Published : 25 May 2018 08:43 am

Updated : 25 May 2018 08:43 am

 

Published : 25 May 2018 08:43 AM
Last Updated : 25 May 2018 08:43 AM

சத்தமின்றி சாதனை படைக்கும் இயக்குநர்; எஸ்.பி.காந்தனுக்கு ‘நாடக சூடாமணி’ விருது- சென்னை கிருஷ்ண கான சபா வழங்கியது

நா

டகம், ஆவணப்படம், குறும் படம், இசைத் தொகுப்பு, விளம்பரப்படம் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் எஸ்.பி.காந்தனுக்கு ‘நாடக சூடாமணி’ விருதை வழங்கி கவுரவித்திருக்கிறது சென்னை கிருஷ்ண கான சபா.

ஹரி கதாகாலட்சேபம் செய்வதில் தன்னிகரற்றவர் டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள். அவரது மகன் எஸ்.பி.காந்தன். இவர் நாடக மேடையிலும், திரையிலும் தனி முத்திரை பதித்து மௌலியின் சகோதரர். தொடர்ந்து கிரேஸி மோகன் நாடகங்களை இயக்கி வருபவர். தான் இயக்கும் நாடகங்களுக்கு இசையமைக்கவும் செய்வார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் விஷுவல் கம்யூனிகேஷன் நுட்பங்களைத் தெரிந்துகொண்டவர். சார்ட்டட் அக்கவுன்டன்ட் (சி.ஏ.) படித்தவர். விளம்பர வெளிச்சம் தன் மீது விழாமலேயே பல சாதனைகளை சத்தமின்றி செய்தவர், செய்துவருபவர் எஸ்.பி.காந்தன்.

‘‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக் கும் என்பதுபோல, ‘நாடகம்’ என்ற நான்கெழுத்தில்தான் என் மூச்சு இருக்கிறது’’ என்று கூறும் காந்தன், நாடகத் துறையில் தனது பங்களிப்பு குறித்தும், தன் முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் குடும்பத்தினர் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘மனைவி லதா கேரியர் பிளானராக இருக்கிறார். மகள் த்விஜாவந்தி பரத், பத்மா சுப்ரமணியத்திடம் நாட்டியம் பயின்றவர். கிராஃபிக்ஸ் நிபுணராகவும் இருக்கிறார்.

என் வளர்ச்சியில் இவர்களது பங்கு முக்கியமானது. நாடகத் துறை யில் என் பணிகளைப் பாராட்டி, ‘நாடக சூடாமணி’ விருதை கிருஷ்ண கான சபா எனக்கு வழங்கியிருப்பதை பெரும் கவுரவமாக, பெருமையாகக் கருதுகிறேன்’’ என்றார்.

உலகமே நாடக மேடை

எஸ்.பி.காந்தன், தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் 6,500 நாடக நிகழ்ச்சிகளை நடத்தியவர். அது மட்டுமின்றி, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், துபாய், மஸ்கட், ஹாங்காங் என உலகம் முழுவதும் பல்வேறு நாடகங்களை நடத்தியுள்ளார். இவரது இயக்கத்தில் ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் 1,000-வது முறையாக விரைவில் அரங்கேற இருக்கிறது. கிரேஸி மோகன் எழுதிய ‘ஜெர்ரி’ திரைப்படத்தின் இயக்குநரும் இவர்தான்.

ஆவணமாகிய இசைவாணர்கள்

பிரபல கலைஞர்களான ஜிஎன்பி, பழநி சுப்பிரமணிய பிள்ளை, பாலக் காடு மணி அய்யர், டி.பிருந்தா, ‘ராம்நாட்’ கிருஷ்ணன், தஞ்சாவூர் எஸ்.கல்யாணராமன், எஸ்.ராஜம், ஏ.கன்யாகுமாரி ஆகியோர் பற்றிய ஆவணப்படங்களை எடுத்துள்ளார்.

பிரபல கலைஞர்களான உமையாள்புரம் சிவராமன், டி.எம்.கிருஷ்ணா, ‘சித்ரவீணை’ ரவிகிரண் ஆகியோரது புகழ்பெற்ற இசைத் தயாரிப்புகளை இயக்கியுள்ளார்.

குறும்படத்தில் பெரிய கருத்துகள்

மகா பெரியவர், திருமதி ஒய்ஜிபி, நீதியரசர் கே.பராசரன் உள்ளிட்டோரைப் பற்றியும், பல அமைப்புகள் குறித்தும் ஏராளமான ஆவணப்படங்களை எடுத்துள்ளார். இவரது முதல் தொலைக்காட்சித் தொடரான ‘ஹியர் ஈஸ் கிரேஸி’, தூர்தர்ஷனில் 13 வாரங்களுக்கு ஒளிபரப்பானது.

ஆஸ்துமா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘ஒரு பூங்காற்று புதிதானது’ என்ற குறும்படம், பெற்றோரிடம் குழந்தை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்

‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்’ குறும்படம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் எண்ணத்தை வளர்க்கும் படம், பெண்களிடம் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல குறும்படங்களையும் காந்தன் இயக்கியுள்ளார்.

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் ‘பௌர்ணமி’, ‘ஒரு கூடை பாசம்’ ஆகிய நாடகங்களின் டிவிடி வடிவத்தை இயக்கியவர் இவர்தான். இயக்குநர் வசந்த் தயாரித்த ‘சாரு-லதா’ தொடரையும் எழுதி இயக்கினார். அமெரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கு நமது புராண கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘பாண்டவாஸ் தி 5 வாரியர்ஸ்’ என்ற 3டி அனிமேஷன் படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author