

தமிழில் புதுக்கவிதைக்கு வித்திட்ட முன்னோடி பாரதியார். இவர் போட்டுத் தந்த தடத்தில் தமிழ்க் கவிதை, கம்பீர நடைபோடத் தொடங்கியது. தமிழில் புதுக்கவிதை எழுதத் தொடங்கி, ஒரு நூற்றாண்டினைத் தொட்டிருக்கும் வேளையில், நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கவிதை முகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.
தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்று வரும் திருநெல்வேலி மாவட்ட ‘பொருநை விழா’ 2024ஐ முன்னிட்டுத் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில், பாரதியார் முதல் மதார் வரையிலான 59 கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நெல்லைச் சீமையின் மூத்த கவிஞர்களான கல்யாண்ஜி, விக்ரமாதித்தன், தேவதேவன், கலாப்ரியா, தேவதச்சன், மு.சுயம்புலிங்கம், வண்ணநிலவன் உள்ளிட்ட பலரோடு தற்காலத்தில் எழுதிவரும் இளம் கவிஞர்களின் கவிதைகளையும் தொகுத்திருப்பது நல்முயற்சி.
அது மட்டுமின்றி, தமிழ்க் கவிதைகளின் போக்கினை அறிந்துகொள்ளும் நல்வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது. ‘காற்றில் வாழ்வைப்போல்/வினோத நடனங்கள் புரியும்/இலைகளைப் பார்த்திருக்கிறேன்/ஒவ்வொரு முறையும்/இலையைப் பிடிக்கும்போது/நடனம் மட்டும் எங்கோ/ஒளிந்து கொள்கிறது’ தேவதச்சனின் இந்தக் கவிதை வரிகளைப் போல, இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் நம்மை ஆர்வத்தோடு உள்ளிழுத்துக்கொள்கின்றன. - மு.முருகேஷ்
வினோத நடனங்கள்
(நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கவிதைகள்)
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம்
விலை: ரூ.150
நாம் யாராக இருக்கிறோம்? - கவிஞர் குட்டி ரேவதி ஆசிரியராக இருந்து நடத்திய ‘பனிக்குடம்’ இதழ்களில் இருந்து பாமா, சிவகாமி, அம்பை உள்ளிட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து நா.கோகிலன் ‘பனிக்குடம் இதழ் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளார்.
இக்கதைகள் சமூகத்தில் பெண்களின் இருப்பை அச்சு அசலாக வெளிப்படுத்துகின்றன. வாழ்வுக்கான அலைதல், நிறைவுகொள்ளா வாழ்க்கைப் பயணம், விளிம்பில் நிற்பதன் பாடுகள், துரோகங்கள், நிராகரிப்புகள், வலிகள் என யாவற்றையும் சித்தரிக்கும் கதைகள் இவை.
அம்மாவின் அணைப்புக்காக ஏங்கும் மகளின் ஏக்கம், நிம்மதியான உறக்கத்துக்கான கணத்தை உணரச் செய்தல், அரச வாழ்க்கையில் அப்பாவிகளைக் கொன்றதற்காக மன்னிப்புக் கேட்கும் அரச குமாரர்கள் உண்டா என்னும் கேள்வியை ‘குந்தி’ மூலம் கேட்கச் செய்தல் எனத் தொகுப்பின் கதைகள் வாசிப்போரை உணர்வுபூர்வமாக இணைக்கிறது. சமூகத்தில் பெண்கள் மீதான நம் பார்வையையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது இந்தத் தொகுப்பு. - ந.பெரியசாமி
பனிக்குடம் இதழ் சிறுகதைகள்
தொகுப்பு: நா.கோகிலன்
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9080909600
உரிமைகளைப் பெறும் வழி: மக்கள்தொகையில் சரிபாதி அங்கம் வகிக்கும் பெண்கள் அனைவருக்கும் முழு விடுதலை கிடைத்துவிடவில்லை. தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போதும் பறிக்கப்படும்போதும் அவற்றைச் சட்டரீதியாகப் பெறுவதற்கான விழிப்புணர்வும் போராடுவதற்கான துணிவும் பலருக்கு இல்லை. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வையும் துணிவையும் ஏற்படுத்தும் முயற்சியே இந்நூல்.
வீடு, பணியிடம், திருமண உறவு, பொதுவெளி எனப் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகளையும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான சட்ட வழி காட்டுதல்களையும் உதாரணங்களோடும் புள்ளிவிவரங்களோடும் அளித்திருக்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.விமலா. இந்தக் கட்டுரைகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியானவை. - பிருந்தா
பெண்ணுக்கு நீதி
நீதிபதி எஸ்.விமலா
அன்பு பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 7338984668
கதைமாந்தர்களின் கதைகள்: பிரபல குஜராத்தி எழுத்தாளர் தினகர் ஜோஷி எழுதிய நூலைத் தமிழில் ‘மகாபாரதத்தின் தெய்வீக புருஷர்கள்’ என்கிற பெயரில் ராஜலட்சுமி சீனிவாசன் மொழிபெயர்த்திருக்கிறார். மகாபாரதத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரங்கள் குறித்து ‘சித்திரலேகா’ வார இதழில் தினகர் ஜோஷி தொடர் கட்டுரைகளை எழுதினார்.
