நூல் வெளி | புலம்பெயர் வாழ்க்கையின் சித்திரங்கள்

நூல் வெளி | புலம்பெயர் வாழ்க்கையின் சித்திரங்கள்
Updated on
3 min read

போர்ச் சூழல் காரணமாக ஈழத் தமிழர்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள், தமிழ் இலக்கியத்துக்குப் புதிய சூழலையும் வாழ்க்கையையும் கொடையளித்துவருகிறார்கள்.

அம்மாதிரியான கதைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்தாளர் ஷோபா சக்தி இதன் பதிப்பாசிரியர். எழுத்தாளர் எஸ்.பொ. ‘பனியும் பனையும்’ என்கிற தலைப்பில் 1994இல் புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பைக் கொண்டுவந்தார். அந்தத் தொகுப்பை நினைவுபடுத்துகிறது இந்நூல்.

அகரனின் ‘தாய்’ சிறுகதை, போர்ச்சூழல் காரணமாகச் சிதைந்த குடும்ப உறவைச் சித்தரிக்கிறது. முனைவர் பட்டப் படிப்புக்காக வெளிநாடு செல்லவிருக்கும் இளைஞன் ஒருவனின் பார்வையில் விரியும் இந்தக் கதை, போரின் அகவயமான பாதிப்பைச் சித்தரிக்கிறது.

தாய்க்குத் திருமணத்துக்குப் பிறகான உறவு இருப்பதான சந்தேகம் இந்தக் கதையின் மையம். ஆனால், அது சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. அவனுக்கே உரித்தான குழப்பங்களுடன் கதையில் அந்த உறவு சொல்லப்பட்டுள்ளது.

அதைத் தட்டிக் கேட்க வரும் சித்தப்பாவுக்கு வேறு ஏதோ சிக்கல் இருப்பதையும் சொல்லும் இடத்தில், இந்தக் கதை வாசகர்களுக்கு வேறு சாத்தியத்தைத் திறந்து காண்பிக்கிறது. அந்த நபர் போராளியாக இருக்கக்கூடும் என்கிற ஊகம் கதையை ஈழத்துக்கான தனித்துவத்துடன் இணைக்கிறது.

ஆயுதத்தை ‘ஆகிதம்’ என்று உச்சரிக்கும் ஒரு போராளியை நவமகன் தனது கதையில் சித்தரித்துள்ளார். இந்தியாவில் ஆயுதப் பயிற்சி எடுத்தவரின் வெள்ளந்தித்தனம், நடந்து முடிந்த கொடூரமான போருக்கு முன்னால் மனத்தை உலுக்குவதாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த நாடுகளிலும் தொடரும் அவரது வியப்பு, உண்மையிலேயே வியப்புக்கு உரியது. செந்தூரன் ஈஸ்வரனின் கதை புலம்பெயர்ந்து வாழும் இளைஞனின் மனக் குழப்பத்தைச் சொல்கிறது.

அ.முத்துலிங்கம் கதைகளில் பொதுவாக இருக்கும் பண்பாட்டு முரண், அவருடைய இந்தக் கதையிலும் இருக்கிறது. பொது வாசிப்புக்கு உகந்த சுவாரசியம் இந்தக் கதையில் உண்டு. சைபர் தாக்குதலைச் சமாளிக்கும் நிறுவனத்தை நடத்தும் ஈழத் தமிழரின் கதை இது.

அவரது மகள், ஓர் உடன்போக்குக்குத் தயாராக இருக்கும் இடத்தில் கதை தொடங்குகிறது. அவரது மகனுக்கோ லட்சிய நோக்கங்கள். அப்பா அதற்கு உட்பட்டுத்தான் தொழில் நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறான். அவரது மனைவியோ நந்தனார் பாடலை உருகிக் கேட்பவர்.

இவற்றுக்கு இடையே இவரது வாழ்க்கை. பல இனத்துக்காரர்களை அவர்களது தனித்துவமான பண்பாட்டுப் பழக்கவழக்கத்துடன் காட்சிப்படுத்துவது முத்துலிங்கம் கதைகளின் விசேஷமான அம்சம்.

அது இந்தக் கதையிலும் இருக்கிறது. டிலாரா என்கிற துருக்கிப் பெண்ணும் அகுடா என்கிற கனடியப் பழங்குடி ஆணும் இந்தக் கதையில் அப்படியாகத் தொழிற்பட்டிருக்கிறார்கள். கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரின் மாறாத மனதை இந்தக் கதை சொல்கிறது.

தொ.பத்திநாதனின் ‘வடக்கத்தியான்’, இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து இலங்கையில் வாழ்பவரின் வாழ்க்கையைப் பேசுகிறது. இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர் ஒருவரின் கடையில் திருடிவிட்டதாக முருகேசன் என்கிற இன்னொரு இந்தியத் தமிழன் மரத்துடன் சேர்த்துக் கட்டிவைக்கப்பட்ட காட்சியுடன் கதை தொடங்குகிறது.

