Published : 14 Apr 2018 09:32 AM
Last Updated : 14 Apr 2018 09:32 AM

தமிழ் வளர்க்கும் மையங்கள்: வெறும் அறிவிப்பாக நின்றுவிடக் கூடாது!

ந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள் அம்மொழியைக் கற்றுக்கொள்ள இந்தி பிரச்சார சபாக்கள் இருப்பதுபோல, பிறமொழியினர் தமிழைக் கற்றுக்கொள்ளும்வகையில் தமிழ் வளர் மையத்தைத் தொடங்க இருப்பதாக தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருக்கிறார். வரவேற்கத்தக்க அறிவிப்பு இது. அந்நிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும்போதுதான் அம்மொழியின் பண்பாட்டுப் பெருமைகளை மற்றவர்களும் அறிந்துகொள்ள முடியும். ஆகவே, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ள திட்டமும் நோக்கமும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அறிவிப்பாக மட்டுமே நின்றுவிடக் கூடாது.

நாமக்கல்லில் சமீபத்தில் நடந்த தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர் மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இதன்மூலம், தமிழர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் வாழும் 17 நாடுகளில் இம்மையத்தின் கிளைகள் உருவாக்கப்படும். பிறமொழியினர் தமிழ் கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தி பிரச்சார சபாவை முன்மாதிரியாகக் கொண்டு, இம்மையம் செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிகிறது. அதற்காக மொழிப்பாடங்கள் எளிமைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தி பிரச்சார சபாவின் வெற்றிக்குக் காரணம், எளிமையான பாட முறைகள் மட்டுமே அல்ல. குறைந்த கட்டணத்தில் அனைத்து வயதினரும் இந்தி கற்றுக்கொள்ளும் வகையில், தெளிவான பாடத்திட்டங்கள் அதில் அமைந்திருக்கின்றன. பாடநூல்களும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதுடன், தேர்வுகளும் வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்படுகின்றன. வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களுக்கும் பட்டயங்களுக்கும் உரிய அங்கீகாரமும் உண்டு.

தமிழ் வளர் மையங்களை உருவாக்கும்போது தெளிவான பாடத்திட்டங்கள், பாட நூல்கள், ஆசிரியர்கள், தேர்வுகள் என அனைத்திலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழக்கமான கல்விப் பணிகளில் அதையும் ஒன்றாகச் சேர்த்துவிடுவதுடன் அரசு ஒதுங்கிக்கொண்டுவிடக் கூடாது.

உலக அளவில் பேசப்படும் மொழிகளில் 16-வது இடத்திலிருக்கும் தமிழை நான்கு ஆண்டுகளுக்குள் 10-வது இடத்துக்குக் கொண்டுவரும் முயற்சி இது என்று அமைச்சர் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக வெளிநாடுகளிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் திட்டமிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ்ச் சங்கங்களின் துணையோடு தமிழ் வளர் மையங்களைத் தொடங்குவது பயனளிக்கக்கூடியதாக இருக்கும். ஒரு தொலைநோக்குப் பார்வையோடு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டம் இது. அரசு உரிய அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x