

வளம் மிக்க குமரி மாவட்டத்தில் அருவிகளுக்குப் பஞ்சமில்லை. சிறிய நிலப்பகுதி என்பதால், அருவிகளை எளிதில் அடைந்துவிட முடியும். ஆனால் இப்போது அணைக்கட்டுகள், மக்கள் பெருக்கம், காடழிப்பு போன்றவற்றால் பல அருவிகளுக்குச் செல்வதற்குத் தடை ஏற்பட்டுள்ளது. நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ‘சம்பந்தம்’ என்கிற முறையில் தங்களுக்கு என்று பொதுவான மனைவியை வைத்திருந்தனர். 1788இல் கள்ளிக் கோட்டைக்கு வந்த திப்பு சுல்தான், இந்தப் பழக்கத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
‘இனிமேல் இந்தச் செயலை யாரும் செய்யக் கூடாது’ என்று கட்டளையிட்டார். குமரி மக்களுக்குப் பிடித்த மரம் தென்னை. வீட்டைச் சுற்றித் தென்னை மரங்கள் இருப்பதால், அவர்கள் கடையில் தேங்காய் வாங்க மாட்டார்கள். அதனால், அந்தக் காலத்தில் கடைகளில் தேங்காய் கிடைக்காது. இப்படி குமரி மாவட்ட மக்களின் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாற்றைப் பேசும் இந்த நூலை கன்யூட்ராஜ், தன் அனுபவங்களுடன் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறார். - எஸ்.சுஜாதா
கன்னியாகுமரி - தமிழ்நாட்டில்
ஒரு தனி நிலம்
கன்யூட்ராஜ்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 044 24896979
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்: புனைவு, கட்டுரை என இரண்டு தளங்களிலும் ஆளுமை கொண்ட எழுத்தாளர் தமிழவன். இவர் ‘தீராநதி’ இதழில் எழுதிய கட்டுரைகளின் இரண்டாம் தொகுதி இந்நூலாக உருப்பெற்றுள்ளது. ஐரோப்பியச் சிந்தனைகளைத் தமிழோடு இணைத்துச் சிந்திக்கும் முறையை இக்கட்டுரைகளில் காண முடிகிறது. தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட செழுமையான தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற தமிழவனின் விருப்பமே கட்டுரைகளில் இழையாய் ஓடுகிறது.
கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை மிகக் குறுகிய காலத்தில் தன்வயப்படுத்தும் தமிழர்கள், தங்களுக்கென அரசியல் அதிகாரத்தைக் கைக்கொள்வதில் தடுமாறுவது குறித்த ஆதங்கமும் வெளிப்படுகிறது. இலக்கியச் செழுமையில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கமாகிவிட்ட சூழலில், தமிழ் இலக்கியங்களின் அழகையும் குரலையும் கிரேக்க இலக்கியத்தில் காண்கிறார்.
அந்தப் புரிதலை வந்தடைந்ததற்கு அயல் நாட்டறிஞர் ஜார்ஜ் தாம்சன், தமிழ் அறிஞர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரின் இணைவு காரணமாக இருந்ததைக் கூறி மகிழ்கிறார். 1870களில் சென்னையில் இயங்கிய லௌகீகச் சங்கம், மூட நம்பிக்கைக்கு எதிராகவும் ஆண்-பெண் சமத்துவம் குறித்தும் நவீன அறிவியல் கருத்துகளையும் பேசியது.
இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் பிராட்லாவின் சீடர்கள் அதை நடத்தினர். பிராட்லாவுக்கும் மார்க்ஸுக்கும் இடையே கருத்தியல் ஒற்றுமை, வேற்றுமைகளைக் கூறும் தமிழவன், பிராட்லாவின் தாக்கம், பின்னாள்களில் பகுத்தறிவு இயக்கத்தை முன்னெடுத்த பெரியாருக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கக்கூடிய சாத்தியமும் பேராசிரியர் வீ.அரசுவின் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இந்நூலில் பதிவாகியுள்ளது.
