

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவை ஒட்டி வழங்கப்படும் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாழ்நாள் சாதனையாளர் விருது மானிடவியலாளர், பேராசிரியர் பக்தவத்சல பாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் அவ்வளவு புழக்கம் இல்லாத மானிடவியல் துறையை உயிர்ப்பித்த அறிஞர் என பக்தவத்சல பாரதியை முன்னிறுத்தலாம். ‘பண்பாட்டு மானிடவியல்’ நூல் வழி தன் ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்தவர். ‘தமிழர் மானிடவியல்’, ‘தமிழகப் பழங்குடிகள்’, ‘பாணர் இனவரைவியல்’, ‘இன்றைய தமிழ்ச் சமூகம்’ உள்ளிட்ட பல நூல்கள் இவரது தமிழ்க் கொடை. இந்த விருது ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும் பாராட்டுப் பத்திரமும் உள்ளடக்கியது. சிறந்த கவிதை நூலுக்கான விருது ‘நின் நெஞ்சு நேர்பவள்’ என்கிற தொகுப்புக்காகக் கவிஞர் இரா.பூபாலனுக்கும் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது ‘கால தாமதமாக வந்துகொண்டிருக்கிறது’ என்கிற தொகுப்புக்காக எழுத்தாளர் நா.கோகிலனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு விருதுகளும் தலா ரூ.25,000 ரொக்கப் பணமும் பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியவை.
புதுமைப்பித்தன் நாடகம்: எழுத்தாளர் புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதை ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’. இக்கதை நாடகமாக நிகழ்த்தப்பட உள்ளது. இன்று (14.07.24) மாலை 6 மணிக்கு சென்னை, பெசன்ட் நகர், ஸ்பேஸஸ் அரங்கில் இந்த நாடகம் நிகழ்த்தப்பட உள்ளது. தஞ்சாவூர், உதிரி நாடக நிலம் அமைப்பைச் சேர்ந்த விஜயகுமார் இதை இயக்குகிறார். நன்கொடைக் கட்டணம்: ரூ.200 (150 பேருக்கு மட்டுமே அனுமதி). தொடர்புக்கு: 95663 31195.