

எளிய மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் களப்பணியாளர்களுக்கு முறையான தகவல் என்பது வெறும் செய்தி அல்ல; அது ஒரு சக்தி! பேராசிரியர் க.பழனித்துரை, உள்ளூர் அரசாங்கங்களான கிராமப் பஞ்சாயத்துகளில் அதன் நிர்வாகம் முறையாகச் செயல்படுவதற்கு என்னென்ன தகவல்கள் தேவையோ, அவை அனைத்தையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்து வழங்கியுள்ளார்.
கூடுதலாக அரசுத் துறையோடும், குடிமைச் சமூகத்தோடும், பொதுமக்களோடும், வல்லுநர்களோடும், அறிஞர்களோடும் இணைந்து பணியாற்றிய பேராசிரியரின் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்திலிருந்து உள்ளூர் சமூக, நிர்வாகப் பிரச்சினைகளுக்குச் சட்டம் தாண்டிய நம் அணுகுமுறை சார்ந்த சிந்தனைகள் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.
இத்தகவல்கள் ஒரு கொடை! மக்களை அதிகாரப்படுத்துதல், கிராம மேம்பாட்டில் மக்கள், நீர்ப் பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்டுரைகளில் மக்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளார். உண்மையில், ஜனநாயகத்தைப் புரிந்துகொள்வதற்கும் இந்தியச் சூழலில் உள்ளூர் நிர்வாகத்தைப் புரிந்துகொண்டு இயங்குவதற்கும் இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம்.
இவை எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டுவதுபோல் எங்களைப் போன்ற களப்பணியாளர்களுக்குத் தூண்டுகோலாக அமைந்த ‘அதிகாரப் பரவலின் அடிப்படைகள்’ என்கிற பேராசிரியரின் தொகுப்புக் கட்டுரை, நாம் ஏன் உள்ளூர் அமைப்புகளை - மக்கள் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலையும் இயங்குவதற்கான வழியையும் காட்டுகிறது. - நந்தகுமார் சிவா
கிராம ஊராட்சி அரசாங்கம்
க.பழனித்துரை
அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ. 450
தொடர்புக்கு: 9444772686
இலக்கியம்போல் ஒரு வாழ்க்கை: வால்பாறை அருகே ஒரு குடியிருப்பில் மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம் வீட்டு உதவியாளராக இருந்தவர் துரைசாமி. தோட்ட வேலையில் தேர்ச்சி பெற்றவர். தான் உண்டு; செடிகள் உண்டு என்றே வாழ்பவர். அவருக்கு பெங்களூரில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. சீக்கிரமே அரசு ஊழியர் ஆகும் சாத்தியமும் இருக்கிறது. ஆர்வத்துடன் புறப்பட்டுச் சென்ற துரைசாமி, சில நாள்களிலேயே ஊருக்குத் திரும்பிவிட்டார்.
“அங்கே என்னால் இருக்க முடியலை. எங்களை அப்படியே விட்டுட்டுப் போயிட்டியேன்னு இந்தப் பூச்செடில்லாம் என் கனவுல வந்து அழுதுச்சு” எனக் கண் கலங்கிய துரைசாமியைப் புதிராகப் பார்க்கிறது அக்குடியிருப்பு. இப்படி ஒரு சிறுகதைக்கான அடர்த்தியைக் கொண்ட பல நிகழ்வுகள் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் பணிபுரிந்து முடித்து, கதை, கவிதை என எழுதி வரும் பா.சேதுமாதவனின் தன்வாழ்க்கைக் குறிப்புகளின் தொகுப்பு இது. - ஆனந்தன் செல்லையா
சிறகிருந்த காலம்
பா.சேதுமாதவன்
உலா பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 94438 15933
சாதியின் பெயரால்: இளங்கோவன் ராஜசேகரன் எழுதிய ‘சாதியின் பெயரால்’ நூல் தேசத்தில் நடக்கும் சாதியக் கொடூரங்களை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. நம் சாதியமும் அரசியலும் எப்படிப் பின்னப்பட்டு, நாட்டின் சமத்துவம் துவம்சம் செய்யப்படுகிறது என்பதைத் தரவுகளுடனும் துணிவுடனும் இளங்கோவன் ஆராய்ந்துள்ளார்.
