

பேராசிரியர் வீ.அரசுவின் 70ஆம் ஆண்டு அகவை நிறைவினையாட்டி வெளிவந்திருக்கிறது ‘ஓர்மைத்தடம் பேரா.வீ.அரசு: ஆசிரியம் - ஆய்வு -உரையாடல்கள்’ என்ற நூல். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்து, தர்க்க அடிப்படையிலான சுயசிந்தனையை வளர்க்கின்ற பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் தொடங்கித் தன்னைப் போலவே தன் மாணவர்களையும் நெறிப்படுத்திக் கரடுதட்டிப்போயிருந்த தமிழ்க் கல்விச் சூழலில் ஒரு பாரிய மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் வீ.அரசு.
ஆசிரியர் – மாணவர்களுக்கிடையிலான உறவு நீர்த்துப்போயுள்ள தற்காலச் சூழலில் பணிஓய்வு பெற்றுப் பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் தம் மாணவர்களால் கொண்டாடப்படுகின்ற ஆளுமையாக அரசு இருப்பதற்கு, அவருடைய வகுப்பறைச் செயற்பாடுகளும் கற்பித்தல் முறைகளுமே பின்புலமாக இருக்கின்றன. கல்விச்சூழலிலும் பொது வாழ்விலும் அவர் கடந்துவந்த பாதையினை அவருடைய மொழியிலேயே உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்துள்ளது இந்த நூல்.
அரசுவின் இருபத்தேழு மாணவர்கள் அவர் இயங்கிய வெவ்வேறு புலங்கள் சார்ந்து நடத்திய உரையாடல்களின் தொகுப்பாக இந்நூல் உள்ளது. இவ்வுரையாடலின் களங்களை வடிவமைத்து, தொகுத்துப் பதிப்பித்தவர் அவருடைய இணையர் பேராசிரியர் அ.மங்கை என்பது கூடுதல் சிறப்பு. உரையாடலை நிகழ்த்தியவர்களுள் பெரும்பான்மையர் அரசுப் பணி சார்ந்தவர்கள்.
தமிழ் இலக்கியத் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் கோ.பழனி, புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழியற் புலத் தலைவர் பேராசிரியர் மூ.கருணாநிதி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் அ.சதீஷ் உட்பட பல பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்களும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுமாக இருப்பவர்கள்; இந்த உரையாடலை நிகழ்த்தியதன் மூலம் தற்காலத்தில் அவர்கள் எதிர்கொள்கின்ற சமூகவினைகளும் இயல்பாக இந்நூலில் பதிவாகியுள்ளன.
வீ.அரசுவால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் எத்தகு சிந்தனை மரபினைக் கொண்டிருப்பார்கள் என்பதற்கு இவர்களே பருக்கைப் பதச் சான்றுகளாக இருப்பதையும் உணரமுடிகின்றது. ஆசிரியச் சமூகத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் ஒருமுறையாவது அவசியம் வாசிக்கவேண்டிய நூல் இது.
நிறுவனம்சார் களமாடல், வகுப்பறைக்கு அப்பால், அச்சுப் பண்பாடு, ஈழத்தொடர்பு, வாழ்க்கை என்று ஏழு பகுதிகளில் பகுக்கப்பட்டிருக்கும் இந்த உரையாடல்களை வாசிக்கும்போது வீ.அரசு என்கிற தனிமனிதரின் முயற்சிகளும் செயற்பாடுகளும் பிரமிக்க வைக்கின்றன.
மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த வாரந்தோறும் மேடை நிகழ்வு, மாதத்திற்கு ஒருமுறை கட்டாய நூலக வகுப்பு, திரைவெளி, பல்கலை அரங்கம் சார் பயிற்சி, பருவத்திற்கு (semester) ஒருமுறை ‘கங்கு’ என்ற பெயரில் தொல்லியல், வரலாற்றுக் களங்களைப் பார்வையிடச் செல்லுதல், வருடத்திற்கு ஒருமுறை இந்தியக் கல்விச் சுற்றுலா சென்றுவருதல்- குறிப்பாக மாணவர்களே திட்டமிட்டு ஒருங்கிணைத்தல், கல்லூரிப் பேராசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சியில் கையேடுகள் உருவாக்கம் எனப் பல அறிவுசார் பயிற்சிகளை மாணவர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார்.
2004ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத் துறைத் தலைவராக அவர் பொறுப்பேற்றிருந்தபோது ஏறக்குறையப் பத்து அறக்கட்டளைகள் இருந்தன. இவருடைய பெரும் முயற்சியால் தமிழ்ச் சமூகத்தின் போற்றுதலுக்குரிய அறிவுசார் ஆளுமைகளுக்கு அறக்கட்டளைகள் பல உருவாக்கப்பட்டன.
மயிலை சீனி.வேங்கடசாமி, புதுமைப்பித்தன், பா.ஜீவானந்தம், சிங்காரவேலர், பெரியார் ஆகியோரின் பெயரிலான அறக்கட்டளைகள் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை. இவற்றை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், இடையறாது நடத்திக்காட்டியதே வீ.அரசு என்கிற ஆளுமையின் வெற்றி. புகழ்பெற்ற கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், அயலக அறிஞர்கள் இந்த அறக்கட்டளைகளில் உரையாற்றியிருக்கிறார்கள். பேராசிரியர் கா.சிவத்தம்பி நடத்திய தொடர் சொற்பொழிவுகள், செக் நாட்டுத் தமிழறிஞர் யாரொசுலவ் வாசெக்கின் வருகை உள்ளிட்டவை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள்.
பா.ஜீவானந்தத்தின் ஆக்கங்கள், வ.உ.சி. நூல்திரட்டு, அத்திப்பாக்கம் வேங்கடாசலனாரின் ஆக்கங்கள், சென்னை இலௌகிக சங்கம் வெளியிட்ட ‘தத்துவ விவேசினி’ இதழின் ஆறு தொகுதிகள் என இதுவரைத் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக அறியப்படாத ஆவணங்களையெல்லாம் தர்க்க அடிப்படையில் கால வரிசையில் வீ.அரசு தொகுத்துத் தந்துள்ளார்.
இந்நூலில் வீ.அரசு கூறியுள்ள ஒரு கருத்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கான பதிவாக இருக்கின்றது; அக்கருத்தோடு இந்நூல் அறிமுகத்தை நிறைவு செய்யலாம். ‘எந்த ஒரு செயலையும் புதிதாகச் செய்தாலோ, மரபாகச் செய்துவருவதில் மாற்றத்தை உருவாக்கினாலோ, அது எப்போதும் சிக்கலாகவே எதிர்கொள்ளப்படும். அச்சிக்கலை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருந்தால் எதையும் புதிதாகக் கொண்டு வரமுடியாது’. வீ.அரசு அவர்கள் முன்னெடுத்த முயற்சிகளை, உருவாக்கிய வெளிகளை வருங்கால ஆசிரியச் சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்கான சிறந்த ஆவணமாக இந்நூல் உள்ளது.
ஓர்மைத் தடம்
பேரா.வீ.அரசு
நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ் (பி) லிட்.,
விலை: ரூ.500
தொடர்புக்கு: 044 26251968
- தொடர்புக்கு: mohanakareem1987@gmail.com