நூல் வெளி: நூல் கொள்முதல் கொள்கை | விமர்சனங்களும் தயக்கங்களும்

நூல் வெளி: நூல் கொள்முதல் கொள்கை | விமர்சனங்களும் தயக்கங்களும்
Updated on
3 min read

தமிழ்நாட்டின் அரசு நூலகங்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நூல்கள் எதுவும் வாங்கப்படவில்லை என்பது பதிப்பாளர்களின் மிகப் பெரிய கவலையாக இருந்துவந்தது. 2021 திமுக அரசு அமைந்த பிறகு, ஏற்கெனவே உள்ள நூல் கொள்முதல் கொள்கையில் பல குளறுபடிகள் இருந்ததாகவும் அதனால் புதிய கொள்கை வகுக்கப்பட்ட பிறகே நூல் கொள்முதல் தொடங்கும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககம் ‘வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024’ஐ வெளியிட்டது. நூலகங்களுக்கு வாங்கப்படுவதற்கான நூல் தேர்வு, நிதி ஒதுக்கீடு, விலை நிர்ணயம், நூலகங்களுக்கு நூல்களை அனுப்பி வைத்தல், பதிப்பாளர்களுக்குப் பணம் செலுத்துதல் என அனைத்துக்குமான கொள்கை விதிமுறைகள் இதில் விவரிக்கப்பட்டிருந்தன.

இந்தக் கொள்கை அறிக்கை தமிழ் இணைய மின்னூலக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது (https://shorturl.at/YvHt8). நூல் கொள்முதலிலிருந்து பணம் செலுத்துவதுவரை அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வது, ஒரு சார்புத்தன்மையைத் தவிர்ப்பது, நீண்ட காலம் நூல்கள் வாங்கப்படாமல் இருக்கும் நிலையை மாற்றுதல் எனப் பல அம்சங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது.

முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கு அனைத்து நடைமுறைகளும் இணையவழியில் மேற்கொள்ளப்பட வேண்டியவையாக மாற்றப்பட்டுள்ளன. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பைப் பெற்ற இந்தக் கொள்முதல் கொள்கை குறித்து, பதிப்பாளர்கள் சிலர் விமர்சனங்களையும் சந்தேகங்களையும் முன்வைக்கின்றனர்.

சிறிய பதிப்பாளர்களின் சிக்கல்கள்: இந்தக் கொள்கை குறித்துப் பெயர் வெளியிட விரும்பாத பதிப்பாளர் ஒருவர் பல விமர்சனங்களை முன்வைக்கிறார். “நூல் கொள்முதலுக்கு விண்ணப்பக் கட்டணம் ஒரு நூலுக்கு ரூ.100ஆக முன்பு இருந்தது. இப்போது பரிசீலனைக் கட்டணம் என்கிற பெயரில் ரூ.450 செலுத்தப்பட வேண்டும். மிகச் சிறிய அளவில் பதிப்பகம் நடத்துகிறவர்கள்கூட ஒவ்வோர் ஆண்டும் 20 நூல்கள் வரை பதிப்பிக்கிறார்கள். ஆக, விண்ணப்பிப்பதற்கே ரூ.10,000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

நூல்கள் வாங்கப்படுவதற்கும், எவ்வளவு பிரதிகள் வாங்கப்படும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதிலும் தெளிவில்லை. இது சிறிய பதிப்பாளர்களுக்குப் பெரிய நிதிச் சுமையாகும். அனைத்து நூல்களையும் பரிசீலிக்க நூலின் 25 பக்கங்களை பிடிஎஃப் கோப்பாகக் கேட்கப்படுகிறது. பெரிய பதிப்பகங்களுக்கு இதில் பிரச்சினை இருக்காது.

ஆனால், எங்களைப் போன்ற சிறிய பதிப்பாளர்கள் நூல் உருவாக்கத்தின் ஒவ்வொரு செயல்முறையையும் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளும் நிலை உள்ளது. முந்தைய ஆண்டுகளில் வெளியான நூல்களின் பிடிஎஃப் கோப்புகளைத் தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது. ஆக, இந்தப் புதிய கொள்கை கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் அனைத்து வசதிகளுடனும் இயங்கும் பெரிய பதிப்பகங்களுக்குச் சாதகமாகவும் சிறிய பதிப்பாளர்களுக்குப் பாதகமாகவும் அமைய வாய்ப்புள்ளது” என்கிறார்.

“கடந்த நான்கு ஆண்டுகளாக நூலக ஆணை கிடைக்கவில்லை. மிக நெருக்கடியான சூழ்நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வெளிப்படைத்தன்மையுடன் கொள்கை வெளியிடப்பட்டதில் மகிழ்ச்சிதான். பரிசீலனைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

அனைத்து நூல்களுக்கும் ஐ.எஸ்.பி.என். எண் (ISBN-International Standard Book Number) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது 2024இல் வெளியிடப்பட்ட நூல்களுக்கு மட்டும் கேட்டால் பரவாயில்லை. முந்தைய ஆண்டுகளில் வெளியான நூல்களுக்கு இந்த எண்ணை வாங்குவது கடினம். பரிசீலனைக் கட்டணம் அதிகமாக இருந்தால்தான் தரமான நூல்களுக்கு மட்டும் விண்ணப்பிப்பார்கள் என்பது கொள்கை வடிவமைத்தவர்கள் தரப்பு நியாயமாக இருக்கிறது.

