

ஸ்
திரீ என்னை வஞ்சித்தாள் என்கிறான் ஆதாம். ஏவாளோ சர்ப்பம் என்னை வஞ்சித்துவிட்டது என்கிறாள். மனிதர்களின் இச்சையைத் தீமை எனக் கருதினால் அதற்கான பழியை சர்ப்பத்தின் மீது ஏற்றுகிறது இக்கதை. சர்ப்பத்தை விடுவிக்கும் பொருட்டு மனித மனதினுள் இருக்கும் கயமைகளை வெளிக்கொணர்கிறார் சிவசங்கர். சர்ப்பத்தின் விடுதலை வழியே தலித்திய படைப்புகள் சார்ந்த புதிய தர்க்கத்தை உருவாக்குகிறார். துறவு செல்வதற்கு முந்தைய கணத்தில் சித்தார்த்தனின் நிலையைக் கதையாக்கும் இடங்களில் தனி மனித அடையாளம் சார்ந்த சிக்கல்கள் வேறுவேறு வடிவங்களில் பேசப்படுகின்றன. ஹெராக்ளிடஸின் கோட்பாடு, ஷேக்ஸ்பியரின் நாடகம், சொர்க்கம் என பெரும் கருத்தியல்களைத் தலித்திய பார்வையில் அணுகியிருப்பது நவீனமான தர்க்கத்துக்கு வழிவகுக்கிறது. ‘உண்டுகாட்டி’ கதையில் மன்னன் உண்பதற்கு முன் அவ்வுணவில் விஷம் கலந்திருக்கிறதா என்று சோதித்துப்பார்க்க நியமிக்கப்பட்டிருப்பவன் விளிம்புநிலை மனிதனாக இருக்கிறான். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவைச் சோதிப்பவராகவும், கப்பலில் மதுவைச் சோதிப்பவராகவும் அவனுக்கு அடுத்தடுத்த தலைமுறைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். தலைமுறை இடைவெளியில் தொழிலின் வடிவம் மாறுபடுகிறதே ஒழிய வாழ்வாதாரத்தில் அல்ல. கழிவிரக்கத்தைக் கடந்து புனைவு எனும் கட்டற்ற வெளியில் தலித் படைப்பாளிகள் தங்களின் கதைகளை முயல்வதே பின்-தலித்தியம் என்றும், தலித் இலக்கியத்தின் அடுத்த நகர்வு அதை நோக்கியதாக அமைய வேண்டும் என்றும் குரலெழுப்புகிறார் சிவசங்கர். மரபார்ந்த கருத்தியல்களையும், கதைசொல்லும் முறையையும், கதைக்கருவையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் சிவசங்கரின் கதைகள் பின்-தலித்திய புனைவுலகுக்கான முதற்புள்ளியாக அமையும்.