நூல் நயம்: உச்சியில் ஒளிரும் நம்பிக்கைச் சுடர்

நூல் நயம்: உச்சியில் ஒளிரும் நம்பிக்கைச் சுடர்
Updated on
4 min read

‘முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாதவன் போதிக்கிறான்’ என்கிற பெர்னாட்ஷாவின் வரிகளுக்கான விரிவுரைபோல் எழுத்தாளர் உதயை மூ.வீரையன் எழுதியிருக்கும் 24 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.

இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் தனிமனிதனாக ஒவ்வொருவரும் இந்தச் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த அக்கறையைத் தூண்டுவதுபோலவே, மக்களரசு ஒவ்வொரு தனிமனிதனின் உணர்வுகளுக்கும் கொடுக்க வேண்டிய மதிப்பீடுகளைப் பற்றியும் பேசுகிறது.

‘ஆறுகளைக் காப்பதே அறிவுடைமை’, ‘முதுமை வரமா? சாபமா?’, ‘ஊழலை ஒழிக்க முடியாதா?’, ‘திராவிட மாடலும் வள்ளலார் பாடலும்’, ‘பள்ளிகளில் நூலகக் கல்வி’, ‘கல்விக் கூடங்களில் பாலியல் வன்முறைகள்’, ‘கண்ணீரில் மிதக்கும் காவிரிப் பிரச்சினைகள்’ உள்ளிட்ட பல கட்டுரைகள் சமகால நிகழ்வுகளை முன்னிறுத்தி, மக்களின் குரலாக ஆட்சியாளர்களை நோக்கி வலுவான கேள்விகளை எழுப்புகின்றன.

நூலாசிரியர் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதால், ‘எல்லாச் செல்வங்களும் அழியும் தன்மை கொண்டவை. அறிவுச் செல்வமே வளரும் செல்வம். அதற்கான கருவிகளாக இருப்பவை புத்தகங்களே’ என்பதைப் பல இடங்களில் மிகவும் அழுத்தமாகச் சொல்லியுள்ளார். - மு.முருகேஷ்

சோதனையும் சாதனையும்
உதயை மூ.வீரையன்பாவை
பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 044-28482441

கவிதைகளின் பறவைகள்: பறவைகளைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இருக்க வாய்ப்பில்லை. நேரடியாகவும் மறைமுகமாகவும் பறவைகள் தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் தம் சிறகை விரித்துள்ளன. நவீனத்தின் தொடக்கமான மகாகவி பாரதி தொடங்கி, இன்று கவிதைகள் எழுதத் தொடங்கும் கவிஞன் வரை எல்லாரும் பறவைகளால் தாக்கம் பெற்றிருக்கிறார்கள். ராஜமார்த்தாண்டனின் கவிதையில் நேரடியாக ஒரு பறவை வருகிறது. அநாதைப் பிணமாக ஒரு காக்கை சாலையில் இறந்துகிடக்கிறது.

அந்தப் பறவை இறப்பதற்கு முந்தைய கணத்தைக் கவிஞர் கவிதைக்குள் நினைத்துப்பார்க்கிறார். அந்தப் பறவை உடல் இன்னும் சற்று நேரத்தில் பூனையாலோ குப்பை சேகரிப்பவர்களாலோ இல்லாமல் போய்விடும் எனக் கவலைப்படுகிறார். பிரமிளின் கவிதையில் பறவையே இல்லை. அதன் ஓர் இறகு காற்றின் தீராத பக்கங்களில் பறவையின் வாழ்க்கையை எழுதிச் செல்வதாகச் சொல்கிறார்.

