Last Updated : 12 May, 2018 08:54 AM

 

Published : 12 May 2018 08:54 AM
Last Updated : 12 May 2018 08:54 AM

குண்டுசட்டியில் குதிரை ஓட்டுகிறதா பபாசி?

நா

ட்டின் பெரிய புத்தகக்காட்சிகளில் ஒன்றாக ‘சென்னை புத்தகக்காட்சி’யை வளர்த்தெடுத்த பெருமை ‘பபாசி’ என்றழைக்கப்படும் ‘தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்க’த்துக்கு உண்டு. ஆனால், சென்னை புத்தகக்காட்சி ஓரளவுக்கு மேல் விரியாமல் சுருங்கியபடி நிற்கவும் அதுவே காரணமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் அதன் மீது இருக்கிறது. இப்போது சென்னைக்கு வெளியே நடக்கும் புத்தகக்காட்சிகளிலும் அதே போக்கைக் கையாள்வதாகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

சென்னையைத் தாண்டி தமிழகத்தின் ஏனைய நகரங்களுக்கும் புத்தகக்காட்சியைக் கொண்டுசெல்வது என்பது ‘பபாசி’ சமீபத்திய ஆண்டுகளில் தொடங்கிய நல்ல போக்குதான். அரசுத் துறைகள், தமிழ் அமைப்புகள், உள்ளூர் கல்வி நிறுவனங்கள், ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட பத்திரிகைகள் என்று பல்வேறு அமைப்புகளின் துணையோடுதான் இது சாத்தியப்பட்டுவருகிறது. கோவையில் அறிவுச் சூழலை செழுமைப்படுத்தும் விதமாக பிரமாண்டமான அளவில் ஆண்டுதோறும் புத்தகக்காட்சி நடத்த ‘கொடிசியா’ (2015) முடிவெடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. ‘பபாசி’யுடன் இணைந்து நடத்துகிறது என்றாலும் இதற்கான இடம், அரங்கமைப்பு என்று பெரும்பான்மைச் செலவுகள் ‘கொடிசியா’வினுடையதுதான். தொடக்க ஆண்டுகளில் வருவாய் ஏதும் கிடைக்காது என்றாலும், பொதுநல நோக்கில் இதை முன்னெடுக்கிறது ‘கொடிசியா’.

உள்ளபடி ‘பபாசி’ பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பு இது. சென்னைக்கு அடுத்து பெரிய நகரமான கோவை இன்று பெரிய வாசகர் பரப்பையும் பொருளாதாரச் சுழற்சியையும் கொண்ட நகரம். சென்னை புத்தகக்காட்சியில் விரிவாக நடத்த இடம், ஏனைய வாய்ப்பு இல்லாததால் புதிதாகப் பதிப்புத் துறைக்கு வருபவர்களுக்கு இடம் அளிக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு புத்தகக்காட்சிகளில் இடம் கிடைப்பதில்லை. அடுத்த தளத்துக்கு சென்னையில் விரிவுபடுத்தவும் ‘பபாசி’க்குப் பெரிய ஊக்குவிப்புகள் இல்லை. ஆனால், இது எல்லாமும் கோவையில் சாத்தியமாகின்றன. ஆனால், ‘பபாசி’யோ ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே தன்னைச் சுருக்கிக்கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது.

சங்கத்துக்குள்ளேயே இதற்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. சங்கத்தின் முன்னாள் செயலரும் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகத்தின் பதிப்பாளருமான புகழேந்தி, சங்கத்தின் இன்றைய நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதம் ஒரு உதாரணம். இது குறித்து புகழேந்தியிடம் பேசினேன்.

“கொடிசியா நிறைய அரங்குகள் தருவதற்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள். கடந்த வருடம் 1000 சதுர அடியில்கூட அரங்குகள் இருந்தன. ஆனால், இந்த வருடம் 200 சதுர அடிக்கு சுருங்கிவிட்டது. இதற்கு ‘பபாசி’தான் காரணம். இருநூறு புத்தகங்கள் மட்டுமே வைக்கக்கூடிய இடத்தில் ஐந்நூறு அறுநூறு புத்தகங்களை எப்படி அடுக்க முடியும்? நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்ட ஒரு பதிப்பாளர் அங்கு வரும் வாசகர்களை எப்படி சின்ன அரங்குக்குள் சமாளிக்க முடியும்? புத்தக அரங்கு வெறும் விற்பனை இடம் மட்டும் அல்ல. சந்திப்புக்கும் உரையாடலுக்குமான இடம். ஒரு பதிப்பாளர் பதிப்பிக்கும் எல்லாப் புத்தகங்களும் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும், எழுத்தாளர்-வாசகர் உரையாடல் நடக்க வேண்டும், இப்படிப் பல விஷயங்களை வெளிப்படுத்தும் விதமாக புத்தகக்காட்சி இருக்க வேண்டும். இடங்கள் பெரிய அளவில் கிடைக்கும்போது இதை சாத்தியமாக்க முடியும். ‘காலச்சுவடு’ கண்ணன், ‘கிழக்கு’ பத்ரி, ‘எதிர்’ அனுஷ் உள்ளிட்டோர் இதை வலியுறுத்துகிறார்கள். ஆனால், நம்மாட்களுக்கு இரண்டு பயங்கள் இருக்கின்றன; ஒன்று, பெரிய அரங்குகளால் சின்ன அரங்கு விற்பனை பாதிக்கப்படும் என்பதும், இரண்டாவது, நிறைய அரங்குகள் இருந்தால் சராசரி விற்பனை குறைந்துவிடும் என்பதும்! இது தேவையற்றது” என்கிறார் புகழேந்தி.

