

மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சனின் பிறந்தநாளை ‘பிரபஞ்சன்-55’ என்று பிரம்மாண்டமாகக் கடந்த ஆண்டு கொண்டாடியது தமிழகம். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவருக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியளிக்கப்பட்டது. விழா, நிதி, கௌரவித்தல் என்பதோடு மட்டுமல்லாமல் புதுவை இளவேனிலின் புகைப்படக் கண்காட்சி, பிரபஞ்சன் படைப்புகளுக்கான விமர்சனக்கூட்டம், பிரபஞ்சனுடனான உறவு குறித்த உரை, தியேட்டர் லேப் ஜெயராவ் குழுவினரின் நாடகம், வம்சி இயக்கிய குறும்படம் என படைப்பாளியைக் கொண்டாடுவதற்கு ஒரு முன்னுதாரணமான நிகழ்வாக அமைந்தது அது.
விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் புதுவை முதல்வர் வி.நாராயணசாமி. அப்போது, “எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளரை நாங்களும் சிறப்பாகக் கொண்டாடுவோம்” என்றார் நாராயணசாமி. சென்ற ஆண்டு விழாவில் தான் சொன்னதை பேச்சோடு நிறுத்திவிடாமல் செய்தும் காட்டியிருக்கிறார். மே 3, 2018 அன்று பிரபஞ்சனுக்கு மிகச் சிறப்பான விழா எடுத்து ரூபாய் பத்து லட்சம் வழங்கி கௌரவித்தது புதுவை அரசு. பிரபஞ்சன் வீட்டுக்கு முதல்வர் சென்று நிகழ்வுக்கான அழைப்பிதழ் தந்து அழைத்தது இதில் மிக முக்கியமான அம்சம். தமிழில் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என தொடர்ந்து பேசிவரும் சூழலில் இந்த நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!