சேரனின் கவிதையில் பறவை, பறவையே அல்ல. அது ஓர் இழப்பின் துயரத்தைச் சொல்லும் உணர்வுக் குறியீடாக வெளிப்பட்டுள்ளது. க.நா.சு. சுந்தர ராமசாமி, கல்யாண்ஜி, கலாப்ரியா, தேவதச்சன் தொடங்கி மதார் வரை கவியரசு அர்ப்பணிப்புடன் தேடித் தேடி தான் எடுத்துக்கொண்ட கருப்பொருளுக்காக உழைத்துள்ளார். இதன் வழி ஒரு நூற்றாண்டுக் காலத் தமிழ் நவீனக் கவிதையின் முகமும் துலங்கிவருகிறது. - விபின்

இறகிசைப் பிரவாகம்
(130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகள்)
தொகுப்பாசிரியர்: இரா.கவியரசுதேநீர்
பதிப்பகம்விலை: ரூ.220
தொடர்புக்கு: 90809 09600

மு.கருணாநிதியின் பன்முக ஆளுமை: திராவிட இயக்கத் தலைவர்களில் முக்கியமானவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, அவரது பங்களிப்பைக் கெளரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டுள்ளது. கெட்டி அட்டையில் வண்ணப் படங்களுடன் மலர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதழியல், இலக்கியம், சினிமா, அரசியல் என கருணாநிதியின் பங்களிப்பு பல துறைகளில் விரிந்துள்ளது.

அரசியல்வாதியாகப் பெரிதும் அறியப்பட்ட அவருடைய முகத்தைத் தாண்டி, அவரது பன்முக ஆளுமையை இந்த மலர் விரித்துக் காட்டுகிறது. பத்திரிகையாளர்கள் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் என்.ராம், திட்டக் குழு உறுப்பினர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட பலரின் கட்டுரைகள் இந்த மலரைச் செறிவுமிக்கதாக்குகின்றன. கருணாநிதி செய்த அருஞ்செயல்களையும் இந்த நூல் பட்டியலிடத் தவறவில்லை. - தீபன்

கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர்
தமிழ்நாடு அரசு செய்தித் துறை வெளியீடு
ஆசிரியர்: மரு.இரா.வைத்திநாதன்,இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை

வெள்ளந்திக் கதைகள்: தான் சார்ந்த ஒரு வாழ்க்கையைக் கதைகள் வழியாக எழுத்தாளர் சொல்வது புனைவுகளில் வெளிப்படும் ஒரு பொது அம்சம். ஆனால், இந்தத் தொகுப்பில் ம.செ.லோகநாதன் பல களங்கள், கருப்பொருள்களில் கதைகளை எழுதியுள்ளார். படர்க்கையில் கதைகள் சொல்லப்பட்டிருந்தாலும் வயது, பால் எனப் பேதங்களைக் கடந்து கதாபாத்திரங்களில் உணர்வுகளைச் சொல்வதில் லோகநாதன் கவனிக்கவைக்கிறார்.

தையல் இயந்திரத்தைத் தூக்கிக்கொண்டு திரியும் தையல் கலைஞர் ஒருவரைப் பற்றிய ‘பறவை’ என்கிற கதை இந்தத் தொகுப்பில் உள்ளது. உதிரித் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட அழிந்துவரும் இன்றைய சூழலில், இந்தக் கதாபாத்திரம் நம் நினைவுகளைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது. இந்தக் கதை, ஓர் அரசுத் திட்டம், அந்தச் சாமானியனின் வாழ்க்கையைப் புலம்பெயரச் செய்துவிடுவதைப் பேசுகிறது.

ஒரு தையல் கலைஞரைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது. இதுபோல முதல் கதையான ‘மழை’ வர்க்க பேதத்தைப் பேசுகிறது. ‘வாய்தா’ கதை ஒரு வழக்கறிஞரின் அனுபவமாக விரிகிறது. பழைய காலத்தை நினைவுகளால் துழாவிப் பார்க்கிறது. இந்தக் கதையின் கனவுகளைப் பற்றிய விவரிப்பு சுவாரசியமாக வெளிப்பட்டுள்ளது.

