

வரலாற்றின் புதுச் சுவை: தமிழின் முதல் நாவலென 1879இல் எழுதப்பட்ட ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ சொல்லப்படும் நிலையில், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டது ‘மதீனத்துந் நுஹாஸ்’ எனும் ‘தாமிரப்பட்டணம்’ நாவல். இந்த நாவல் ‘அர்வீ’ எனப்படும் அறபுத் தமிழில் எழுதப்பட்டது. 1858இல் நாவல் எழுதப்பட்டாலும் 1899இல்தான் அச்சு வடிவத்தில் நூலானது. பின்னர் 1979இல் நவீனத் தமிழ் வரிவடிவில் வெளியானது. தொடக்கக் காலத் தமிழ் எழுத்துகளில் அச்சிடப்படாததாலும், தமிழின் முதல் நாவல் வெளியான 20 ஆண்டுகள் கழித்தே அச்சானதாலும், அறபி மொழி நெடுங்கவிதை ஒன்றின் மொழியாக்கம் என்பதாலும் இதனைத் தமிழின் முதல் நாவல் என ஏற்க முடியாது என்போரின் வாதங்களுக்குத் தர்க்கரீதியான பதில்களைத் தந்துள்ளார் ஆய்வாளர் பழங்காசு சீனிவாசன். கால வெள்ளத்தால் அழிந்துபோன கடந்த காலங்களின் வரலாற்று நிகழ்வுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் பேரார்வத்தில் எழுதப்பட்ட செய்யுள்களைத் தமிழில் வசனமாகப் படிக்கையில் கிடைக்கும் புதுசுகம் அலாதியானது என்பதை ‘தாமிரப்பட்டண’த்தை வாசிக்கும் வாசகரால் உணர்ந்துகொள்ள முடியும்.
தாமிரப்பட்டணம்
அறபுத் தமிழில்: மாப்பிள்ளை லெப்பை ஆலிம்
(தமிழில்: எம்கே.ஈ.மவ்லானா)
சீர்மை வெளியீடு
விலை: ரூ.180
தொடர்புக்கு: 80721 23326
- மு.முருகேஷ்
மண்ணின் பெருமை பேசும் நூல்: மண் வாசனைக் கதைகளுக்கு எப்போதுமே வாசிப்பு உலகில் தனி இடம் உண்டு. தமிழ்நாட்டில் பல ஊர்களை மையப்படுத்தி மண்ணின் பெருமையைப் பேசும் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் தமிழக நெற்களஞ்சியத்தின் பெருமையைப் பேசுகிறது ஆதலையூர் சூரியகுமார் எழுதியுள்ள ‘தஞ்சை மண்வாசனைக் கதைகள்’. தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பேசும் ‘நீருக்கு ஒரு நீதி’ என்கிற கதையில் தொடங்கி, சாதிய உணர்வை மழுங்கச் செய்யும் ‘வகுப்பறைக்கு வராதே’ என்கிற கதை வரை 13 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. விவசாயப் பூமியான தஞ்சையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் கதை வடிவில் இடம்பெற்றுள்ளன.
- மிது
திரைப்பட விழாக்களின் கதை: எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ‘திரை’ என்கிற நாவல் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட அனுபவங்களின் தூண்டுதலில் எழுதப்பட்டிருக்கிறது. சமகாலத்துக் கலைப் பண்பாட்டு நிகழ்வொன்றின் இலக்கிய ஆவணமாக இந்த நாவலைத் தந்திருக்கிறார். ஓர் அறிவுஜீவியின் பார்வையில் இருந்து எழுதாமல், ஒரு சாமானியனின் அனுபவங்களின் வழியாக நாவலை நகர்த்திச்செல்கிறார். ஆகவே, செயற்கையான பாவனைகளை, குழப்பமான விவாதங்களை முன்னிறுத்தாமல் இயல்பான மனிதர்கள், அவர்களிடையே நடைபெறும் உரையாடல்கள், எளிமையான தர்க்கங்கள், அவர்கள் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், உணவு சார்ந்த சிக்கல்கள் என யதார்த்தமான உலகின் தரிசனத்தை அவரால் முன்வைக்க முடிகிறது.
சுப்ரபாரதிமணியன் தனது நாவல்களில் ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து எழுதுவார். ஆனால், ‘திரை’ நாவலில் அப்படியான பிரச்சினைகள் எதையும் முன்வைத்து எழுதவில்லை. ஆனாலும் திரைப்பட விழாக்களில் நடைபெறும் அரசியல் திணிப்புகள், அவற்றை எதிர்த்து எழும் காத்திரமான குரல்கள் என நாவலைத் தொடங்கும்போதே ஒரு சமூகப் பார்வையுடன்தான் ஆரம்பிக்கிறார். அந்தப் பார்வை நாவல் நெடுக ஒரு தர்க்கத்தை நிகழ்த்திவிட்டுச் செல்கிறது.
திரைத் துறையில் இயங்காத நண்பர்கள் சிலர் திரைப்பட விழாக்களுக்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களது வெளிப்படையான உரையாடல்கள்தான் நாவலின் களம். ஒரே நோக்கத்தில் நடத்தப்பட்டாலும் கோவா திரைப்பட விழாவுக்கும் திருவனந்தபுரம் திரைப்பட விழாவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் வழியே நாம் உணராத அனுபவங்களைப் பகிர்கிறார் நாவலாசிரியர். சில அத்தியாயங்களில் மெல்லிய நகைச்சுவையை இழையோடச் செய்யும் உரையாடல்கள் புன்னகைக்க வைக்கின்றன. கற்பனைக் கதாபாத்திரங்கள் ஊடே சமகால நிஜ மனிதர்களைப் பற்றிய சம்பவங்கள் ‘ட்ரான்ஸ்’, ‘மகாமுனி’ மாதிரியான திரைப்படங்களைப் பற்றிய கருத்துகள், வெவ்வேறு சமகாலத் தகவல்களைக் கலந்து, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கான பதிவாக நாவலைக் கொண்டுசெல்வது வாசிக்கும் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. திரைப்பட விழாக்கள் என்கிற அறியப்படாத வேறொரு உலகின் மீதான திரையை இந்த நாவல் விலக்குகிறது.