நுண்ணுயிர்கள் என்னவெல்லாம் செய்யும்?

நுண்ணுயிர்கள் என்னவெல்லாம் செய்யும்?

Published on

எங்கும் வியாபித்திருக்கும் நுண்ணுயிர்கள் குறித்த புத்தகம் இது. இந்நூலாசிரியர் பெ.சசிக்குமார் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வருகிறார்.

தயிர் தயாரித்தல், செரிமானம், சூழ்நிலையைச் சமநிலையில் வைப்பதற்கு உயிரி எரிபொருள், தாவரங்கள் வளர்ப்பதில், இட்லி தயாரிக்க என எல்லா இடங்களிலும் வியாபித்துள்ள நுண்ணுயிர்களைப் பற்றி இவர் விளக்கியுள்ளது சிறப்பு. மாணவர்களுடன் நடக்கும் உரையாடலாக கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார்.

மனித உடலில் 78 வகையான உறுப்புகள் உள்ளன. ஒவ்வொரு உறுப்பும் அதற்குத் தேவையான செல்களை உற்பத்திசெய்து கொள்கின்றன. சுமார் 32.7 லட்சம் கோடி செல்கள் உள்ளன. இதயத்தில் மட்டும் 300 கோடி செல்கள் இருக்கின்றன.

மனிதனுக்குத் தீங்கு என்று நினைக்கும் அதீத சூழ்நிலைகளைத்தான் வாழ உகந்த சூழ்நிலையாக மாற்றிக்கொண்டு நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. பாறையில் இருக்கும் வேதிப் பொருள்களை உணவாக மாற்றுகின்றன. கிருமிகளைப் பற்றி அச்சம் எப்போதும் மக்களிடம் உள்ளது.

ஆனால், உலகில் உள்ள எண்ணற்ற நுண்ணுயிர்களில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான நுண்ணுயிர்கள்தான் நோயை உருவாக்குபவை. அவற்றைத்தாம் நோய்க்கிருமிகள் என்கிறோம். அவற்றைத் தவிர, மற்ற அனைத்தும் இந்தப் புவிக்கும் மனிதருக்கும் விலங்குகளுக்கும் நன்மை பயக்கக்கூடியவை என்பதை இந்நூல் விளக்குகிறது.

பாக்டீரியாவுக்கும் வைரஸுக்கும் இடையிலான வித்தியாசம் அறிய வேண்டிய ஒன்று. பாக்டீரியாவால் பரவும் நோய்களுக்கு ஆண்டிபயாடிக் எனப்படும் பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்துகள் பயன்படும். ஆனால், வைரஸ் தனியாக உயிர் வாழாது. அவை உயிர் வாழ்வதற்கு உயிருள்ள வேறு ஒரு பொருளின் ஆதரவு தேவை.

பாக்டீரியாவின் இயக்கத்தைக் கண்டறிவதுபோல், வைரஸின் இயக்கத்தைக் கண்டறிவது எளிதல்ல. அவை உடலுக்குள் நுழைந்தவுடன் தாக்குவதற்கான மருந்துகளைத்தான் தடுப்பூசி என்கிறோம்.

கழிவுகள் மட்டுமல்ல, பூமியில் மனிதனால் உருவாக்கப்படும் பலவிதமான குப்பைகளை மக்கச் செய்து பூமியின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் நுண்ணுயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எந்த ஒரு பொருளை நுண்ணுயிரியால் சாப்பிட முடியாதோ அதனை மனிதனாலும் சாப்பிட முடியாது. இயற்கையாக மண்ணில் கிடைக்காத சத்துக்களை உரங்கள் மூலம் செடிகளுக்குக் கிடைக்கவைப்பதற்கும் நுண்ணுயிர்கள் உதவி தேவை. உயிரித் தொழில்நுட்பமானது சுகாதாரப் பாதுகாப்பு, பயிர் உற்பத்தி, விவசாயம், தொழில் துறை, உயிரி எரிபொருள் என என்ணற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது. சிகிச்சை, நோய் கண்டறிதல், பதப்படுத்தப்பட்ட உணவு என உயிரித் தொழில்நுட்பப் பயன்பாடுகள் விரிவடைகின்றன. இந்தப் புத்தகத்துடன் பயணிப்பது பிரமிப்புகளுக்கு இடையில் பயணிப்பது போன்றிருக்கிறது.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
பெ.சசிக்குமார்
புக்ஸ் பார் சில்ரன்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 044 2433 2924

- தொடர்புக்கு: senthamil1955@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in