நிர்வாக நூல்களுக்கான அறிமுகம்

நிர்வாக நூல்களுக்கான அறிமுகம்
Updated on
3 min read

வணிகம், மேலாண்மை, நிர்வாகம் தொடர்பான பிரபல ஆங்கில நூல்களுக்கு சுப.மீனாட்சிசுந்தரம் மதிப்புரைகளை எழுதியுள்ளார். இவை ‘இந்து தமிழ் திசை’ உள்படப் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.

இதில் 30 நூல்களின் மதிப்புரைக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வடா பாவ், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட தின்பண்டங்கள் தொடங்கி விமானம், கப்பல் போன்ற செல்வந்தர்களுக்கான வாகனங்கள் வரை பல்வேறு பொருள்கள், சேவைகள் வழங்கும் நிறுவனங்களைத் தொடங்கி அந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த தொழிலதிபர்களின் வெற்றிக் கதைகளைப் பேசும் நூல்கள் குறித்த சுவாரசியமான அறிமுகங்களாக இந்த நூல் மதிப்புரைகள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்குப் புலம்பெயர்ந்து வடா பாவ் என்னும் தின்பண்ட விற்பனையின் மூலம் வெற்றிபெற்ற வெங்கடேஷ் ஸ்ரீநிவாசனின் சுயசரிதையான ‘My Journey with Vada Pav’, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஆர்.ஜி.சந்திரமோகன், அருண் ஐஸ்கிரீம் விற்பனையைத் தொடங்கி, அதைப் பெருநிறுவனமாக மாற்றிய கதையை விவரிக்கும் ‘Broke to Breakthrough’ போன்ற நூல்களின் அறிமுகங்கள் இளைஞர்களுக்கும் எளிய பின்னணியில்இருந்து முன்னேற முயல்பவர்களுக்கும் உத்வேகம் அளிப்பவை. சுயதொழில் தொடங்கி முன்னேற விரும்புகிறவர்கள், நிறுவனங்களில் நிர்வாக, மேலாண்மைப் பொறுப்பில் இருப்பவர்கள், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய நூல் இது. - கோபால்

பிஸினஸ் லைப்ரரி
சுப.மீனாட்சிசுந்தரம்தமிழ் பிசினஸ் நியூஸ் மீடியா
விலை: ரூ.200
தொடர்புக்கு: 99449 76499

வாழ்க்கையைப் பேசும் கதைகள்: கிராமமும் விவசாயமும் சேர்ந்த வாழ்க்கையை, எதிர்பாராத திருப்பங்களோடு சொல்கிறார் அய்யனார் ஈடாடி. ‘மூதூர்க் காதை’ எனும் இந்தத் தொகுப்பில் உள்ள 14 கதைகளில் ‘தூண்டில்’ கதையின் முடிவு நெஞ்சை அழுத்துகிறது. ‘நொண்டி வாத்து’, ‘முடம்’ போன்ற கதைகளும் எதிர்பாராத முடிவுகளைத்தான் தந்திருக்கின்றன. வட்டார வழக்கு பலம் என்றாலும், பல சொற்களுக்குப் பொருள் தெரியாதது குறையே. கதைகள் முழுவதுமாகப் பேச்சு வழக்கில் எழுதுவதைத் தவிர்த்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும். - எஸ்.சுஜாதா

மூதூர்க் காதை
அய்யனார் ஈடாடி
யாப்பு வெளியீடு
விலை: ரூ. 90
தொடர்புக்கு: 90805 14506

காதல், இயற்கை, கவிதை: தாகூரின் மின்மினிகள் தமிழில் வந்திருக்கின்றன. உலகக் கவியாக அறியப்பட்ட தாகூர், சீனாவிலும் ஜப்பானிலும் தங்கியிருந்த காலக்கட்டங்களில் அங்கிருக்கும் கவிதைத் தன்மையில் கவரப்பட்டு, அதைப் போல் எழுதிப்பார்த்த கவிதைகள் இவை. வடிவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும் கவிதைகள் கடத்தும் உணர்வுகள் பல.

