நூல் வெளி: மனங்களைத் திறக்கும் கருவி

நூல் வெளி: மனங்களைத் திறக்கும் கருவி
Updated on
2 min read

ஜன்னலும் கதவும் கொண்ட ஓர் அமைப்பு மட்டுமல்ல கட்டிடம்; ஸ்பரிசமும் மனமும் கொண்ட ஓர் உயிரி என்பதைக் குறியீடாகக் கொண்டு மீரான் மைதீன் வரைந்துள்ள நாவல் திருவாழி.

மக்கள் அடிக்கடி புழங்குவதுபோல வாழ்க்கை ரொம்பச் சிக்கலானது அல்ல; எளிய சூத்திரம் கொண்டதுதான். அந்த எளிய சூத்திரம் என்ன என்பதை விளக்க, நாஞ்சில் நிலத்தையும் அங்குள்ள ஒரு லைன் கடையையும் அதனோடு தொடர்புடைய மனிதர்களையும் மீரான் மைதீன் தேர்வு செய்துள்ளார்.

1970இல் கட்டி முடிக்கப்பட்ட ஏழு கடைகள் கொண்ட ஒரு வணிக வளாகம், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான திருவாழி என்பவருக்குச் சொந்தமானது. அவரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது அந்தக் கட்டிடம். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வரலாற்றுப் பாத்திரங்களில் ஒன்றாகிப் போனது திருவாழிக் கட்டிடம்.

ஏழு கடைகளில், முதல் கடை - ஜெராக்ஸ் கடை, இரண்டாம் கடை - அடகுக் கடை, மூன்றாம் கடை - பேண்ட் வாத்தியக் குழுவின் அலுவலகம், நான்காம் கடை - பியூட்டி பார்லர், ஐந்தாம் கடை- அமானுஷ்ய சக்தி, குடிகொண்டிருக்கும் பேய் கடை, ஆறாம் கடை - மளிகைக் கடை, ஏழாம் கடை - ஆண் ஒருவரால் நடத்தப்படும் மகளிர் தையலகம்.

திருவாழி காம்ப்ளக்சுக்கு எதிரிலும் ஒரு டீக்கடை இருந்தது. கிருஷ்ணன் நாயர் டீக்கடையும் அந்தக் கடைக்குப் பின்புறம் இருக்கும் காலி மனையும் இந்த நாவலில் முக்கியக் கதாபாத்திரங்கள்.

அதேபோல, திருவாழிக் கட்டிடத்தின் மேற்பார்வையாளனாக இருக்கும் 24 வயது இளைஞன் அன்சாரி, இவர்கள் அனைவரையும் இணைக்கும் கண்ணியாக நாவல் முழுவதும் வந்து போகிறான்.

மூன்று தசாப்தங்களாக இந்தக் கடைகளை நடத்துபவர்களின், வேலை செய்தவர்களின், இந்தக் கடைக்கு வந்து போவோர் ஆகியோரின் அக, புற நடவடிக்கைகளே நாவலில் விரவிக் கிடக்கின்றன.

இருந்தாலும் மனிதர்களின் உளவியலைப் படம்பிடிக்கும் வழக்கமான நாவல் அல்ல இது. கடைகளைப் பற்றிய அறிமுகமே திருவாழி லைன் கடைக்கும் நமக்கும் ஏதோவொரு வகையில் தொடர்பு இருப்பதை உணர்த்திவிடுகிறது. நாவலை வாசிக்கும்போது, ஏதாவதொரு கதாபாத்திரம் உங்களுடன் நெருக்கமாகலாம்.

ஏழு கடைகளில், அமானுஷ்ய சக்தி கொண்ட ஐந்தாம் எண் கடையைச் சுற்றியே நாவல் படர்கிறது. அந்தக் கடையை யார் எடுத்தாலும், விபத்தில் இடது காலை இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாவது நிச்சயம். இதுவரை பதினைந்து பேர் அப்படி இடதுகாலில் பலத்த அடியை வாங்கியிருக்கின்றனர்.

நாவல் நடைபெறும் காலத்தில் இருவர் விபத்தில் சிக்கி இடது காலைக் காயப்படுத்திக் கொள்ளும் சம்பவங்களையும் பார்க்க முடிகிறது. இதில் ஒருவர், இதையெல்லாம் நம்பாதவர் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இடது காலை மட்டும் குறிவைக்கும் அந்த துர்சக்தி எது என்பதை அறிய முற்படுதலே நாவலை நகர்த்திச் செல்கிறது. எனினும், இது ஒரு வகையான துப்பறியும் நாவலோ, மர்ம நாவலோ அல்ல.

ஆக, இந்த நாவலின் மையப்பாத்திரம்தான் யார்? கதைநாயகன் யார்? யூகிக்கச் சற்று கடினமான கேள்விதான். அப்படி ஒன்று நாவலுக்குத் தேவை என வாசக மனம் விரும்பினால், அவர்களுக்கான நாவல் அல்ல இது. திருவாழி கட்டிடத்தை மையப்படுத்தியே நாவல் சுழல்வதாகக் கொண்டாலும், அந்தக் கட்டிடத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு செய்தியை / ஒரு வாழ்க்கை நெறியை வாசகனுக்கு வழங்குகிறது.

கதாபாத்திரங்களுக்கு அறிமுகத்தைக் கொடுக்காமலேயே வாசகர்கள் தங்கள் மனநிலைக்கேற்ப, அனுபவங்களுக்கு ஏற்ப ஒரு தோற்றத்தைக் கொடுத்துக்கொள்ளும் வசதியை மீரான் மைதீன் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அதாவது கதாபாத்திரங்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள், பேச்சு மொழி ஆகியவற்றைச் சொல்லிக்கொண்டே வரும்போது, அந்தக் கதாபாத்திரத்திற்கான உருவத்தை நம்மை அறியாமலே மனதில் உருவாக்கிக் கொள்கிறோம்.

அந்தத் தோற்றத்திலேயே அவர்களும் வாசகர்களின் உள்ளங்களில் தங்கிவிடுகிறார்கள். இஸ்லாத்தையும் அதன் வாழ்க்கை நெறியையும் எந்தப் பிரசாரமும் இன்றி, தங்கள் அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் கடைப்பிடித்து ஒழுகி வந்ததன் வழியாக மட்டுமே அதன் பரவலுக்கு வித்திட்டிருக்கிறார்கள் என்பதை மிக மிக நுட்பமாக நாவலில் வனைந்திருக்கிறார் மீரான் மைதீன்.

பணமும் அதிகாரமும் மனிதர்களின் உண்மையான சொரூபத்தைக் காட்டுவதற்கான ஆடிகளாக இருக்கின்றன, அந்த ஆடியில் நிழலாடும் மனித மனங்களின் குரூரங்களையும் அதற்கு நேரெதிர் பண்பான பெருந்தன்மைகளையும் ஊடுருவிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது இந்தத் திருவாழி.

திருவாழி
மீரான் மைதீன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.550
தொடர்புக்கு: 046 5227 8525

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in