Published : 26 May 2018 09:48 AM
Last Updated : 26 May 2018 09:48 AM

நூல் நோக்கு: வாழ்வில் வேர்பிடித்த கதைகள்

‘ப

டைப்பாளியின் தேடலில் சில ரகசியங்கள் கட்டவிழ்க்கப்பட்டாலும் மேலும் மேலும் மர்மப் புன்னகையுடன் அவை நழுவிக்கொண்டு தான் இருக்கின்றன. அகமும் புறமுமான தேடல்களைக் கதைகளாக்கியிருக்கிறேன்’ என்று சொல்லும் நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. இந்தக் கிளிக்குக் கூண்டில்லை தொடங்கி, அம்மாவும் தனமும் உள்ளிட்ட 15 கதைகள் அடங்கியுள்ளன. சராசரியான வாழ்க்கைச் சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்ளும் மனித மன ஓட்டங்களை வெகு எதார்த்தமாக பதிவுசெய்துள்ள கதைகளாகவே அனைத்துக் கதைகளும் உள்ளன. எளிமையான மொழிநடையில் செறிவான கதைகள். கதையை வாசித்து முடிக்கை யில் நமக்குள்ளும் ஒரு சிறு பொறியைப் பற்ற வைத்துவிடுகிற கதை யுத்தி நூலாசிரியருக்கு லாவகமாக வரப்பெற்றுள்ளது. ‘ஆழம்’ கதையில் வரும் இளமதியும், ‘அடைக்குந்தாழ்’ கதையில் வரும் கீதாவும் ராகவியும் வேறு யாரோ அல்ல, நம்மோடு இணைந்தே பயணிக்கிற சக தோழிகளாகவே இருக்கிறார்கள். ‘இரவு’, ‘பிரசவ வெளி’ இரண்டும் குறிப்பிடத்தக்க கதைகளாக உள்ளன.

- மு.முருகேஷ்

இரவு

கலைச்செல்வி

என்.சி.பி.ஹெச்

சென்னை - 600098

விலை: ரூ 140

044 - 26251968

காமிக்ஸ் கதையில்

கார்ல் மார்க்ஸ்!

தமிழ் காமிக்ஸ் வாசகப் பரப்புக்குப் புதிய வரவான ட்யூராங்கோவின் அதிரடி சாகசம் இந்தப் புத்தகம். ட்யூராங்கோவைப் பிரதான பாத்திரமாகக் கொண்டு கடந்த ஆண்டு வெளியான கதையின் தொடர்ச்சி இக்கதை. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நடக்கும் சம்பவங்கள்தான் கதைக்களம். கூலிக் கொலையாளியாக அறிமுகமான ட்யூராங்கோ அடிப்படையில் முரட்டுத்தனமானவன் என்றாலும் ஈரம் கசியும் மனது. மெக்ஸிகோ எல்லையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ட்யூராங்கோவுக்குத் தூக்குத் தண்டனை காத்திருக்கிறது. அந்தத் தருணத்தில் அவரை விடுவிக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள், மெக்ஸிகோவிலும் அமெரிக்க எல்லைப் பகுதிகளிலும் ஆமோஸ் ராட்ரிகெஸ் எனும் புரட்சியாளனின் தலைமையில் இயங்கிவரும் குழுவை ஒழிக்க ட்யூராங்கோவைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ட்யூராங்கோவை அழைத்துச்செல்லும் அமெரிக்க அதிகாரிகளைக் கொன்று, அவனை ஆமோஸிடம் அழைத்துச்செல்கிறது புரட்சிக் குழு. இருவரும் முன்பே அறிமுகமானவர்கள். ஆமோஸின் புரட்சிக் குழுவின் லட்சியத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறான் ட்யூராங்கோ.

வறண்ட, பரந்த நிலப்பரப்பு, கொலைக்கு அஞ்சாத கொடூரக் கும்பல்கள், அமெரிக்க, மெக்ஸிக ராணுவ அதிகாரிகளின் சூழ்ச்சிகள், ஏழை மக்களின் தியாகம், துப்பாக்கி முழக்கங்கள், தகர்க்கப்படும் கோட்டைகள் என்று வன்மேற்குத் திரைப்படத்துக்குரிய விறுவிறுப்புடன் நகர்கிறது கதை. ஜெர்மானியனான மாக்ஸ்மில்லன் ரூஹென்பெர்க்கின் பாத்திரம் இந்தக் கதைக்குப் புதிய பரிமாணம் சேர்க்கிறது. கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ சித்தாந்தங்களால் கவரப்பட்ட மாக்ஸ்மில்லன், மக்கள் புரட்சி நடந்துகொண்டிருக்கும் மெக்ஸிகோவுக்கு வந்து கார்ல் மார்க்ஸின் சிந்தனைகளைப் பரப்பும் பணியில் ஈடுபடு பவன். கார்ல் மார்க்ஸ் தொடர்பாக அவனுக்கும் ஆமோஸுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் சுவாரஸ்யமானது!

- சந்தனார்

மெளனமாயொரு இடிமுழக்கம்!

கதை, ஓவியம்: யுவெஸ் ஸ்வால்ஃப்ஸ்

தமிழில்: எஸ்.விஜயன்

விலை: ரூ.250

முத்து காமிக்ஸ்

அம்மன்கோவில்பட்டி, சிவகாசி – 626 189

04562 - 272649

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x