ஆங்கிலக் கல்வி மரபில் பிற பல்கலைக்கழகங்கள் செயல்பட்டபோது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கான ஒரு களமாக இருந்ததும் பிற்காலத்தில் தமிழகத்தில் தோன்றிய பல்கலைக்கழகங்கள் அந்த மரபுத் தொடர்ச்சியை இழந்ததும் குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பல்கலைக்கழகங்கள், தமிழ்த் துறைகள், ஊடகங்கள் போன்றவை தமிழ்ச் சிந்தனைகளை வளர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனவா என்கிற கேள்வி எழுப்புவதும் முன்னோடிகளின் பங்களிப்பைப் சமூகத்துக்கு நினைவுறுத்துவதுமே இந்நூலின் உள்ளடக்கம் எனலாம். - ஆனந்தன் செல்லையா
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
தமிழவன்
எதிர் வெளியீடு
விலை: ரூ.400
தொடர்புக்கு: 04259-226012
ஒரு கோயிலின் வரலாறு: வழிபாட்டின் தொன்மங்களையும் பண்பாட்டின் அசைவுகளையும் எளிய தமிழ் நடையில் இந்த நூல் விளக்குகிறது. மதுரையையும் அவனியாபுரத்தையும் தாய் - சேய் எனச் சுட்டிக்காட்டியிருக்கிறது இந்நூல். மதுரையைப் பற்றி அறியாத பல தகவல்களைச் சுவாரசியமூட்டும் வகையில் நூலாசிரியர் இந்த நூலில் அளித்திருக்கிறார்.
நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவனியாபுரத்தின் வாசம் மணக்கிறது. நகரமயமாதலின் விளைவாக அழிந்து போய், மிஞ்சியிருக்கும் கல்வெட்டு, கோட்டைச்சுவர் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது இந்த நூல். பாண்டியர் காலத்தின் பழமையான செவந்தீசுவரர் கோயிலை முன்னிலைப்படுத்தியுள்ள இந்த நூல், அதன் வழி ஒரு வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது. - அய்யனார் ஈடாடி
பாண்டியர் காலத்துப் புராதன கோயில்
த.வினோத்
தென்கூடல் வரலாற்று ஆய்வு மையம்
விலை: ரூ.180
தொடர்புக்கு:
70941 10092
உணர்வெனும் கவிதை நூலிழைகள்: அனுபவத்திலிருந்து உருக்கொள்ளும் கவிதைகள், வாசகருக்கான வாசிப்பு ருசியை வழங்குவதோடு, அக்கவிதைகளில் வாசகர் தன்னைக் கண்டெடுக்கும் வாய்ப்பினையும் வழங்குகின்றன. அத்தகைய நெகிழ்வான வாசக அனுபவத்தைத் தரும் கவிதைகளை எழுதியுள்ளார் சீனு ராமசாமி. பால்யத்தின் நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்ப்பதும், அந்த நினைவுகளுக்குள் மூழ்கியெழுவதும் எல்லோருக்குமே பிடித்தமானது என்றாலும், ஒரு கவிஞராகப் பால்யத்துக்குள் முற்றாகக் கரைந்துபோகிற ரசவாதம் சீனு ராமசாமிக்குள் வெகு இயல்பாக நடந்தேறுகிறது.
‘பழகும் மிதிவண்டி காலத்திற்குப்/பின்னே மூச்சிரைக்க ஓடிவந்த/ஒருவரின் முகம் மறந்த காலத்தில்/மீண்டும் அம்முகம் நினைவில் வந்தது/பின்பக்க இருக்கைக்குக் கீழே/பிடித்த கையாக...’ என்ற கவிதை வரிகள் சைக்கிள் ஓட்டப் பழகிய சிறுபிராயத்தில் நம் பின்னிருக்கைகளைப் பிடித்திருந்த அந்தக் கைகளைப் பற்றிய எண்ணங்களுக்குள் நம்மை அமிழ்த்திப்போகிறது.
‘இன்றும் எங்கோ/மிதிவண்டிக்குப் பின்/இருக்கையைப் பிடித்தபடி/ஓடி வருகின்றன/மறக்கப்பட்டுவிடும்/ஒருவரின் கை’ என்று முடியும்போது நம்மை வேறொரு தளத்திற்கு மடைமாற்றும் நுட்பமாகச் செய்துவிடுகிறது இந்தக் கவிதை. அலங்காரமற்ற எளிய சொற்களால் கவிதைகளைப் புனையும் கவிஞர், பரந்துவிரிந்த காட்சிகளையும் அழகான கவிதையாக்கியுள்ளார்: ‘பாலருந்திய/நிலையிலேயே/குழந்தை/தூங்குகிறது/தாயும் தூங்குகிறாள்/அங்கு தெய்வம்/கண் விழித்திருக்கிறது’ என்ற வரிகள் விரித்துக்காட்டும் சித்திரம் மனக்கண்ணில் அப்படியே காட்சியாக நிலைக்கிறது.
