Published : 12 May 2018 08:52 AM
Last Updated : 12 May 2018 08:52 AM

தொடு கறி: ஹெங்க் ஒச்சப்பனின் புகைப்பட ஓவியங்கள்!

அயல்தேசத்திலிருந்து முதன்முறை 1987-ல் தமிழகம் வந்த ஹெங்க், அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் நம் ஊருக்கு வந்துசெல்கிறார். தமிழ் மக்களின் உயிரோட்டமான வாழ்வியலைப் புகைப்படங்களாக மாற்றுவது இவரது பொழுதுபோக்கு. தான் சந்தித்த விவசாயி ஒச்சப்பனின் பெயரைத் தன்னோடு இணைத்துக்கொண்டுள்ளார். தமிழர்களின் அன்றாட வாழ்வியலையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் இவரது அற்புதமான புகைப்படங்கள் நமக்கான மகத்தான ஆவணம்! ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/oochappan

தொல்லியல் அறிஞர்களுக்கு விருது

பெண்ணையாறு தொல்லியல் சங்கத்தை நிறுவிய சுகவன முருகன் (புது எழுத்து மனோன்மணி) இலக்கியம் மட்டுமல்லாது வரலாற்றிலும் தன்னை முன்னிறுத்திக்கொண்டவர். அவருக்கும், நாமகிரிப்பேட்டை துரைசாமி, க.குழந்தைவேலன், சி.வீரராகவன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்திருக்கிறது சேலம் வரலாற்று ஆய்வு மையம். விருது வழங்கும் விழாவும், இரண்டாமாண்டு வரலாற்று கருத்தரங்கமும் மே 13 அன்று சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது

தமிழில் கசார்களின் அகராதி!

ஆங்கிலம் அறியா தமிழ் வாசகர்களை ஏக்கம்கொள்ளவைக்கும் அளவுக்கு மிலோராத் பாவிச்சின் ‘கசார்களின் அகராதி’ நாவல் இங்கே மிகப் பெருமளவில் விதந்தோதப்பட்டிருக்கிறது. இதற்கான மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கியிருக்கிறது ‘எதிர்’ பதிப்பகம். ஸ்ரீதர் ரங்கராஜ் மொழிபெயர்ப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக அனுஷ் அறிவித்திருக்கிறார். கொண்டாட்டத்திற்காகக் காத்திருங்கள் வாசகர்களே!

ஆண்டு முழுவதும் மார்க்ஸ் சிறப்பிதழ்!

கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாட்டங்களும் கார்ல் மார்க்ஸ் குறித்த உரையாடல்களும் நிகழ்கின்றன. ‘உயிர் எழுத்து’ சிற்றிதழும் மார்க்ஸின் பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது. இந்த மே தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கார்ல் மார்க்ஸ் சிறப்பிதழாக உயிர் எழுத்து வரவிருக்கிறது. அறிஞர்களும், படைப்பாளிகளும், வாசகர்களும் கார்ல் மார்க்ஸ் குறித்த படைப்புகளை உயிர் எழுத்துக்கு அனுப்பலாம். கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் சமூகத்துக்கு இன்றும் தேவைப்படுகிறது. என்றும் தேவைப்படும்!

படைப்பாளிகளுக்குப் பரிசு

கடந்த 46 ஆண்டுகளாக ‘கவிதை உறவு’ எனும் சிற்றிதழைத் தொடர்ந்து நடத்திவரும் ஏர்வாடி இராதாகிருஷ்ணன், 15 ஆண்டுகளாகத் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்கிவருகிறார். 2017-ம் ஆண்டுகளில் வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசுகளைக் கவிஞர் புவியரசு (கவிதை), செம்பை முருகானந்தம் (சிறுகதை), முனைவர் சி.சித்ரா (இலக்கியக் கட்டுரைகள்), நெல்லை சு.முத்து (பொதுக்கட்டுரைகள்), லட்சுமி பிரபா (குறுநாவல்), மு.முருகேஷ் (மனிதநேயம்/வாழ்வியல்) உள்ளிட்டோர் பெறுகின்றனர். பரிசளிப்பு விழா மே 18 அன்று மாலை தி.நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெறுகிறது. படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்!

தொகுப்பு: மு.முருகேஷ், த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x