

எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘நித்திய கன்னி’, ‘வேள்வித்தீ’ ஆகிய நாவல்களை வாசித்துவிட்டு, அவரது சில சிறுகதைகளைப் படித்தபோது, அவற்றிற்கிடையே இருந்த மிகப்பெரிய இடைவெளி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ‘காதுகள்’ நாவல் சற்றுத் தாமதமாகத்தான் வாசித்தேன்.
ஆனால், அது அவரை மறுபரிசீலனை செய்ய வைத்தது. எம்.வி.வி-யின் முழுச் சிறுகதைகள், ‘மீ காய் கெரு’ உள்பட அவரது பல நூல்கள் ரவிசுப்பிரமணியனின் முயற்சியில் வெளிவந்துள்ளன. எம்.வி.வி-க்கும் ரவிசுப்பிரமணியனுக்குமான நட்பு பல வருடங்கள் முன்பு தொடங்கி, எம்.வி.வி. இறந்த பிறகும் தொடர்கிறது எனலாம். அந்த நட்பின் அடிப்படையில் ரவிசுப்பிரமணியன் எழுதியிருக்கும் நூல் இது.
எம்.வி.வி. போன்றவர்கள் முழு நேர எழுத்தாளராக இருந்து வறுமையையும் அவமானங்களையும் சந்தித்திருப்பார்கள். அவை எல்லாமும் இந்தத் தொகுப்பில் நிறைந்துகிடக்கிறது. ஜே.கே.ரௌலிங் சாப்பாட்டுக்கு வழியின்றி, கணவர் விவாகரத்து செய்த பின், ஒரு குழந்தையுடன் தவித்து, பின்பு ஒரே ஒரு புத்தகம் எழுதினார்.
அது அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இன்று உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் எழுத்தாளர் அவர். ஆனால், எம்.வி.வி. போன்ற தமிழ் எழுத்தாளர்களுக்குக் கனவில்கூட அது போன்ற சுபிட்சத்தைக் காண வாய்ப்பில்லாமலே இருந்திருக்கிறது.
முழு நேர எழுத்தாளராக இருப்பதுகூடத் தவறில்லை, தன்னை எப்படிச் சந்தைப்படுத்துவது என்று தெரியாமலிருப்பது துரதிர்ஷ்டமே. நன்றாக நடந்துகொண்டிருக்கும் வியாபாரத்தில் முழுக் கவனத்தைச் செலுத்த முடியாமல், சொந்தப் பத்திரிகை ஆசை ஏன் அவரைக் கட்டியிழுக்க வேண்டும்; லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், கதை எழுதி வரும் சில நூறுகளில் அகமகிழ்வது ஏன்? - கடமைக்காகச் சம்பாதிப்பதற்கும் காதலுக்காகச் சம்பாதிப்பதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்தான் அது. இது மற்றவர் பார்வையில் அசட்டுத்தனமாகத் தோன்றலாம்.
இன்று நாம் நின்று நிதானமாக, தருமன் எதற்காக சூதுக்கு ஒப்புக்கொண்டான் என்று கேட்கிறோமே அது போலத்தான். இவை போன்று பல எண்ணங்களை உண்டுபண்ணுகின்றன இந்தக் கட்டுரைகள்.
புத்தகத்தின் தலைப்புக் கட்டுரை மிக முக்கியமானது. எம்.வி.வி-யே பேசுவது போன்ற தொனியில், ரவி அதைக் கொண்டுவந்துள்ளார். எழுத்தாளர் தி.ஜானகிராமனை மட்டுமன்றி, அவரது துணைவியாரின் மற்றொரு பரிமாணமும் இந்தக் கட்டுரையில் வெளிப்பட்டுள்ளது.
அவர்கள் இருவர் மட்டுமல்ல, அப்பாவின் இலக்கிய நண்பரை மூன்று பிள்ளைகளும் தங்கள் வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்ள முகம் சுளிக்காததும் ஆச்சரியம்.
‘கலை விமர்சகனும் கதாசிரியனும்’ என்கிற கட்டுரையில், ‘எம்.வி.வி-யின் வங்கிக் கணக்கு கும்பகோணம் பெரிய தெரு ஸ்டேட் பேங்க் மெயின் பிராஞ்சில்தான் இருந்தது.
அங்குதான் பல ஆண்டுகள் தேனுகா வேலை பார்த்தார். எம்.வி.வி-யை நானோ, கலியமூர்த்தியோ, அவர் மகன்களில் ஒருவரோ வங்கிக்கு அழைத்துச் செல்லும்போது, கவுன்ட்டரில் இருக்கும் தேனுகா பணப் பெட்டியை மட்டும் பூட்டிவிட்டு, அவரது கவுன்ட்டரின் பின்பக்கக் கதவைக்கூடச் சாத்தாமல், போட்டது போட்டபடி அப்படியே ஓடிவருவார். கஸ்டமர் பெஞ்சில் அமர்ந்திருக்கும் எம்.வி.வி-யின் பக்கத்தில் பவ்யமாக அமர்ந்து சிறிது நேரம் பேசிய பிறகு, உடனே காப்பி, வடை என எல்லாம் அங்கேயே வரவழைப்பார்.
அவரையும் வந்தவர்களையும் உபசரித்து முடித்த பின், எம்.வி.வி-யின் செக், பாஸ் புக் எல்லாவற்றையும் வாங்கிச் சென்று, அவர் தொடர்பான பேங்க் வேலைகளை முடித்துக் கையில் தந்துவிட்டு, மறுபடி எம்.வி.வி-யோடு அமர்ந்து வெற்றிலை போட்டபடி பேச ஆரம்பிப்பார். “நீங்க கவுன்ட்டருக்குப் போங்க தேனுகா.
அங்க க்யூ நிக்குது” என்று எம்.வி.வி. சொன்னாலும் கேட்கமாட்டார். அதற்குள் அட்டெண்டர்கள் இவரிடம் கையெழுத்து வாங்க வருவார்கள். “போப்பா வரேன்” என்றபடி ஒரு அரை மணியாவது அவருக்காகச் செலவழித்துவிட்டுத்தான் போவார்’. இப்படிக் கலை விமர்சகர் தேனுகா, எம்.வி.வி-யை உபசரித்ததைப் பற்றிச் சொல்கிறார் ரவி.
இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் குறித்து இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ரவிசுப்பிரமணியனுக்கு வாழ்வின் மெல்லிய உணர்வுகளை வெகு நுட்பமாகக் கொண்டுவரத் தெரிகிறது. அது கவிதையாக இருந்தாலும் சரி, உரைநடையானாலும் சரி. இந்த நூலும் அதற்கு விதிவிலக்கல்ல.
- தொடர்புக்கு: sarakavivar@gmail.com