழனித்துரை, சுப்ரபாரதிமணியன், க.பஞ்சாங்கம், வே.மு.பொதியவெற்பன், ந.முருகேச பாண்டியன், ச.வின்சென்ட், கோவி.லெனின், அண்டனூர் சுரா உள்ளிட்டோரின் காத்திரமான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. வரலாற்றையும் மரபார்ந்த செல்நெறிகளையும் கருத்தியல் தளத்தில் கட்டுரைகளாகத் தரும் இந்த ‘மானுடம்’ இதழின் வரவு வரவேற்கத்தக்கது. - மு.முருகேஷ்
மானுடம்
காலாண்டிதழ்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 90035 98674
ஆவணப்படம் திரையிடல்: ஆவணப்பட இயக்குநர் அம்ஷன்குமார் இயக்கிய ‘ஈழக்கூத்தன் தாசீசியஸ்’ என்கிற ஆவணப்படம், இன்று (27.07.24) மாலை 6 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரம் தமிழ்நாடு இசைக் கல்லூரி வளாகத்தில் உள்ள என்.எஃப்.டி.சி. தாகூர் ஃபிலிம் சென்டரில் திரையிடப்பட உள்ளது.
களந்தை பீர்முகம்மதுக்கு விருது: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை சார்பில் வழங்கப்படும் மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான விருது, இந்த ஆண்டு எழுத்தாளர் களந்தை பீர்முகம்மதுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசுக் கோப்பையும் உள்ளடக்கியது.