அதற்குப் பதிலாக ஒரு பதிப்பாளர் இத்தனை நூல்களுக்குத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்திவிடலாம். மேலும், நூல்களின் பக்கங்கள், அளவு எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற உருவாக்கம் சார்ந்த தர நிர்ணய விதிமுறைகளை அரசே வெளியிட்டுவிடலாம். நூலின் உள்ளடக்கத் தரத்தை அரசு நியமிக்கும் குழுவினர்தான் தீர்மானிக்க வேண்டும்” என்கிறார் செண்பகா பதிப்பகத்தின் உரிமையாளர் ஆர்.எஸ்.சண்முகம்.

“நூலகத் துறையிடம் போதிய நிதி ஆதாரம் இல்லை என்று சொல்வதற்கில்லை. நூலக வரி வசூலிக்கப்படுகிறது. அதோடு பதிப்பாளர் நல வாரியம் தொடங்கப்பட்டு, அதற்காக நூலகக் கொள்முதல் ஆணைகளில் 2.5% பிடித்தம் செய்யப்பட்ட தொகை இருக்கிறது. இந்த நிலையில், நலிவடைந்திருக்கும் பதிப்பாளர்களிடம் விண்ணப்பத் தொகையை அதிகமாக வாங்குவது எந்த வகையில் நியாயம்?” என்று சில பதிப்பாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நூல்கள் தேர்வும் வாசகர்களும்: புதிய கொள்கை சார்ந்து யாவரும் பதிப்பகத்தின் பதிப்பாளர் ஜீவ கரிகாலன் முற்றிலும் வேறொரு கோணத்தை முன்வைக்கிறார். “நான் ஒரு வாசகனாகத் தொடங்கி, கடந்த 13 ஆண்டுகளாகப் பதிப்பகம் நடத்திவருகிறேன். இதுவரை ஒரு முறைகூட நூலக ஆணை பெற்றதில்லை. என்னுடைய பதிப்பகத்தில் இதுவரை தீவிர இலக்கிய நூல்களுக்கே முக்கியத்துவம் அளித்துவருகிறேன்.

பெரும்பாலான நூல்கள் 300 பிரதிகள் மட்டுமே விற்பனை ஆகும். புதிய எழுத்தாளர்கள் 75க்கு மேற்பட்டோரின் நூல்களை வெளியிட்டிருக்கிறோம். நூலகங்களுக்கு வாங்கப்பட வேண்டிய நூல்களை, வாசகர்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிலையில் நாங்கள் வெளியிட்ட நூல்களையும், அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் அந்த வாசகர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். இது நூலக ஆணை என்பதன் தன்மையையே மாற்றுகிறது.

நூலகங்களுக்கு நூல்களைத் தேர்ந்தெடுப்பவர்கள்தான் புதிய நூல்களையும் எழுத்தாளர்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் நூல்களும் வாங்கப்படுவது நல்ல விஷயம்தான். ஆனால், வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதே நூல்களைக் கொள்முதல் செய்வதற்கான அடிப்படைத் தகுதியாக ஆகிவிடக் கூடாது.

நல்ல நூல்களைக் கொண்டுவருகிற பதிப்பாளர்கள் வணிகத்தில் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை என்கிறபோது, குறைந்தபட்ச வருமானத்தை உறுதிசெய்து, அவர்கள் தொடர்ந்து செயல்பட வைப்பதற்கானதுதான் நூலக ஆணை. இது பதிப்பாளர்களுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் வணிகம்போல் ஆகிவிடக் கூடாது” என்கிறார் அவர்.

பதிப்பாளர்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்துப் பொது நூலக இயக்கத்தைச் சேர்ந்த அதிகாரியிடம் பேசினோம். “நூல் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை வந்துவிடக் கூடாது என்றும், முறையான பரிசீலனை இல்லாமல் நூல்கள் வாங்கப்பட்டு, அதற்கான தொகை செலுத்தப்படும் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று விரும்புகிற பதிப்பாளர்கள் மட்டுமே இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் 4,500 நூலகங்கள் இருக்கின்றன. நூல் கொள்முதல் செய்யப்பட்டால் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும். அதன் மூலம் பதிப்பாளர்கள் பயன்பெறுவார்கள். ரூ.450 என்பது நவீன காலத்தில் அதிகரித்துவிட்ட பல்வேறு நடைமுறைகளுக்குத் தேவைப்படும் நியாயமான விண்ணப்பக் கட்டணம்தான். விண்ணப்பிக்கப்பட்ட நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு இணையதளத்தில் இருக்கும்.

எனவே, தரமான நூல்கள் வாசகர்களின் கவனத்தை ஈர்த்து நூலகங்களுக்குக் கொள்முதல் செய்யப்படும். ஐ.எஸ்.பி.என். எண், விண்ணப்பித்தால் ஒரே நாளில் கிடைத்துவிடும். அதனால், அதில் சிரமம் ஒன்றும் இல்லை. இதுவரை 300 பதிப்பாளர்கள் சுமார் 2,500 நூல்களுக்கு விண்ணப்பித்துவிட்டார்கள். இவர்களில் சிறு பதிப்பாளர்களும் உள்ளனர் என்பது கவனம் கொள்ளத்தக்கது” என்றார் அவர்.

பொதுவாக, எந்தத் துறையிலும் புதிய மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொள்ளச் சிலர் தயங்குவார்கள். அதே நேரம், புதிய கொள்கைகள் மீதான அனைத்து விமர்சனங்களையும் பழமைவாதம் சார்ந்த தயக்கம் என்று ஒதுக்கிவிடுவதும் சரியல்ல.

புதிய நூல் கொள்முதல் கொள்கை குறித்த விமர்சனங்களைத் திறந்த மனதுடன் பரீசிலித்துப் பதிப்பாளர்களின் நியாயமான கவலைகளைச் சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை. அதுவே இந்தப் புதிய கொள்கையின் நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றும்.

- தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in