நூல் வெளி: பெண் வழிக்கான கைத்தடி

நூல் வெளி: பெண் வழிக்கான கைத்தடி
Updated on
2 min read

சமூகம், குடும்பம், பெண்கள் சார்ந்த பல பிரச்சினைகள் குறித்து எழுத்தாளர் இரா.பிரேமா எழுதிய பத்து கதைகளின் தொகுப்பு இது. பாலியல் வன்முறைகள் அதிகரித்துவரும் இன்றைய காலகட்டத்தில், பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறோம் என்ற புரிந்துணர்வு இல்லாமலேயே குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

‘கள்ளிப்பாதையும் நுணாப்பூவும்’ என்ற சிறுகதை சிறுவர்களுக்குத் தக்க வயதில் ‘பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல்’ (Good touch Bad touch) குறித்துச் சொல்லிக்கொடுப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. முட்கள் நிறைந்த பாதையில் மென்மையாக மலர்ந்தும் மலராத வயதில் வாசனை வீசும் மஞ்சணத்தி மலர்களாகச் சிறுமியை அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் பிரேமா.

கதையில் பாதிக்கப்படும் சிறுமிக்கு அப்பாவாக வரும் முகுந்த், மகளின் பாதுகாப்பு குறித்து மனைவியை அடிக்கடி எச்சரித்துக்கொண்டே இருப்பது அவளுக்கு எரிச்சல் தரும்படி இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண் என்பவள் குழந்தைப்பேறு, தாய்மை என்பதோடு தொடர்புபடுத்தி, குழந்தைகளைப் பேணிப் பாதுகாப்பவளாகவும், எந்தச் சூழ்நிலையிலும் பொறுப்புணர்வுடன் இருப்பவளாகவுமே பார்க்கப்படுகிறாள். அந்த விதத்தில், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சிறுமி ரீதுவின் அம்மா மீது மட்டுமே சிறுமியை வளர்க்கும் பொறுப்பு சுமத்தப்படுகிறது எனக் கதை சொல்கிறது.

கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில், பாதிக்கப்பட்ட முதிய தம்பதிக்கு உதவும் பெண்ணாக வருகிறாள் சுனிதா. “வீட்டை விட்டு வெளியில் எங்கேயும் போகாதே. கதவைப் பூட்டியே வை.. எதையும் வெளியில் போய் வாங்க வேண்டாம். குழந்தைகள் முக்கியம். புரிந்துகொள்!” என்று அதிகாரத் தொனியில் பேசும் கணவனையும் சமாளித்து, அந்த இக்கட்டான காலத்திலும் தன்னுடைய ஆளுமையால் அவள் எவ்வாறு செயல்படுகிறாள் என்பதைச் சொல்கிறது ‘மானுடம் வென்றதம்மா’ கதை.

இன்றைய சமூகத்தில் குடும்பம் என்கிற அமைப்பில் பெண்கள் பொருளாதாரரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் நசுக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட தோழிகள் சிலர், ஒரு தோழியின் வீட்டில் சந்தித்து அவரவர்களுடைய வாழ்க்கையின் கசப்பான கதைகளைப் பேசிக் கொள்கிறார்கள்.

அதுதான் தலைப்புக் கதையான ‘எங்களோட கதை’. மாமியார், மாமனார் அலட்சியம், பொறுப்பில்லாத செலவாளிக் கணவன், மனைவியின் பொருளாதாரத்தைச் சுரண்டும் கணவன், பெற்ற பிள்ளைக்குப் பாலியல் தொல்லை தரும் தந்தை - இப்படிப் பல கதைகளைப் பேசிக்கொள்கிறார்கள்.

தனது மகளைத் திருமணம் செய்துகொடுத்த பின்னரும் அவர் பணியாற்றும் வங்கியில் உள்ள மேலாளர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாகக் கூறும் பெண்மணியின் கதை மிகவும் யோசிக்க வைக்கிறது. பெண்களால் இப்படி எல்லாரும் அவரவர்கள் கதையைக் கூறத்தான் முடியுமே தவிர, அவர் வாழ்க்கையைப் பற்றிய ஒரு முடிவும் அவர்களால் எடுக்க முடியாது என்பதே நிதர்சனம் என்று அந்தக் கதையை முடிக்கிறார் பிரேமா.

உடல் பருமன், அசிங்கமானது; ஆரோக்கியமற்றது. இந்த மாயையில் சிக்கியிருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியும் அவள் எதிர்கொள்ளும் சமூகத் தாக்குதல் பற்றியும் ‘மாயை’ கதை பேசுகிறது. ஆண்-பெண் இருவரின் திருமணப் பந்தத்தில் உருவாகும் அமைப்புதான் குடும்பம்.

முழு நேரக் குடிகாரனாக மாறிவிட்ட தன் காதல் கணவன், தன் மகனையும் குடிப்பழக்கத்துக்கு ஆளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாத பெண், விவாகரத்து செய்ய வழக்கறிஞரை அணுகும்போது, “இது அவசர முடிவு, கொஞ்சம் நேரமெடுத்து யோசியுங்கள்’ என்கிறார். பெண்தான் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற நோய் பிடித்த இந்தச் சமூகத்தைப் பற்றிய கதை ‘எனக்கான காற்று’.

பெற்ற கல்வியின் மூலம் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பங்காற்றுகிறார்கள் என்ற நிலை இருந்தும்கூட, இந்தச் சமுதாயம் பெண்களுக்கான சமுதாயமாக இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது. பெண்கள் தாமாக முன்வந்து தனக்கான உரிமையைப் போராடிப் பெற வேண்டும். இது போன்ற கதைகளைப் படிப்பதன் மூலம் அதற்கான மன தைரியத்தை ஓரளவு பெறுவது சாத்தியப்படும் என நம்பலாம்.

எங்களோட கதை
இரா.பிரேமா
ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9840969757

- தொடர்புக்கு: gsunitharose@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in