மன விசாரணைகளும் கவிதைகளாக எழுதப்பட்டிருந்தாலும், வாசகனுக்குக் கதவடைப்பு நடத்தாமல் உள்ளிழுத்துக்கொள்ளும் மொழியினால் எழுதப்பட்டுள்ள விதம் சிறப்புக்குரியது. பிறந்த மண்ணின் மீதான மாறாத நேசத்தையும், வளர்ந்து திரிந்த வாழிடத்தின் ஒவ்வொரு குறுக்குச்சந்துகளையும் கவிதையில் பதிவுசெய்யும் பேரார்வம் சீனு ராமசாமியிடம் அதிகமாகவே இருக்கிறது என்பதற்கான சாட்சியே இந்நூல். - மு.முருகேஷ்
மாசி வீதியின் கல்சந்துகள்
சீனு ராமசாமி
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.320
தொடர்புக்கு: 99404 46650
அயல்மொழி நூலகம் | சுயமரியாதையும் பெண்ணுரிமையும்: தமிழில் பா.ஜீவசுந்தரி எழுதிய ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வாழ்வும் பணியும்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் வி.பாரதி ஹரிஷங்கர். தமிழரின் மரபையும் பண்பாட்டையும் சமகால இலக்கியச் செழுமையையும் பிற மொழி பேசுவோருக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தேவதாசி முறையை ஒழிக்கப் போராடியவரும் திராவிடர் கழகத் தூண்களில் ஒருவருமான மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரைப் பற்றிய விரிவான சித்திரத்தை இந்நூல் வழங்குகிறது.
திராவிட இயக்க வரலாற்றில் முன்னணிப் போராளியாகச் செயல்பட்ட அவரது பங்கு, உரிய வகையில் அங்கீகாரம் பெறவில்லை. பொதுவாழ்விலும் அரசியல் களத்திலும் சிறப்பாகச் செயல்பட்ட இவருக்கு மத்திய அரசு எந்தவொரு அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை என்பதையும் நூலாசிரியர் பா.ஜீவசுந்தரி இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். சமூக மாற்றத்துக்குப் பெண்களின் அரசியல் பங்களிப்பு அவசியம் என்பதைத்தான் ராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கை உணர்த்துகிறது. - பிருந்தா சீனிவாசன்
The Life And Work of Moovalur Ramamirtham Ammaiyar
B.Jeevasundari
(In English: V Bharathi Harishankar)
Zubaan வெளியீடு
விலை: ரூ.495
தொடர்புக்கு:
contact@zubaanbooks.com
திண்ணை | திருச்சி தில்லைநகர்ப் புத்தகக் காட்சி: ஆரோக்யா புக்ஸ், புக் வேர்ல்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தில்லை நகர்ப் புத்தகக் காட்சி, தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்றுவருகிறது. மே 31இல் தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி ஜூன் 9 வரை நடைபெறவுள்ளது. புத்தகக் காட்சி நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் கிடைக்கும். புத்தகக் காட்சியில் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதத் தள்ளுபடி தரப்படும். தொடர்புக்கு: 8870420470
பட விளக்கத்துக்கு நாவல் பரிசு: யாவரும் பதிப்பகம், விரைவில் வெளியிடவுள்ள ‘என் பெயர் கட்டியங்காரன்’ என்கிற புதிய நாவலுக்கு உரிய ஒரு படத்தை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்தப் படம் குறித்து உரிய விளக்கம் (decode) தரும் ஐவருக்கு அந்த நாவல் பரிசாக அனுப்பிவைக்கப்படும் என அந்தப் படத்துடன் அறிவிப்பு செய்துள்ளது யாவரும் பதிப்பகம். இது வானவில் பதிப்பக உரிமையாளர் கார்த்திகேயன் புகழேந்தி எழுதிய நாவல்.