Published : 12 May 2018 09:11 AM
Last Updated : 12 May 2018 09:11 AM

நூல்வெளி: ஈர்ப்பின் பெருமலர்

ஈர்ப்பின் பெருமலர் – எஸ்.சண்முகம்

விலை: ரூ.120

போதிவனம், சென்னை - 600014

செல்: 9841450437

வாழ்வின் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து சற்றே விலகிச் செல்லும் அகச்சொல்லாடலில் முகிழ்த்த கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு. எதையும் முழுமையாக சொல்லித் தீராத சொற்களிலிருந்து உயிர்க்கும் இக்கவிதைகளில் வெளிப்படும் இருண்மை மொழி வாசகனையும் அகவெழுச்சி கொள்ள வைக்கிறது. ‘காட்சியில் புதைந்திருக்கும் எல்லையின்மையோ/ மின்னி மின்னி அழைக்கிறது/ உடன் யாருமற்றிருக்கும் இத்தனியனை’ எனும் வரிகள், நம்மையும் உடன் அழைத்துக்கொள்ளும் கவி வரிகளாக உள்ளன.

நான் ஏன் பிறந்தேன்? – பிரியசகி

விலை: ரூ.120

மேன்மை வெளியீடு, சென்னை - 600014

பேசி: 044-28472058

‘என்னுடைய அனுபவங்களையும், நான் கண்ட, என்னைப் பாதித்த பிறரது அனுபவங்களையும் சிறுகதைகளாக்கியுள்ளேன்’ என்று நூலாசிரியர் சொல்வதை நிரூபிக்கும் வண்ணமாக எழுதப்பட்ட 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. நூலாசிரியர் உளவியல் சார்ந்த கல்வியாளர் என்பதால் மனவளர்ச்சி குன்றுதல், கவனச் சிதறல் குறைபாடு, ஆட்டிசம் உள்ளிட்ட இளம்பிராயத்து குழந்தைகளுக்கான பிரச்சினைகளை சமூக அக்கறையோடு கையாண்டுள்ளார். சில கதைகளின் முடிவிலிருக்கும் தத்துவம் போன்ற வரிகளைத் தவிர்த்திருக்கலாம்.

வெள்ளம் – மா.கமலவேலன்

விலை: ரூ.65

தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600098

பேசி: 044-26251968

நாடகம் என்றாலே தொலைக்காட்சி தொடர்கள்தான் என்கிற எண்ணம் மேலோங்கியிருக்கும் சூழலில், பாரம்பரியமிக்க தமிழ் நாடகக் கலையை இன்னமும் தக்க வைத்துக்கொண்டிருப்பவை சில நாடகக் குழுக்களும், வானொலி நிலையங்களுமே. மதுரை வானொலியில் ஒளிபரப்பான வெள்ளம், கவிதை எனும் இரு நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டே நாடகத்தை வேகமாக நகர்த்திப்போகும் வசனங்கள் நாடகாசிரியரின் எழுத்தாற்றலுக்கு நல்ல சான்று.

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள் - சி.பி.சரவணன்

விலை: ரூ.170

வி கேன் புக்ஸ், சென்னை-600011

செல்: 9003267399

தமிழகத்தில் கோடை வெப்பத்தைவிட அனலெனத் தகிக்கும் பிரச்சினை ஒன்று உண்டென்றால் அது காவிரி தொடர்பானதே. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காட்டிவரும் மெத்தனமும், உரிமைகளைப் போராடிப் பெற வேண்டிய தமிழக அரசின் மெளனமான இருப்பும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பெரும் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. காவிரி ஒப்பந்தம் தொடர்பாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப் பாதுகாப்புகள் குறித்து மிக விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

தொகுப்பு: மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x