விடாது ஒலிக்கும் பேரொலி

விடாது ஒலிக்கும் பேரொலி
Updated on
4 min read

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களிலும் தொடர்ந்து எழுதிவரும் ரிஷான் ஷெரீப்பின் 50ஆவது நூலாக வெளிவந்துள்ளது ‘அம்மா’ நாவல். தனது அம்மா இறந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தினமும் கனவுவெளியில் அம்மாவோடு உரையாடிய எழுத்தாளர் எழுதியிருக்கும் இந்நாவலின் முதல் வரி, ‘அம்மா இன்று இப்படித்தான் மரித்துப் போயிருந்தாள்!’ என்பதாகத் தொடங்குவதிலிருந்தே நம்மையும் உள்ளிழுத்துக்கொள்கிறது.

எத்தனை வயதில் இறந்தாலும் பெற்றவளின் இழப்பு என்பது எதனாலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதானே. அதனை உணர்வுபூர்வமாக உள்வாங்கி, அந்த வலியின் குரலை ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுத்தியுள்ள விதத்தில் ஷெரீப்பின் எழுத்து, வாசிப்புக்கு மிக நெருக்கமாகிவிடுகிறது.

நினைவின் கரையோரங்களில் அழியாத பிம்பமாய் அம்மா இருக்கையில், அவளைப் பற்றிய அவதானிப்புகள் மெல்லமெல்ல மேலெழுந்து நம் கண்களையும் நனைக்கையில், அவரவர் அம்மாக்களை நினைவூட்டிப் போகிற ரசவாதத்தையும் இந்நாவல் நிகழ்த்திவிடுகிறது. எல்லோர் வாழ்விலும் விடாமல் கேட்கிற மரணத்தின் பேரொலியை எழுத்தாக்கி இருப்பதில் வெற்றியடைந்துள்ளார் எழுத்தாளர்.- மு.முருகேஷ்

அம்மா
எம்.ரிஷான் ஷெரீப்
வம்சி புக்ஸ்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 94458 70995

ஏஐயின் கதை: கூகுள் மேப், கூகுள் மொழிபெயர்ப்பு, வீட்டுக்கு உணவு வரவழைப்பதற்கான செயலி போன்றவை வழியே நாம் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாட்டை நுகரத் தொடங்கி விட்டோம். எதிர்காலத்தில் அலைபேசி, கணினி போன்ற கருவிகளையும் கடந்து, இன்னும் கூடுதலான தளங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனித குலத்துடன் உறவாட உள்ளது. மனிதனைப் போலவே சிந்திக்கும் திறனைக் கணினிக்கு அளிப்பதுதான் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை. அதைப் பற்றிய சுவாரஸ்யமான உரையாடலை இந்நூல் நிகழ்த்துகிறது.

செயற்கை நுண்ணறிவுக்கு வழிவகுத்த முந்தைய முயற்சிகள், அதில் ஏற்பட்ட சறுக்கல்கள், இறுதியில் அந்தத் தொழில்நுட்பத்துக்கு அறிஞர்கள் வந்தடைந்தது, இனியும் உள்ள சவால்கள் என ஒரு பயண விவரிப்புபோலச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. கணினி அறிவியல் சார்ந்த விளக்கங்களால் வாசகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடாத விதத்தில் எளிமையான நடையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவின் தந்தையாகக் குறிப்பிடப்படுபவர் கணிதவியலாளரான ஜான் மெக்கார்த்தி. இவர் 1956இல் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமான பனிப்போருக்கு இடையே ‘Artificial Intelligence’ என்கிற இதே பெயரில், மனிதச் சிந்தனை வாய்ந்த கணினியை உருவாக்க முனைந்த வரலாறு சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நூலின் ஆசிரியரான வினோத் ஆறுமுகம், இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பி வருபவர். ‘எந்திர அறிஞன்’ ஆன செயற்கை நுண்ணறிவின் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் உணர்ந்து செயல்பட்டால், மனித வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் பெருகும் என்கிற அவரது நம்பிக்கை கட்டுரைகளில் ஒலிக்கிறது. - ஆனந்தன் செல்லையா

