

ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்துடன் நேரடித் தொடர்பில் இருக்கிறது. படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் அதேநேரம், படிப்பறிவற்ற கிராமப்புறப் பெண்களின் மேம்பாட்டிலும் அக்கறை செலுத்துவது அரசின் கடமை.
கிராமப்புறப் பெண்களை ஒருங்கிணைக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள், தங்கள் உழைப்பால் வீட்டில் பொருளாதார நிலையை உயர்த்துவதுடன் வீட்டின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற முடிகிறது. குழுவாக இணைந்து செயல்படுவதன் வெற்றி இது. மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் இன்றைக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் மகளிர் திட்டம் குறித்தும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கையேடு விவரிக்கிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருக்கும் பெண்கள், தங்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக எந்தெந்த தொழில்களைத் தொடங்கலாம், அவற்றைச் சந்தைப்படுத்தும் முறை போன்றவையும் இதில் இடம்பெற்றுள்ளன. சுய உதவிக்குழுக்களைத் தொடங்க நினைப்பவர்கள் மட்டுமல்லாமல், மகளிர் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள விரும்புவோரும் இந்த அறிமுகக் கையேட்டைப் படிக்கலாம். - பிருந்தா
மகளிர் குழுக்களும் மகளிர் திட்டங்களும்
(SHG/PLF/VPRC) - ஓர் அறிமுகக் கையேடு
தொகுப்பு & வெளியீடு: தன்னாட்சி
விலை: ரூ.60
தொடர்புக்கு: 9445700758
திசைகளுக்குள் அடங்காத நீர்ப்பெருவெளி: சுமித்ராவின் இரண்டாவது கவிதை நூல் ‘தவிப்பின் தடாகத்தில் மலர்ந்தவை’. தமிழில் முன்னெழுதப்பட்ட கவிதைகளின் சாயல்களற்றுத் தன்னெழுச்சியாக, மரபும் நாட்டுப்புற இலக்கியக் கூறுகளும் இயைந்த கவிதைகளாக வெளிப்பட்டுள்ளது இந்நூல். ஒரு பெண்ணின் பெருவிழைவுடன் ஒப்பிட இயலாத விதத்தில் ஆண் அவனின் ஆற்றலைப் பொருத்தமட்டில் எல்லைக்கு உட்பட்டவனாக இருக்கிறான்.
பெண் என்பவள் பெருங்கடல் எனில், ஆண் அதில் மிதக்கும் ஒரு சிறு படகு. பெண் பெருவனம் எனில், ஆண் அந்த வனத்தினுள் அலையும் ஒரு சிற்றுயிரி. ஆண், ஆண்மை என்பதெல்லாம் அந்த எல்லையற்ற தன்மையை எதிரிட்டு வெல்ல முடியாமல் திணறுகிறது. ‘மலராகவே/மலர்ந்து நிற்கும்/மயில்கொன்றை/மரம் போல்/உடல் முழுதுமாய்/மலர்ந்து நிற்கிறேன்/நீயோ காடு முழுவதும்/துழாவி விட்டு/களைத்து வந்து/ வேர்களில் விழுகிறாய்/’.
எல்லையற்ற காரிருளின் கருப்பையிலிருந்து பிரபஞ்சம் ஈன்றெடுக்கப்பட்டு, அதிலிருந்து காற்று, கடல், மலை, காடு, நிலம் இவை உருவாயின. ஒரு துளி ஒளி கருவறையின் கதகதப்புக்குள் தாய்மையின் பரிவில் தங்கிக்கொள்கிறது. திசைகளுக்குள் அடக்கப்பட முடியாத கருவறையின் அந்தக் காரிருளைக் காளி என்று அழைக்கிறது நம் இந்திய ஞான மரபு.
பள்ளி முடிந்து இல்லம் திரும்பும் மகளை எதிர்கொண்டழைக்கக் காத்திருக்கும் தாயின் விழி வாசல் வழியாக ஏராளமான மகள்கள் கடந்து போகிறார்கள். ஒரே சீருடையில், அதே இரட்டைச் சடையில். தாய்க்குள் உருவ பேதங்கள் கரைந்து எல்லையற்ற ஒருமை நிகழ்கிறது. ‘மகள் வருகிறாள்/ஒரு மகள்/இரண்டு மூன்றென/எண்ணிக்கை கூடி/என்னைச் சுற்றி/இப்பொழுது/ ஓராயிரம் மகள்கள்/அதில் ஒரு மகளை/அழைத்து வந்தேன்’
பெண் பற்றி ஆண் படைப்பாளிகள் வெற்று வர்ணனைகளையும் பெண்ணின் உடல் வனப்பு குறித்த மேலோட்டமான அலங்கார விவரிப்புகளையும் மட்டுமே உருவாக்க முடிந்திருக்கிறது. ஆனால், பெண்களின் மிகவும் உள்ளார்ந்த மனவியல் நுட்பங்களை அவர்களால் தொட முடிந்ததில்லை.