ஈழத் தமிழர் ஒருவர் வந்து அவரை விடுவிக்கிறார். அவர் முன்னாள் போராளி எனக் கதைக் காட்சி வழி தெளிகிறது. 2009க்குப் பிறகு, அங்கு போராளிகளுக்கு என்ன மதிப்பு என்பதை இந்தக் கதை தெளிவாகச் சித்தரிக்கிறது.

“மழை பெய்யுது உள்ள வாங்க” என்கிற ஒரு வார்த்தை முருகேசனின் வாழ்க்கையை ஈழம் வரை கொண்டுவந்துவிட்டதையும், அந்த உறவுக்கு அவர் விசுவாசமாக இருப்பதையும் நம்பும் வகையில் பத்திநாதன் இதில் சித்தரித்துள்ளார். கரிச்சான் குஞ்சின் ‘பசித்த மானிட’த்தில் இப்படியொரு காட்சி இருக்கும்.

வழி மாறி வந்துவிட்ட நாயகன், அந்த வீட்டிலேயே வாழத் தொடங்கிவிடுவான். இந்தக் கதையில் ஈழத் தமிழர்கள் இருவரும் இந்தியத் தமிழர்கள் இருவரும் வருகிறார்கள். இந்த நால்வர் வழி மனிதர்களின் இயல்பை பத்திநாதன் காட்சிப்படுத்தியுள்ளார்.

கதையின் முடிவில், போராளியானவரின் செயற்கைக்கால் இருசக்கர வாகனங்கள் மோதும்போது கழண்டுவிடுகிறது. இது நுட்பமான சித்தரிப்பு. ஷோபா சக்தியின் ‘மரச்சிற்பம்’ அவரது வழக்கமான பாணிக்கு ஒரு பதமாக வந்துள்ளது.

நம் நிலத்துக்கு அந்நியமான நிலத்தையும் மனிதர்களையும் சித்தரிப்பதில் இருக்கும் அவரது கதைகளின் விருப்பத்தை இந்தக் கதையில் காண முடிகிறது. ஒரு விடுமுறைக் காலம், கடற்கரை விடுதி எனக் கதை சுவாரசியத்துடன் முன்னேறுகிறது. ஆனால், அவர் இந்தக் கதையில் கைக்கொண்டுள்ள பொருள், அச்சமூட்டக்கூடியது; கில்லட்டின் இயந்திரத்தைப் பற்றியது.

ஒரு பத்திரிகைச் செய்தியின் வழி கதை விரிவுகொள்கிறது. 1977இல் ழான் பால் சார்த்தர், மிஷல் ஃபூக்கோ போன்ற சிந்தனையாளர்கள் காலத்தில் ஒரு கில்லட்டின் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிற தகவலுடன் இந்தக் கதை, அந்த கில்லட்டின் கொலையை விவரிக்கிறது. ஆவணத்தன்மையுடன் புனையப்பட்டுள்ள இந்தக் கதை, அரசியலுடன், மரணத்துடன் போராடும் ஒரு மனத்தை அகவயமாகச் சித்தரித்துள்ளது.

ஹமிடா என்கிற இருபத்தேழு வயது மனிதனின் தலையை பூமெற்ஸ் சிறைச்சாலையில் உள்ள கில்லட்டின் துண்டித்த கதையை நீதிபதி மொனிக் மாபெலியின் பார்வையில் சொல்கிறது. உண்மையில், ஹமிடாவின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்ப்பை வழங்கியது மாபெலிதான். ஆனால், அவரது முன்னிலையில்தான் இது நடக்கவுள்ளது என்கிறபோது, அவர் சஞ்சலமடைகிறார்.

ஹமிடா மரணத்தை ஒரு சிகரெட் இழுக்கும் நேரம் வரை தள்ளிப்போடுகிறார். மீண்டும் ஒரு சிகரெட், சில மணித் துளிகள் உயிருடன் இருக்கிறார். அது முடிந்ததும் ரம்; மிடறு மிடறாகப் பருகுகிறார். இன்னொரு ரம் கேட்கும்போது அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. பாக்கியுள்ள ஒரு மிடறு ரம்மைத் தரையில் ஊற்றுகிறார். இந்தப் பூமிக்கு விட்டுச் சென்றது அதைத்தானோ எனக் கேட்கிறார் ஷோபா.

எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், உமா வரதராஜன், தேவகாந்தன், ஷோபா சக்தி, ஸர்மிளா ஸெய்யித் போன்று அறிமுகமான எழுத்தாளர்களுடன் அவ்வளவாக அறியப்படாத எழுத்தாளர்களின் கதைகள், இந்தத் தொகுப்புக்குப் பலம் சேர்க்கின்றன. 2009 போருக்குப் பிறகான சூழலையும் இந்தக் கதைகள் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

இமிழ்
புலம்பெயர் சிறுகதைகள்
பதிப்பாசிரியர்: ஷோபா சக்தி
கருப்புப் பிரதிகள்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 94442 72500

- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in