பெரும்பாலும் இயற்கையும் அதன் அழகியலும் அதில் தன் கவிதைகளைக் கண்டெடுக்கும் தாகூரின் கவி ஆளுமையும் இக்கவிதைகளில் வெளிப்படுகின்றன. காதல், ஆன்மிகம், தெறிப்புகளாக அரசியல் என்று தாகூர் இக்கவிதைகளில் தன்னைக் காட்டுகிறார்.

பல தற்குறிப்புகள் மிகவும் சுவையானவை. காலத்தின் மீதான அதீத நம்பிக்கையும் அது நிகழ்த்துகின்ற மாற்றங்களின் தேர்வுகளும் இக்கவிதைகளை உருவாக்கியிருக்கின்றன. தமிழில் இக்கவிதைகளை ரமீஸ் பிலாலி மொழிபெயர்த்திருக்கிறார். கவிக்கோ அப்துல் ரகுமானைத் தன் கவியாசிரியராகக் கொண்ட இவரின் மொழிபெயர்ப்பு, நவீனத்தன்மையுடையதாக நல் வாசக அனுபவத்தைத் தருகிறது. - யாழன் ஆதி

தாகூரின் மின்மினிகள்
தமிழில்: ரமீஸ் பிலாலி
சீர்மை வெளியீடு
விலை: ரூ. 400
தொடர்புக்கு: 8072123326

நம் வெளியீடு | தமிழ் அறிவுப் புத்தகம்: பள்ளி, கல்லூரி மாணவர், வேலை தேடும் இளைஞர், நடுத்தர வயதினர், பணி ஓய்வு பெற்றோர், ஊடகத் துறையில் பணிபுரிவோர் உள்படப் பல நிலைகளில் இருப்போரின் பற்றாக்குறை அறிந்து அவர்களுக்குச் சுமையாகாத விதத்தில் இந்நூலில் இலக்கணப் பாடம் நடத்தியிருக்கிறார் முத்துநிலவன்.

மரபை மறவாதிருக்கவும் புதுமையை வெறுக்காதிருக்கும் வகையிலும் தமிழ் அறிவை ஊட்டும் ‘தமிழ் இனிது’, புத்தாயிரத் தலைமுறையினருக்குத் தமிழின் அழகையும் ஆற்றலையும் உணர்த்தும் என உறுதியாக முன்மொழியலாம்.

தமிழ் இனிது
நா.முத்துநிலவன்
இந்து தமிழ் திசைப் பதிப்பகம்
விலை: ரூ.160 தொடர்புக்கு:
74012 96562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications

திண்ணை | தஞ்சை புத்தகத் திருவிழா: மாவட்ட நிர்வாகமும் பொது நூலக இயக்கமும் இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா தஞ்சை அரண்மனை வளாகத்தில் நேற்று (19.07.24) தொடங்கியுள்ளது. இம்மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகமும் இந்தப் புத்தகக் காட்சியில் அரங்கு (ஸ்டால் எண்: 76) அமைத்துள்ளது. இதில் இந்து தமிழ் திசை வெளியீடுகள் கிடைக்கும்.

மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகள்: கோவை விஜயா பதிப்பகம், மறைந்த தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியம் நினைவாக வழங்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் ஆர்.சிவகுமாருக்கும் அலமேலு மங்கைக்கும் இந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் வழி உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளவர் ஆர்.சிவகுமார். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இவருடைய ‘தருநிழல்’ என்கிற நாவல் வெளியாகியுள்ளது. இந்தி, சம்ஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளுக்குத் தமிழ்ப் படைப்புகளைப் பெயர்த்துவருபவர் அலமேலு மங்கை. இவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பாரதியார், மாலன் ஆகியோரின் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். இந்த விருது தலா ரூ.50,000 ரொக்கத் தொகையையும் கேடயத்தையும் உள்ளடக்கியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in