பழைய காலத்தில் மதிப்புக்கும் நன்றிக்கும் உரிய ஆசிரியர் ஒருவர் நீதிமன்றப் படியேறியிருக்கிறார். அவர் எதற்காக வந்துள்ளார் என்பதைச் சொல்லாத வகையில், புனைவின் அசாதாரணத்தை எழுத்தாளர் இந்தக் கதையில் தக்கவைத்துள்ளார். குறுக்கீடற்ற அனுபவங்கள், நீதிக் கதைகளின் சாயல்களையும் பார்க்க முடிகிறது.

ஒருவகையில், தன்னைப் பாதித்தவற்றை நேர்மையுடன் கதைகளில் சொல்ல வேண்டும் என்கிற வெள்ளந்தித்தனம் அதற்கான காரணமாக இருக்கலாம். எல்லாவற்றையும் தாண்டி, இலக்கிய அந்தஸ்துக்கான சாத்தியங்கள், விவரிப்பு முறைகளின் ஆரோக்கியமான திணறல்கள் இந்தக் கதைகளில் வெளிப்பட்டுள்ளன. - ஜெய்

வாய்தா
ம.செ.லோகநாதன்
நன்னூல் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9943624956

அயல்மொழி நூலகம் | அறிய வேண்டிய அரசியல்: பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் போரைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதை ஒட்டி வெளியாகியுள்ள இந்த நூலின் தலையங்கக் கட்டுரை, அதைக் கண்டித்து பல்கலைக்கழகங்கள் அரசின் ஒரு பகுதி என உறுதிபடச் சொல்கின்றது.

அரசியல் துறைப் பேராசிரியரான அச்சின் வனிக்கின் கட்டுரை இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான வெளியுறவுத் துறை தொடர்புகளை பாலஸ்தீனப் போரை முன்வைத்து அலசி ஆராய்கிறது.

ஒடிஷாவின் சிஜிமாலி மலைப் பகுதியில் பாக்சைட் சுரங்கம் அமைக்கவிருக்கும் திட்டத்தை, வளர்ச்சி என்றால் என்ன என்கிற கேள்வியுடன் சமூகவியல் பேராசிரியரான மதுமிதா பிஸ்வாஸ் கட்டுரை அணுகுகிறது.

வகுப்புவாத வன்முறை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் மிஹிர் தேசாயுடன் நேர்காணல் ஒன்று தொகுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் பற்றி, அதன் பயனாளியை உதாரணமாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. - குரு

கிரவுண்ட் சீரோ புல்லட்டின்-1
கிரவுண்ட் சீரோ வெளியீடு
விலை: ரூ.50
தொடர்புக்கு: 98304 11525

திண்ணை - இசைக்கு நாஞ்சில் நாடன் விருது: சிறுவாணி வாசகர் மையம், 2018இலிருந்து எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெயரில் இலக்கிய விருதுகளை வழங்கிவருகிறது. இந்த ஆண்டு கவிஞர் இசைக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பகடியையும் விளையாட்டுத்தனத்தையும் துணிச்சலாகத் தன் கவிதைப் பொருளாகச் சூடிக்கொண்ட வகையில், தமிழ்க் கவிதைப் பரப்பில் விசேஷமானவர் இசை.

எட்டு கவிதைத் தொகுப்புகளும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளும் திருக்குறள் காமத்துப்பாலுக்கான உரைத் தொகுப்பும் இசையின் இலக்கியப் பங்களிப்புகள். இந்த விருது 50,000 ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் அடங்கியது.

யுவ புரஸ்கார் பாராட்டுக் கூட்டம்: யுவ புரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் அந்த விருதின் இறுதிப் பட்டியலில் தேர்வு பெற்ற கவிஞர் அதிரூபன், எழுத்தாளர் முத்துராசா குமார் ஆகியோருக்குமான பாராட்டுக் கூட்டத்தை சால்ட் பதிப்பகம் ஒருங்கிணைக்கிறது.

இந்தக் கூட்டம் இன்று (29.06.24) காலை 10.30 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் உள்ள மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி நூலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மனுஷ்யபுத்திரன், இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், சாம்ராஜ், சரவணன் சந்திரன், வேல் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in