

சங்க இலக்கியத்தில் தோராயமாக 2,381 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடிய புலவர்கள் 473 பேர். இதில் 102 புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. புலவர்களின் வரலாற்றை ‘புலவர் புராணம்’ என்கிற பெயரில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார். 72 இயல்களில் 3,005 பாடல்களைக் கொண்ட நூல் இது.
தண்டபாணி சுவாமிகள் நெல்லையில் இருந்தபோது பாடத் தொடங்கி, நீண்ட நாள்கள் கழித்து திருவாமாத்தூரில் பாடி முடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘புலவர் புராணம்’, அவர் மறைவிற்குப் பின்னரே பதிப்பிக்கப்பட்டது. வி.கிருஷ்ணமாசாரியார் 1901இல் இந்நூலின் முதல் பதிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய வரலாறு கற்பிக்கும் நோக்கத்துடன் இந்நூலின் முதற்பதிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பிறகு, 1908இல் தண்டபாணி சுவாமிகளின் மகன் செந்தினாயகம் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரே 1931இல் அடிக்குறிப்புகளுடன் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளார். நான்காம் பதிப்பாக 1944இல் ஆர்.கிருஷ்ணன் அருஞ்சொற்பொருள் விளக்கம் தந்து பதிப்பித்தார். நான்கு பதிப்புகளைக் கண்ட இந்நூல், தற்போது முதன்முதலாக உரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சு.வேங்கடராமன் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இந்நூலுக்கு ஆராய்ச்சியுரை எழுதியுள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் அ.சதீஷ் இந்நூலின் மூலச்சுவடியை ஆராய்ந்து செம்மைப்படுத்தியுள்ளார்.
செம்மையான மூலமும் சிறந்த உரையுமாக இந்நூல் தற்போது பதிப்பிக்கப்பட்டுள்ளது. உரையின் துணையுடன் அனைவரும் படிக்கும் வகையில் இப்புதிய பதிப்பு அமைந்துள்ளது. தமிழில் பெரிய அளவில் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இல்லாத காலத்தில், சுந்தரர் பாடிய ‘திருத்தொண்டர் தொகை’, நம்பியாண்டார் நம்பி பாடிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’, சேக்கிழார் பாடிய ‘திருத்தொண்டர் புராணம்’ ஆகிய நூல்கள்தான் புலவர்களின்/சைவ அடியார்களின் வரலாற்றைக் கூறும் முதன்மை நூல்கள்.
புலவர்களின் வரலாறுகள் தனிப்பாடல்களில் ஆங்காங்கே காணப்பட்டன. எனினும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்து இலக்கிய வரலாறாகக் கொண்டுவரும் முயற்சி ஐரோப்பியர் காலம் வரை தமிழில் நடைபெறவில்லை.
ஆங்கிலப் பேராசிரியரான மு.சி.பூர்ணலிங்கனார் 1904இல் முதன்முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார்; தமிழில் 1930இல் கா.சுப்பிரமணியனார் இலக்கிய வரலாற்றினை எழுதினார். இவற்றிற்கு முன்னர் இலக்கிய வரலாறு என்பது புலவர் வரலாறாகவே கருதப்பட்டது.
19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாற்றில் புலவர்களின் வரலாற்றினை அறிய உதவும் நூல்களில் தவிர்க்க முடியாதது ‘புலவர் புராணம்’. இலக்கிய வரலாறு, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வரலாறாகவும் இந்நூல் விளங்குகிறது. இந்நூல் முந்துநூல் மரபுகளையும் வாய்மொழி மரபுகளையும் ஆதாரமாகக்கொண்டு இயற்றப்பட்டிருக்கிறது.
தண்டபாணி சுவாமிகள் தான் சென்ற இடங்களில் கேள்விப்பட்ட புலவர்களின் வரலாற்றைத் தேடிச் சேகரித்து இந்நூலை உருவாக்கியிருக்கிறார். அதே நேரத்தில் அவரது சமகாலப் புலவர்களின் வரலாற்றையும் இந்நூலில் பதிவுசெய்கிறார். தமிழ் மரபில் வாய்மொழிக் கதைகள் வரலாற்றைக் கவிதைகளில் கள ஆய்வுசெய்து, தரவுகளைத் திரட்டி நூல் பாடும் முறை பழமையானது. இம்முறையையே தண்டபாணி சுவாமிகளும் பின்பற்றியுள்ளார்.
தாம் கேட்ட கதை, பாடல்களில் நம்பகத்தன்மை உள்ளதை மட்டும் பதிவுசெய்துள்ளார். நூல் முழுவதிலும் பல இடங்களில் ‘நான் கேட்டது; கிடைத்தது இவ்வளவுதான்; விரிவாகப் பாட எனக்கு விருப்பம் இருந்தாலும் கிடைத்தது இவ்வளவே’ எனக் கூறுவதன் வழி இதனை அறியலாம். இந்நூலில் தெய்வ அருள், புலமைத்திறன் ஆகிய இரண்டு நிலைகளில் புலவர்களின் வரலாற்றினை விவரிக்கிறார் தண்டபாணி சுவாமிகள்.
இறுதி இரண்டு இயல்களில் அறிவுத்தன்மை மட்டும் உடைய புலவர்களின் வரலாற்றைக் கூறியுள்ளார். 72 இயல்கள் இருப்பினும் எண்ணிக்கை அடிப்படையில் பல புலவர்களின் வரலாறு பதிவாகியுள்ளது. சான்றாக, அகத்தியரில் தொல்காப்பியரும், பெரியாழ்வாரில் ஆண்டாளும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளனர்.
புலவர் வரலாறு, ஆதரித்த புரவலர், தொடர்புடைய புலவர், அக்காலச் சமூகச் சூழல், புலவரின் படைப்புகள், அவை உருவான சூழல் என முழுமையான அமைப்பை நூல் கொண்டுள்ளது. ‘புலவர்கள் மனிதகுல நன்மைக்கு உயர்ந்த அறங்களைக் கூறுபவர்கள்.
தமிழுக்கு மேன்மையான படைப்புகளைத் தருபவர்கள். அரசன், வள்ளல், ஜமீன்தார் யாராயினும் புலவர்களைவிட தாழ்ந்தவர்கள்’ எனும் கருத்தினை தண்டபாணி சுவாமிகள் முன்வைக்கிறார். சைவ, வைணவ, இஸ்லாமியப் புலவர்களைக் குறிப்பிடும் சமயப் பொதுவுடைமை நூலாக இருப்பினும் கிறித்துவப் புலவர் பற்றிப் பாடல் இடம்பெறாதது கவனிக்கத்தக்கது. புலவர்களின் புதிய நூல்கள், பாடல்கள் பலவற்றைக் கொண்டமைந்த இந்நூலைச் சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றைக் கூறும் ஆவணமாகவும் கருதலாம்.
புலவர் புராணம்
தண்டபாணி சுவாமிகள்
உரை: சு.வேங்கடராமன்
தாமரை பிரதர்ஸ் (பி) லிமிடெட்
விலை: ரூ. 1,500
தொடர்புக்கு: 75500 09565
- தொடர்புக்கு: logapriya885@gmail.com