

தகவல்கள் விரல்நுனியில் கிடைப்பதன் பாதகங்களையும் பொருட்படுத்தும் பட்சத்தில், அறிவியலை எளிமையான வடிவத்தில் அளிக்கும் எந்த முயற்சியையும் நிறைமனத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, மருத்துவம் சார்ந்த அறிவியல் நுட்பங்களை எளிமைப்படுத்தும்போது, தவறாக உள்வாங்கிக்கொள்ளவும் போலிக் கருத்துகளை உருவாக்கவும் அதுவே வழி செய்துவிடக்கூடும்.
நுனிப்புல் புரிதல், அநாவசியமாக அச்சம் கொள்வதற்கோ இது இவ்வளவுதானா என அலட்சியப்படுத்துவதற்கோ காரணமாக அமைந்துவிடலாம். டாக்டர் கு.கணேசன் எழுதியிருக்கும் ‘உடலுக்குள் ஒரு ராணுவம்’ என்னும் மருத்துவ நூல் மேற்சொன்னவற்றின் இடைவெளிகளை மிகுந்த அக்கறையுடனும் லகுவாகவும் நிரப்புகிறது.
நுண்ணுயிரிகள் குறித்தும் அவற்றை மனித உடல் எதிர்கொள்ளும் விதத்தைக் குறித்தும் எல்லோருக்கும் இருக்கும் கலவையான புரிதல்களை இந்நூல் நெறிப்படுத்துகிறது. கூடுமானவரை மருத்துவப் பதங்களை விட்டுக்கொடுக்காமலும் அறிவியல் ஒழுங்கிலிருந்து விலகாமலும் அதேநேரம் புரிதலை எளிமைப்படுத்தும் உதாரணங்களைப் பயன்படுத்தியும் எழுதப்பட்டிருக்கிறது.
கரோனா காலத்தில் ‘நோய் எதிர்ப்பாற்றல்’ என்பது சமூக ஊடகத்தில் அதிகம் சேதத்திற்கு உண்டான அறிவியல் கூறாக இருந்தது. கூகுளில் சீரற்ற மருத்துவக் கட்டுரைகளும் மருத்துவக் கட்டுரைகள் போன்ற பாவனைகளும் மலிந்து கிடந்தன.
யார் வேண்டுமானாலும் அவரவருக்குத் தேவையானதைச் சொல்வதற்குச் சாதகமான மேற்கோள்களை அக்கட்டுரைகளில் எடுத்துக்கொள்ள முடியும். எவை கற்பனைகள், எவை அனுமானங்கள், எவை ஆய்வு முடிவுகள் எனப் பிரித்தறிய முடியாத அளவிற்கு என்னென்னவோ எழுதிக் குவிக்கப்பட்டன. கரோனா வைரஸ் வம்சவிருத்தியை அதிகமாக்கும் என்கிற தலைப்பில்கூட ஏதேனும் ஒரு கட்டுரை தேடினால் கிடைத்துவிடும் என்கிற அளவுக்குச் சூழல் மோசமாக இருந்தது.
அதே நெருக்கடிச் சமயத்தில்தான் மறுமுனையில் இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகளை மருத்துவர் கு.கணேசனும் எழுதியிருக்கிறார். தொடக்கக் கட்டுரைகள் தடுப்பூசியின் அத்தியாவசியம், நுண்ணுயிரிகளைப் பற்றிய மேலோட்டமான தகவல்கள், பெருந்தொற்றுகளின் வரலாறு - ‘மனிதன் எல்லை தாண்டிய பிரவேசங்கள் எப்படி அவனுக்கே அழிவைக் கொண்டுவந்தன?’, கிருமிகளில் நல்லவை / கெட்டவை என்கிற பாகுபாடு, விலங்குகளிடமிருந்து நமக்குப் பரவிய வைரஸ் தொற்றுகள் எனப் பொதுவான தலைப்புகளைப் பேசிவிட்டு, கரோனா வைரஸ் ஆடிய கோர தாண்டவம் வரை விரிகிறது.
அதற்குப் பிந்தைய கட்டுரைகள், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி செயல்படும் விதத்தை அறிவியல் பாடப்புத்தகத்தின் செறிவோடும் முன்னறிதல் இல்லாதோரும் ஈடுபாட்டுடன் வாசிக்கும் ஜனரஞ்சகத்தன்மையோடும் எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு சிறிய காயத்திற்குப் பின்னர் உடலில் நடக்கும் எதிரணுக்களின் களேபரங்கள், இந்த எதிரணுக்கள் எப்படி உருவாகின்றன, வெவ்வேறு வடிவங்களின் அவசியம் என்ன, தோலும் குடலும் எலும்பு மஜ்ஜையும் நோயெதிர்ப்பின் பகுதியாகச் செயல்படுதல், இயற்கை/செயற்கைத் தடுப்பாற்றல் வேறுபாடு என்ன, நோயெதிர்ப்புக் கூறுகளின் ஒரு பகுதியாக உடலில் ஒவ்வாமை ஏற்படுவது எப்படி என ஒவ்வொரு இயக்கத்தையும் தெளிவாகவும் ஆதாரத்துடனும் எழுதியிருக்கிறார்.
புத்தகத்தின் தலைப்புக்கு ஏற்ற அதே அலைவரிசையுடன்தான் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. உடல் இயங்கும் முறையைப் புரிந்துகொள்வதன் மூலம், கிருமித்தொற்றுகள்/அதற்கான மருத்துவம் பற்றிய தெளிவை அளிப்பதைத் தாண்டி, உடலைப் பேணுவது குறித்த விழிப்புணர்வையும் இந்நூல் உருவாக்கும். தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரங்களும் போலி மருத்துவக் குறிப்பு ஆசாமிகளும் அதிகமாகத் தென்படும் தற்காலத்தில் இப்படியான புத்தகங்களின் தேவை மிக அவசியமாகிறது.
உடலுக்குள் ஒரு ராணுவம்
கு.கணேசன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.250
ஆன்லைனில் வாங்க: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
- தொடர்புக்கு: premamayilan@gmail.com