Published : 05 May 2018 08:10 AM
Last Updated : 05 May 2018 08:10 AM

நூல் வெளி: கார்ல் மார்க்ஸின் கடைசி 3 ஆண்டுகள்!

கா

ர்ல் மார்க்ஸ், 19-ம் நூற்றாண்டின் மகத்தான எழுத்தாளர். ‘எழுத்தாளரா? அவர் சிறுகதை, நாவல் எதுவும் எழுதியிருக்கிறாரா?’ என்று யோசிக்க வேண்டாம். அரசியல், பொருளாதாரம், தத்துவம் என்று ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த பல துறைகளிலும் அவர் எழுதிக் குவித்திருக்கிறார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட மொழிநடையால், அவர் ஒரு ஒப்பற்ற எழுத்தாளராகவும் இருக்கிறார். முழுநேர எழுத்தாளரையே அயரவைக்கக் கூடிய மொழிநடை அவருடையது.

அதனாலேயே, மொழிபெயர்ப்பில் உள்ள இயல்பான சிரமங்களையும் தடைகளையும் தாண்டி தமிழுக்கு வந்திருக்கும் மார்க்ஸின் நூல்களும்கூட புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் வாசிக்கத் தூண்டுகின்றன. ஆனால், அவரைப் பற்றி தமிழிலேயே எழுதப்பட்ட நூல்கள், சமயங்களில் கதறவைத்துவிடுகின்றன. கோட்பாட்டு விளக்கங்களை எளிமைப்படுத்திச் சொல்லும் முயற்சிகளுக்கு மூல நூல்களின் மொழியாளுமை கைவருவதில்லை. இப்படியொரு சூழலில், எஸ்.வி.ராஜ துரையின் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் மார்செல்லோ முஸ்ட்டோவின் இந்தப் புத்தகம் மார்க்ஸிய வாசகர்களுக்கு ஓர் அபாரமான இலக்கிய அனுபவம்.

சமூகவியல் தத்துவப் பேராசிரியரான முஸ்ட்டோ, உலகம் போற்றும் சமகால மார்க்சிய அறிஞர்களில் ஒருவர். ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்ச், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். இவர் எழுதிய நூல்கள் ரௌட்லெட்ஜ் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகின்றன. தமிழுக்கு வந்திருக்கும் முஸ்ட்டோவின் இரண்டாவது நூல் இது. சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் 150-வது நிறைவையொட்டி, அச்சங்கத்தின் 80 முக்கிய ஆவணங்களைத் திரட்டி, முதன்முதலாக ஆங்கிலத்துக்குக் கொண்டுவந்தார் முஸ்ட்டோ. அத்தொகுப்புக்கு முஸ்ட்டோ எழுதிய விரிவான அறிமுகம், எஸ்.வி.ஆரின் மொழிபெயர்ப்பில் ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும்’ என்ற தலைப்பில் என்.சி.பி.எச் வெளியீடாக வெளிவந்தது.

மார்க்ஸின் எழுத்துகளைப் போலவே அவர் வாழ்க்கையும் இலக்கிய அனுபவம்தான். துயரச் சுவை மேலோங்கி நிற்கும் துன்பியல் காவியம். அதிலும், அவரது கடைசி மூன்று ஆண்டுகள் அதன் உச்சம். மூலதனத்தின் முதல் பாகம் வெளிவந்து, அறிவுச்சூழலில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவந்த நிலையில், அதன் அடுத்தடுத்த பாகங்களை எழுதுவதற்கான தீவிர தேடலும் வாழ்க்கை நெருக்கடிகளும் ஒருசேர அவரை அழுத்திய காலகட்டம். அப்போது மார்க்ஸைச் சந்தித்து உரையாடிய பத்திரிகையாளர்களின் சித்தரிப்புகள், குடும்ப நண்பர்களின் நினைவுக் குறிப்புகள் எனப் பல்வேறு ஆதாரங்களிலிருந்து அந்தக் காலகட்டத்தை, ‘அறிவுப் பயணத்தின் புதிய திசைகள்’ என்று அடையாளப்படுத்தியிருக்கிறார் முஸ்ட்டோ.

குழந்தைகளின் தோழர், அவர்களுக்காக எப்போதும் தன் கோட்டுப் பையில் மிட்டாய்கள் வைத்திருந்தவர், பாரிஸுக்குப் போன பேரக் குழந்தைகளை நினைத்து ஏங்கிய பாசத்துக்குரிய பாட்டனார், தன்னால் மகளுக்கு எவ்விதத்திலும் உதவ முடியவில்லையே என்று உள்ளுக்குள் விம்மி அழுத தந்தை... இப்படியெல்லாம் மனதை நெகிழவைக்கும் அதே மார்க்ஸ்தான், நாள் முழுவதையும் வாசிப்புக்காகச் செலவிட்டு, மூலதனத்தின் அடுத்த பாகத்தை எழுதுவதற்காக அசுரத்தனமான உழைப்பைச் செலவிடுகிறார். மானுடவியல் நூல்களை ஆய்வுக்குட்படுத்தி தனது கருத்துகளுக்கு வலுசேர்க்க முயல்கிறார். ஆறே மாதங்களில், ரஷ்ய மொழியைக் கற்று, கவிதை படிக்கும் அளவுக்குப் புலமைபெறுகிறார். ஐரோப்பிய இலக்கிய மேதைகளின் படைப்புகளைத் தேடித் தேடிப் படிக்கிறார். மார்க்ஸின் அகமும் புறமுமான இந்த வாழ்க்கைப் பகுதியைப் புனைவெழுத்துக்கு நிகரான நடையழகோடு எழுதி யிருக்கிறார் முஸ்ட்டோ. எஸ்.வி.ஆரின் அர்ப்பணிப்பும் உழைப்பும் அதைத் தமிழிலும் சாத்தியப்படுத்தி யிருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் முக்கால் பக்கத்துக்கு அடிக்குறிப்புகளைக் கொண்டிருக்கும் பக்கங்களும் உண்டு. நூலாசிரியர், தன்னுடைய கருத்துகளுக்கான சான்றாதாரங்களை எண்களிட்டுக் குறித்திருக்கிறார் என்றால், மொழிபெயர்ப்பாளரும் தன் பங்குக்குச் சிறப்புக் குறிகளையிட்டு அடிக்குறிப்புகளை எழுதியிருக்கிறார். குறிப்பிட்ட பக்கத்தில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு தகவலையும் வாசகர்கள் மேலோட்டமாகக் கடந்துசென்றுவிடக் கூடாது என்ற எஸ்.வி.ஆரின் அக்கறை, வாசகருக்குக் கூடுதல் தகவல்களையும் பார்வையையும் தருகிறது.

