Published : 07 Apr 2018 09:45 AM
Last Updated : 07 Apr 2018 09:45 AM

பரணி வாசம்: காட்டிக் கொடுத்த டைரி

நெ

ல்லை சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 96 பேரில் இருவர் மட்டுமே தற்போது உள்ளனர். ஒருவர் ஆர்.நல்லகண்ணு. மற்றொருவர் ‘வாத்தியார்’ ஆர்.எஸ்.ஜேக்கப். 1945 - 1950 ல் நடைபெற்ற தனது வாழ்க்கை அனுபவத்தை, நெல்லை சதி வழக்கின் பின்புலத்தில் நாவலாக எழுதியுள்ளார் ஆர்.எஸ்.ஜேக்கப்.

தூத்துக்குடி அருகே உள்ள நயினார்புரத்தில் இளம் வயது ஆசிரியர் ஜேக்கப் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்கிறார். ஊரில் உள்ள அனைத்து சாதிக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் வாத்தியாரின் செயல், உள்ளூர் பண்ணையாருக்குப் பிடிக்கவில்லை. பிறகு, அவர் வீட்டு மாடுகளை யார்தான் மேய்ப்பார்கள்?

அந்த நேரத்தில் தடை செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் ரகசியக் கூட்டம் நடத்த, மாலை நேரத்தில் பள்ளி வளாகத்தைத் தருகிறார் வாத்தியார். ஆனால், அந்தக் கூட்டத்தில் வாத்தியார் கலந்துகொள்ளவில்லை. தகவல் அறிந்த காவல் துறை வாத்தியாரைக் கைது செய்கிறது. குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வாத்தியாரின் நாட்குறிப்பு இருந்துவிடுகிறது.

போலீஸ் லாக் அப்பில் சித்திரவதை செய்து " பாலதண்டாயுதம் எங்கே? " என்று கேட்கிறார்கள். காலில் இரும்பு உருளைகளை உருட்டி, மேலே ஏறி அழுத்துகிறார்கள். வயிற்றில் பிள்ளைப்பூச்சியைக் கடிக்கவிட்டு துடிக்கவைக்கிறார்கள். மௌனம் சாதிக்கிறார் வாத்தியார்.

முதலில் பாளையங்கோட்டை கொக்கிரக்குளம் சிறைச்சாலை, பின்னர் மதுரை சிறைச்சாலை...சுமார் நான்காண்டு காலம் கடுமையான சிறைவாசம். “வாத்தியாருக்கு மரண தண்டனைதான் கிடைக்கும் எனத் தெரிகிறது” என்கிறார், வழக்கறிஞர் என்.டி.வானமாமலை.

வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன், கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் செல்லும்போது ஜேக்கப் எழுதிய டைரிகள் அனைத்தையும் எடுத்துச் செல்கிறார். ஜேக்கப் அந்த நாட்குறிப்பில் பாலதண்டாயுதம் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்ததைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அதே சமயம், கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க எடுத்த முயற்சிகளையும் எழுதி, கர்த்தருக்கு நன்றி என்று எழுதியிருப்பதையும் படிக்கிறார். ஜேக்கப், ஒரு வெள்ளந்தியான மனுஷன் என்ற முடிவுக்கு வந்து, அவரை விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறார்.

கைதுசெய்யப்படும் வரை உள்ள சம்பவங்களை , ‘வாத்தியார்’ நாவலிலும், சிறை சித்திரவதைகளை பற்றி, ‘மரண வாயிலில்’ என்ற நாவலிலும் எழுதி இருக்கிறார் ஜேக்கப். மூன்று நாவல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆசியாவில் நீண்ட நாட்களாக வெளிவரும் மாத இதழான ( சுமார் 170 ஆண்டுகள் ) ‘நற்போதகம்’ இதழின் ஆசிரியராக 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

"போலீஸ்காரர்கள் என்னை விடுதலை செய்யும்போது, ‘எங்க அடிக்கு நீயெல்லாம் ஆறு மாசம் உயிர் பொழைச்சிருந்தால் அதிகம்.. கல்யாணம் எல்லாம் பண்ணாதே..’ என்றார்கள். அவர்களும் போய்ச் சேர்ந்திருப்பார்கள். திருமணம் ஆகி எனது துணைவியாரும் மறைந்து ஒன்பது வருஷம் ஆயிப்போச்சு.. என்னோட பிள்ளைகளும் வளர்ந்து பெரிய ஆளாகிவிட்டார்கள். நான் இந்த 92 வயதில் உயிரோடு இருக்கிறேன்.." என்று சிரிக்கிறார் ஜேக்கப்.

- இரா.நாறும்பூநாதன்,
தொடர்புக்கு: narumpu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x