அதைத் தொடர்ந்து ஆண் கதாபாத்திரங்கள் குறித்து எழுதும்படி பலரும் அவரை வற்புறுத்த, அதன் விளைவாக மலர்ந்திருக்கிறது இந்நூல். சகுனி, கர்ணன், பீஷ்மர் அசுவத்தாமன் உள்ளிட்ட 13 கதாபாத்திரங்களைப் பற்றிய கதைகளும் நிகழ்வுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சில கதாபாத்திரங்கள் பற்றி மக்களிடையே உலவும் கற்பனைக் கதைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மூல நூலில் இருக்கும் உதாரணங்களோடு தினகர் ஜோஷி விளக்கியிருக்கிறார். - ப்ரதிமா
மகாபாரதத்தின் தெய்வீக புருஷர்கள்
தினகர் ஜோஷி
தமிழில்: ராஜலட்சுமி சீனிவாசன்
வானவில் புத்தகாலயம்
விலை: ரூ.499
தொடர்புக்கு: 7200050073
நம் வெளியீடு: மகான்களின் வழியில் மோட்சம் மகான்களின் வழியைப் பின்பற்றித் தூய மனதுடன் நாம் இறைவனைச் சிக்கெனப் பிடித்து, அவனை நோக்கிப் பயணிக்க வேண்டும். மகான்களின் வழியில் நடந்து, வர்களது பெருமைகளை உணர்ந்துகொண்டால், அவர்களின் நடத்தையைப் போன்றே நமது நடத்தையும் அமைந்துவிடும். மனிதரின் வாழ்க்கைப் பயணத்துக்கு உரிய விதிகளாக மகான்களின் வாக்கும் வாழ்வும் விளங்குகின்றன.
அவர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய படிப்பினைகள், நமது வாழ்வைச் சிறப்பாக்கும். மகான்கள் நம் அஞ்ஞான இருளைப் போக்குகின்றனர். கடல் போன்ற நம் சம்பிரதாயங்களில் இருந்து, நமக்குப் புரியாத விஷயங்களை மகான்கள் எடுத்துக் கூறுகின்றனர். மகான்கள் குணத்தில் தாழ்ந்தோரை ஞானத்தால் நிரப்புகின்றனர். மகான்களை வணங்கி, அவர்களின் பொன்மொழிகளைக் கேட்க முயன்றால், நாம் மெய்ஞானம் பெறுவது உறுதி. அதற்கான வழியைச் சொல்லும் நூல் இது.
சமயம் வளர்த்த
சான்றோர்
கே.சுந்தரராமன்
விலை: ரூ.320
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
திண்ணை
புரோகிரஸ் பதிப்பக நூலின் மறுபதிப்பு: மாஸ்கோவைச் சேர்ந்த புரோகிரஸ் பதிப்பகம் பல நல்ல ரஷ்ய நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளது. சிங்கின் ஜத்மாத்தவின் ‘அன்னை வயல்’, ‘மிகயீல் ஷோலகவ் கதைகள்’, குருஷ்சேவின் ‘சமாதான சகவாழ்வு பற்றி - தொகுப்பு’ உள்ளிட்ட பல நூல்களை வெளியிட்டுள்ளது. புரோகிரஸ் பதிப்பகம் வெளியிட்ட லெனின் இணையரான ந.கா.க்ரூப்ஸ்க்காயா எழுதிய ‘இளைஞர்களைக் கம்யூனிச முறையில் பயிற்சி வளர்த்தல்’ நூல் மலர் புக்ஸ் வெளியீடாக மறுபதிப்பு காணவுள்ளது.
‘ஞாலம்’ நூல் அறிமுக விழா: நிலவுரிமைப் போராளியான அத்திப்பாக்கம் அ.வேங்கடாசல நாயகர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர். இவரது ஆக்கங்களின் திரட்டை பேரா.வீ.அரசு பதிப்பித்துள்ளார். இவர் குறித்து எழுத்தாளர் தமிழ்மகன் ‘ஞாலம்’ என்கிற பெயரில் நாவல் எழுதியிருக்கிறார். இந்நூலின் அறிமுக விழா, இன்று (01.06.24) காலை 10 மணிக்கு சென்னை, குரோம்பேட்டை, படவேட்டம்மன் கோயில் அருகிலுள்ள ஜம்பு மஹரிஷி சமுதாய நலக் கூடத்தில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர்கள் ரெங்கையா முருகன், அ.மோகனா, கதிர்பாரதி, சரவணன் சந்திரன் ஆகியோர் பேசவுள்ளனர்.
திருவான்மியூர் புத்தகக் காட்சி: சென்னை திருவான்மியூர் கலாக்ஷேத்திரா சாலையிலுள்ள ஜெய கல்யாண மண்டபத்தில் ஜூன் 9 வரை புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடக்கும் இந்தப் புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் 10 சதவீதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும். தொடர்புக்கு: 9884515879