1879-ன் தொடக்கத்தில் மார்க்ஸை ஸ்காட்லாந்து அரசியல் வாதி மவுண்ட்ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன் சந்தித்தார் என்பது முஸ்ட்டோ அளிக்கும் தகவல். அதற்கான ஆதாரத்தை அடிக்குறிப்பாக அவர் கொடுத்திருக்கிறார். யார் இந்த எல்ஃபின்ஸ்டன்? எஸ்.வி.ஆர், தன்னுடைய அடிக்குறிப்பின் வழியாக வாசகனுக்கு உதவுகிறார். 1881-86ல் சென்னை பெருமாநில ஆளுநராகப் பணியாற்றியவர் எல்ஃபின்ஸ்டன். சென்னை கடற் கரைக்கு மெரினா பீச் என்று பெயர்சூட்டியது அவர்தான். அவர் பெயரில் அண்ணா சாலையில் ஒரு திரையரங்கமும் இருந்தது. (சினிமாவைப் பற்றிச் சொன்னவுடன், தமிழர்களுக்கு எவ்வளவு நெருக்கமாகிவிடுகிறார் பாருங்கள்!) அவர் சென்னையில் பணியாற்றிய காலத்தில் அவருக்கு எழுந்த எதிர்ப்புகள், அதற்கான காரணங்கள் ஆகியவற்றையும் சொல்வதற்கு எஸ்.வி.ஆர் தவறவில்லை.

மார்க்ஸ் எந்தெந்த எழுத்தாளர்களையெல்லாம் படித்தார் என்று முஸ்ட்டோ பட்டியலிட்டிருக்கிறார். அந்த எழுத்தாளர்களின் பெயர்களை ஒலிபெயர்த்து நகர்ந்துவிடாமல், அவர்களின் சிறப்பம்சங்களையும் அவர்களது படைப்புகளின் முக்கியத்துவத்தையும் அறிமுகப்படுத்துகிறார் எஸ்.வி.ஆர். அப்போதுதானே, மார்க்ஸ் ஏன் அதைப் படித்தார் என்ற பின்னணித் தகவலும் வாசகரை வந்துசேரும். உதாரணத்துக்கு, பிரெஞ்சு எழுத்தாளர் பல்ஸாக் எழுதிய ‘லா காமிடி ஹ்யூமேன்’ பற்றிய எஸ்.வி.ஆரின் விரிவான அறிமுகம். எல்லா வகையான மனித அனுபவங்களையும் ஏற்றுக்கொண்டு உலக வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகும் போக்கு என்ற அர்த்தத்திலேயே ‘காமிடி’ என்ற வார்த்தை இடம்பெறுவதாக விளக்க மளிக்கிறார். வழக்கமாக, பால்ஸாக் என்றுதானே எழுதுவோம்? பாண்டிச்சேரி பிரெஞ்ச் நிறுவன ஆய்வாளர் கண்ணன் உதவியோடு பல்ஸாக் என்று ஒலிபெயர்ப்பு துல்லியப் பட்டிருக்கிறது. ஆங்கிலம் அல்லாத மற்ற ஐரோப்பிய மொழிகளைச் சேர்ந்த பெயர்ச்சொற்களின் துல்லியமான ஒலி பெயர்ப்பு இப்படிப் பலரின் கூட்டு உழைப்பால் சாத்தியப் பட்டிருக்கிறது.

மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சில நூலாசிரியர்கள், அவர் தனது இறுதிக் காலத்தில் எழுத்துப் பணியில் சுணங்கிக்கிடந்தார் என்று சொல்லியிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. மார்க்ஸ் தன்னுடைய உடல்நிலையும் துணைவி ஜென்னியின் உடல்நிலையும் மோசமாகிப்போன நிலை யிலும்கூட எழுத்துப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார், படித்த நூல்களையெல்லாம் தன்னுடைய விமர்சனங்களோடு குறிப்புகளாக எழுதிக் குவித்துக்கொண்டிருந்தார் என்பதைக் கண்முன் நிகழும் காட்சிகளைப் போன்று விவரித்திருக்கிறார் முஸ்ட்டோ. கார்ல் மார்க்ஸின் 200-வது ஆண்டு விழாவில், ஓர் இளம் மார்க்ஸிய ஆய்வாளர் அவருக்குச் செய்திருக்கும் அறிவுபூர்மான அஞ்சலி இந்தப் புத்தகம்.

- புவி, தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

கார்ல் மார்க்ஸ், அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-1883)

மார்செல்லோ முஸ்ட்டோ, தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98.

விலை: ரூ. 210

தொடர்புக்கு: 044 2625 1968

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x