எந்திர அறிஞன்
வினோத் ஆறுமுகம்
வி கேன் புக்ஸ்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 90032 67399

பாலர் நாடகக் குழுக்களின் கதை: நாடகக் கலை நலிவடைந்து காணப்பட்ட 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலக்கட்டங்களில் நாடகங்கள் சிறப்பாகவும் அதேவேளை தரமான கலைஞர்களைக் கொண்டும் இயக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒழுங்கும் கட்டுப்பாடுகளும் உருவாகின. இதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயன், ‘பாய்ஸ் கம்பெனி’களின் வரவு. இந்தப் பாலர் நாடக சபைகள், பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு நல்ல உணவு, உடற்பயிற்சி, நடிப்பு, இசை போன்ற பயிற்சிகளை அளித்துச் சிறந்த கலைஞர்களாக உருவாக்கின.

பக்கிரிசாமி என்பவரால் எம்.கந்தசாமிப் பிள்ளை என்பவரை நாடக ஆசிரியராகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’. பி.யு.சின்னப்பா, பாலையா, சக்கரபாணி, எம்ஜிஆர் போன்ற நட்சத்திரங்கள் பலர் இவரிடம் பயிற்சி பெற்றுத் திரைத் துறையில் சிறந்து விளங்கியவர்கள். இருபதாம் நூற்றாண்டு நாடகத் துறையின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

என்.எஸ்.கலைவாணரால் ‘யதார்த்தம்’ என்று அழைக்கப்பட்ட பொன்னுசாமிப் பிள்ளை, சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, தங்கவேலு, வி.கே.ராமசாமி, எம்.என்.ராஜம், காக்கா ராதாகிருஷ்ணன் போன்ற சிறந்த திரை நடிகர்களை உருவாக்கிய பெருமையும் இவரைச் சாரும். இது போன்ற பாய்ஸ் கம்பெனிகளில் (பாலர் நாடகக் குழுக்களில்) நடித்த நடிகர்களில் திரைத் துறைக்கு வந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் பலர்.

இன்றைய காலச் சூழலில் இந்திய மக்களின் மீது திரைத் துறையின் தாக்கம் என்பது அசுரத்தனமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல அற்புதமான திரைத் துறை நட்சத்திரங்களை வளர்த்தெடுத்த பாய்ஸ் கம்பெனி என்று அழைக்கப்பட்ட பாலர் நாடகக் குழுக்களையும் அதில் பங்குபெற்றுத் தத்தமது சிறப்பான பணிகளை ஆற்றிய நாடகக் கலைஞர்களையும் நினைவுபடுத்தி வரலாற்று ஆவணத்தை டி.வி.ராதாகிருஷ்ணன் தொகுத்துள்ளார். - சுனிதா கணேஷ்குமார்

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
டி.வி.ராதாகிருஷ்ணன்
நாதன் பதிப்பகம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 98840 60274

நம் வெளியீடு | திருநர்களும் சமூகமும்: ஒருவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுவதும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுவதும் நேற்று, இன்று நிகழ்ந்தவையல்ல. பரிணாம வளர்ச்சியில் மனித இனம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்பட்டது எவ்வளவு அறிவியல் பூர்வமானதோ அதைப் போன்றதுதான் திருநர் உடலில் நிகழும் மாற்றங்களும். தங்கள் அறிவுக்குப் புலப்படாத எதையுமே அச்சப்பட்டு ஒதுக்கிவைப்பது மனிதர்களின் இயல்பு.

ஆரம்பத்தில் திருநர் சமூகத்தையும் இந்த உலகம் அப்படித்தான் அணுகியது. பேய் பிடித்துவிட்டது என்றும் மனநலக் குறைபாடு என்றும் தவறாகப் புரிந்துகொண்டு பலர் வினையாற்றியிருக்கிறார்கள். தங்களது உடல் - உள மாறுதல்களை இந்தச் சமூகத்துக்குப் புரியவைக்க முடியாமல் அடையாளமின்றி அழிந்த திருநர்கள் ஏராளம்.

இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஆண் பால், பெண் பால் போலவே திருநர்களை மூன்றாம் பாலினமாக அரசு அங்கீகரித்துள்ளது. இப்படி திருநர் சமூகம் குறித்த பல்வேறு விஷயங்களைத் தெளிவுபட விளக்குகிறது இந்த நூல்.

திருநம்பியும் திருநங்கையும்
சுதா   
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 74012 96562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications

இந்து தமிழ் திசையின் இரு நூல்கள் வெளியீட்டு விழா: ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘திருநம்பியும் திருநங்கையும்’ புத்தக வெளியீட்டு விழா இன்று (13.07.24)காலை 11.30 மணி அளவில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ மெட்ராஸ் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் சுதா, சகோதரன் அமைப்பின் தலைவர் சுனில் மேனன், இந்து தமிழ் திசை நாளிதழின் உதவி செய்தி ஆசிரியர் பிருந்தா சீனிவாசன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., நடிகர் பொன்வண்ணன், டான்சாக்ஸைச் சேர்ந்த மருத்துவர் ஜானகிராம், ஒய்எம்சிஏ மெட்ராஸ் அமைப்பின் துணைத் தலைவர் ரவிகுமார் டேவிட், திரைப்பட இயக்குநர் பீனா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.

‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பெண்கள் ஆண்கள் குழந்தைகள்’ புத்தக வெளியீட்டு விழா இன்று (13.07.24) மாலை 6 மணி அளவில், சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் லதா, இந்து தமிழ் திசை நாளிதழின் உதவி செய்தி ஆசிரியர் பிருந்தா சீனிவாசன், சுவடு பதிப்பாளர் நல்லு ஆர்.லிங்கம், ஏஜியுஏ நிறுவனத் தலைவர் சுபா பாண்டியன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.

திண்ணை: இந்து தமிழ் திசை - கிரி டிரேடர்ஸ் புத்தகக் காட்சி: இந்து தமிழ் திசை பதிப்பகமும் கிரி டிரேடர்ஸும் இணைந்து சென்னையின் பல இடங்களில் சிறப்புப் புத்தகக் காட்சியை நடத்துகிறது. இதில் இந்து தமிழ் திசை வெளியிட்ட புத்தகங்கள் 10 சதவீதச் சலுகை விலையில் கிடைக்கும். மயிலாப்பூர், நங்கநல்லூர், ஆழ்வார் திருநகர், அண்ணா நகர், திருவான்மியூர், மேற்கு மாம்பலம், மேற்குத் தாம்பரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மேற்கண்ட இடங்களில் நடைபெறும் புத்தகக் காட்சி குறித்த விவரங்களுக்கு முறையே 9361515322, 7550221037, 7550221035, 7550221036, 7550221039, 7550221033, 7550221034, 9363494055 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

கோவை புத்தகத் திருவிழா: சென்னைக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாட்டில் நடத்தப்படும் பெரிய புத்தகக் காட்சி, ‘கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா’. கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகமும் கோவை மாவட்டச் சிறுதொழிலதிபர் சங்கமும் (கொடிசியா) இணைந்து நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி, வரும் 19ஆம் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்குகிறது.

இந்த மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகமும் இந்தப் புத்தகக் காட்சியில் அரங்கு (ஸ்டால் எண்: 32) அமைத்துள்ளது. இதில் இந்து தமிழ் திசை வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கும்.

நெய்வேலி புத்தகக் காட்சி: என்.எல்.சி. சார்பில் நடைபெற்றுவரும் நெய்வேலி புத்தகக் காட்சி ஜூலை 14 அன்று நிறைவடைகிறது. நெய்வேலி என்.எல்.சி. அரங்கில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில், ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகமும் அரங்கு (ஸ்டால் எண்: 126) அமைத்துள்ளது. இதில் இந்து தமிழ் திசை வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in