‘பபாசி’ தலைவரான வைரவன் இதை மறுக்கிறார். “சென்னையில் ‘பபாசி’ பின்பற்றும் வழிமுறைகளையே இங்கும் கடைபிடிக்கிறோம். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அரங்குகளை வழங்குகிறோம். சில பதிப்பகங்கள் நான்கு அரங்குகள், எட்டு அரங்குகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு அதிகமாக இடம் தர முடியவில்லை. இந்த முறை ‘கொடிசியா’ 265 அரங்குகள் அமைத்திருக்கிறது. அதில் அவர்கள் 10 அரங்குகள் எடுத்துக்கொள்கிறார்கள். 255 அரங்குகள்தான் நமக்கு இருக்கின்றன. இதைத் தொடர்ந்து ஈரோடு புத்தகக் கண்காட்சி வரவிருப்பதால் அங்குள்ள வாசகர்கள் கோவை வர விரும்ப மாட்டார்கள். அதனால், இவ்வளவு இடம் போதும் என நினைக்கிறார்கள். அதிகமான பங்கேற்பாளர்கள் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலில் ஒவ்வொரு பதிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அதிகபட்சமாக இரண்டு அரங்குகள் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்த பிறகு மீதி இடம் இருந்தால் அதிக அரங்குகள் கேட்பவர்களுக்குத் தாரளமாகத் தரலாம்” என்கிறார் வைரவன்.

இந்த விஷயம் தொடர்பில் ‘கொடிசியா’ சார்பில் யாரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. ஆனால், புத்தகக்காட்சி தொடர்பிலான விவரங்களை அறிந்த எழுத்தாளர்கள் சிலரிடம் பேசியபோது ‘கொடிசியா’வின் சங்கடத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. ‘பபாசி’ உதவியுடனேயே புத்தகக்காட்சி நடப்பதால் ஒருவருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொள்ள விரும்பவில்லை என்பதே அது.

இந்த முறை ‘பபாசி’க்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வைரவன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற சமயத்திலேயே தமிழ்ப் பதிப்புத் துறையையும் புத்தகக்காட்சிகளையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச்செல்வதில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால், சங்கத்தில் நிலைத்திருக்கும் ‘மரபார்ந்த சிந்தனை’, ஒரு வரையறையைத் தாண்டி அவர்களைச் செயல்படவிட மறுக்கிறது. “தமிழ்ப் பதிப்புத் துறையில் கடந்த பத்தாண்டுகளுக்குள் மட்டும் புதிதாக எண்ணற்ற இளைஞர்களும் புதிய முயற்சிகளும் வந்துவிட்டன. ஆனால், அவர்களுக்கான இடம் சங்கத்திலும் இல்லை; புத்தகக்காட்சிகளிலும் இல்லை. இது சங்கத்தை ஒரு குடும்பச்சொத்துபோல மாற்றிக்கொண்டிருக்கிறது; புதிய ஆட்கள் வந்தால் வரும் வருமானம் பிரிந்துவிடும் என்ற நினைப்புக்கு ஒப்பாக இருக்கிறது” என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அறிவுச் சூழலை யாரும் கட்டிப்போட முடியாது. ‘பபாசி’ பாய்ச்சலுக்குத் தயாராக வேண்டும் என்றால், சுயதடைகளை உடைக்க வேண்டும். கோவை அதற்கு சரியான தருணம். கோவை புத்தகக்காட்சி பிரம்மாண்டமானால், ‘கொடிசியா’ ஒரு முன்னுதாரணமாக மாறும். திருச்சி உள்ளிட்ட ஏனைய நகரங்களிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும்!

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x