பட்டியல் சாதி மக்கள் மீதான வன்மங்களையும் ஆதிக்க உணர்வையும், அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு இயந்திரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, காவல் துறையின் கொடூரங்களையும் அப்பட்டமாக ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்துள்ளார். இந்திய மக்களின் மறதிதான், அரசியல்வாதிகளின் சுகபோக வாழ்க்கைக்கு மூலதனம் என்பதை இந்த நூல்வழி நூலாசிரியர் சொல்கிறார்.
தமிழ்நாட்டில் தீண்டாமைச் சூழல் மாறவில்லை. நம் அரசியலுக்கு இது ஒரு இழுக்கு என்பதை நம் அரசியல் கட்சிகள் பெரிதுபடுத்துவதில்லை. சமூக, அரசியல், ஆளுகை, நிர்வாகம், காவல் துறை ஆகிய அனைத்திலும் உள்ள அவலங்களை, கௌசல்யா – சங்கர், திவ்யா – இளவரசன், கண்ணகி – முருகேசன், சுவாதி – கோகுல்ராஜ், மீனா – ஹரிகரன், ஸ்வாதி – நந்தீஷ், ஜோதி – சோலைராஜ் ஆகிய நிகழ்வுகளின் பின்னணியில் துணிவாக எழுதியுள்ளார்.
இந்த ஆணவக் கொலைகளை விசாரிக்கும் பணியில் இருக்கும் காவல் துறையில் இருக்கும் ஆணாதிக்கத்தையும் சாதிய ஆதிக்கத்தையும் இந்த நூலில் ஆசிரியர் கோடிட்டுக் காட்டியது சிறப்பு. இந்த நூலை உள்வாங்கிப் படிக்கும்போது அந்த வலியை நம்மால் உணர முடிகிறது; குற்ற உணர்வும் மேலோங்குகிறது. இந்த நூலை நம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக் கருத்தாளர்கள் படிக்க வேண்டும். - க.பழனித்துரை
சாதியின் பெயரால்
இளங்கோவன் ராஜசேகரன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 260
தொடர்புக்கு: 044-42009603
சிற்றிதழ் அறிமுகம் | ஜனநாயக உரிமைக் குரல்: இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நடத்திவரும் போரை சர்வதேச அரசியல் பின்னணியில் இந்த இதழில் ஆசிரியர் பக்கம் ஆராய்ந்துள்ளது. ‘ஆழ்நிலை அரசு’ (Deep state) என்கிற பதத்தைக் கருத்துரீதியில் பொன்.சந்திரனின் கட்டுரை அலசுகிறது.
டொனால்ட் ட்ரம்ப், தனது அரசாங்கத்தின் சட்டரீதியான செயல்பாடுகளை மறைமுகமாகச் சீர்கெடுக்கும் அமைப்பு என உண்மையில் குறிப்பிட்டது ‘ஆழ்நிலை அர’சைத்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்குப் பின்னால், ஒரு முறையான வெளிப்படைத்தன்மையற்ற, சுயநலம் மிக்க ஓர் அமைப்பு என அதன் இந்தியத் தன்மையையும் முன்வைத்து இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழுவின் (CPDR-TN) செயலாளர் எஸ்.கோபாலின் ஆங்கிலப் பதிவு, அந்த அமைப்பின் செயல்பாடுகளைக் குறித்துப் பேசுகிறது. ஆவடி பாதுகாப்புப் படையினருக்கான ஆடை தயாரிப்புத் தொழிற்சாலையில் கழிவு அகற்றும் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தின் உண்மையைக்கண்டறிய இந்தக் குழுவினர் நடத்திய ஆய்வு பற்றியும் விரிவாகப் பேசுகிறது. ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழுவின் இதழான இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நாட்டின் சமகாலப் பிரச்சினைகளை ஜனநாயக உரிமைகள் என்கிற விரிவான தளத்தில் வைத்துப் பேசுகின்றன. - விபின்
மக்கள் உரிமை
காலாண்டிதழ்
விலை: ரூ.30
தொடர்புக்கு: 81223 00924