இணைவு விழைதலுக்கான ஏக்கத்தில் பெண்ணுக்குள் விகசித்துப் பெருகும் கட்டற்ற பேராவல் குறித்துப் பேசும் இந்தக் கவிதை வழியாகப் பெண் எய்தும் பெருவிழைவின் பிரம்மாண்டத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. மானுடப் பேருணர்வின் எல்லாத் தளங்களிலும், அதனதன் ஆழ்ந்த தத்துவங்களோடு இயக்கமடையும் சுமித்ராவின் கவிதைகள், சுய வாழ்க்கையின் பிறிது கலப்பற்ற சாரத்திலிருந்து முகிழ்த்து விகசித்தவை. - கே.பி.கூத்தலிங்கம்
தவிப்பின் தடாகத்தில் மலர்ந்தவை
சுமித்ரா சத்தியமூர்த்தி
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9789743053
அசலான தோழர்: தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர்களில் ஒருவர். பொதுவுடைமை இயக்கத்தில் தனி மனித வெளிப்பாடு அவசியம் அல்ல என்பதைத் தன் வாழ்நாளில் கடைப்பிடித்தவர். அரும் பணிகள் செய்தபோதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பண்பாளர் அவர்.
பாரதி, சிங்காரவேலர், எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோரின் வரலாற்றைத் தகுந்த ஆதாரங்களுடன் அவர் எழுதியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக வரலாற்றையும் எழுதியுள்ளார். சி.எஸ். 1930களில் லண்டனில் உயர் கல்வி கற்றவர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டிய சீனிவாச ராவ், சர்க்கரைச் செட்டியார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்.
அவரது பங்களிப்பைக் கெளரவிக்கும் விதத்தில் ‘சி.எஸ்.சுப்பிரமணியம் அரங்கம்’ என்கிற பெயரில் ஓர் அரங்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு அமைத்துள்ளது. தனது வீட்டையும் சொத்துகளையும் கட்சிக்கு எழுதிவைத்த அவரின் விருப்பத்திற்கு இணங்க கட்சி இதைச் செய்துள்ளது.
இந்த அரங்கத் திறப்பு விழாவை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலர் இது. தன்னை முன்னிறுத்தாத அவரின் பங்களிப்பைக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தோழர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், ஆய்வாளர்கள் மே.து.ராசுகுமார், ஆ.சிவசுப்பிரமணியன், ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்ட பலரின் கட்டுரைகள் துலக்கப்படுத்துகின்றன. - ஜெய்
தியாகசீலர் சி.எஸ்.சுப்பிரமணியம்
அரங்கம் திறப்பு விழா மலர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு
விலை: ரூ.150
நம் வெளியீடு: உறவைக் கையாளும் வழிகள் - வீடு என்பது செங்கல்லும் மணலும் கொண்டு எழுப்பப்படுவதல்ல. மனிதர்களின் அன்பாலும் உறவுப் பிணைப்பாலும் உருவாகும் கூடு அது. அதனுள் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதோடு இந்தச் சமூகத்துடன் அவர்கள் நல்லுறவைப் பேணுவதற்கான அடித்தளத்தையும் வீடே அமைத்துத்தருகிறது.
குடும்ப உறவுகளுக்குள் புரிந்துகொள்ளாமையும் சுயநலமும் சில நேரம் ஸ்வர பேதமாக அமைந்துவிடுவதுண்டு. அதை எப்படிக் கையாள்வது என்கிற வாழ்க்கை ரகசியத்தை ‘பெண்கள் ஆண்கள் குழந்தைகள்’ எனும் இந்நூலில் சொல்லியிருக்கிறார் லதா. காதல், திருமணம், கணவன் - மனைவி உறவு, குழந்தை வளர்ப்பு எனக் குடும்ப வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் இந்நூல் தொட்டுச் செல்கிறது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், உறவுச் சிக்கல்களையும் அவற்றைக் களைவதற்கான வழிகளையும் சொல்கின்றன. இந்தக் கட்டுரைகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்தவை. ஆண்களும் பெண்களும் தங்களைப் பகுப்பாய்ந்து தெளிவுபடுத்திக்கொள்ள உதவும் கையேடாகவும் இந்த நூல் விளங்குகிறது.
பெண்ணுரிமை என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல என்பதைத் தன் கட்டுரைகளின் வழியாக விளக்கும் லதா, ஆணாகப் பிறப்பதாலேயே ஆணுக்குத் தனியாக எந்தப் பெருமையும் வந்துவிடுவதில்லை என்பதையும் விளக்குகிறார்.
பெண்கள் ஆண்கள் குழந்தைகள்
லதா
விலை: ரூ.120 தொடர்புக்கு: 74012 96562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
திண்ணை | கலப்பை பதிப்பகக் கடை: கலப்பை பதிப்பகம் தொ.பரமசிவனின் ‘உரைகல்’, ‘இந்து தேசியம்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது. செம்பேன் உஸ்மானின் ‘தொல்குடித் தழும்புகள்’ மொழிபெயர்ப்ப்பு நூல் உள்ளிட்ட பல முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பதிப்பகம் புதிய எண்:4, 13ஆவது செக்டார், 84ஆவது தெரு, கே.கே.நகர், சென்னை என்கிற முகவரியில் விற்பனைக்கான கடையைப் புதிதாகத் தொடங்கியுள்ளது. தொடர்புக்கு: 94448 38389
இளங்கோ கிருஷ்ணன் நூல் கூட்டம்: கவிஞர், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்னண் எழுதிய ‘ஒற்றைக் குரல்’ நுண் கதைகளுக்கான கூட்டம் இன்று (06.07.24) சென்னை வேளச்சேரியில் பீ ஃபார் புக்ஸ் (B for Books) புத்தகக் கடையில் மாலை 5:30 மணி அளவில் நடைபெறவுள்ளது. கார்குழலி, கார்த்திக் பாலசுப்ரமணியம், வைரன்.லெ.ரா. உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். தொடர்புக்கு: 90424 6147