

ஓய்வுபெற்ற பேராசிரியரான ந.தெய்வ சுந்தரம் அகராதி, இலக்கணம் சார்ந்த தரவுகள் மூலமாகக் கணினிக்கு மொழித்திறனை அளிக்கும் துறைசார்ந்து இயங்கிவருகிறார்; தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். அவர் பொதுவான வாசகர்களுக்கும் அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்களுக்கும் எழும் ஐயங்களைத் தீர்க்கும் நோக்கத்துடன் ஃபேஸ்புக் கலந்துரையாடல்களை நிகழ்த்திவருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தெய்வ சுந்தரம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு சமூகம், தனது தாய்மொழி மீது மிதமிஞ்சிய பற்றுக்கொண்டு, அதை அருங்காட்சியகத்தில் வைத்து அழகு பார்ப்பது பிற்போக்கானது; மாறாகத் தனது அன்றாடச் செயல்பாடுகளில் அம்மொழிக்கு இடம் தருவதே சமூகத்தையும் மொழியையும் வாழ வைக்கும் என்கிற கருத்து மொத்த நூலுக்கும் அடிநாதமாக உள்ளது.
மொழியை ஆய்வுகளுக்கு உட்படுத்தும் மொழியியல் குறித்த விழிப்புணர்வு தமிழ் மக்களிடம் ஏற்பட வேண்டும் எனக் கூறுமிடத்தில் தொல்காப்பியரை மொழியியலாளராகவும் இலக்கண ஆசிரியராகவும் அவர் அடையாளம் காண்பது ரசிக்கத்தகுந்தது.
அவற்றின் ஊடாகத் தமிழ் இலக்கணத்தின் இயல்பு, தமிழ் அறிஞர்களின் அணுகுமுறை, அவர்களது நெறிமுறை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள விதம், தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டிய மொழிக்கொள்கை, நவீனப் பயன்பாடுகளில் தமிழைப் பொருத்துவது போன்றவற்றையும் கூறுவது தெய்வ சுந்தரத்தின் அக்கறையாக உள்ளது. - ஆனந்தன் செல்லையா
மொழியியல் பார்வையில் தமிழ் இலக்கணம்
ந.தெய்வ சுந்தரம்
அமுத நிலையம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 94442 99224
இவள் உயிர்ப்புள்ள தமிழணங்கு: பொறியாளர் மு.இராமனாதன் எழுதிய சமூகம், அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. நடைமுறைச் சம்பவங்களையும் தரவு அடிப்படையிலான தர்க்கங்களையும் கொண்டிருப்பது இந்நூலின் சிறப்பு. நூலில் சமூகம், கரோனா, புலம்பெயர் தொழிலாளர், அரசியல், தேர்தல், பெண், அதிகாரம் ஆகிய ஏழு துணைத் தலைப்புகளில் 29 கட்டுரைகள் அடங்கியிருக்கின்றன.
ஆவணப்படுத்தலில் நிலவும் அலட்சியத்தையும் அக்கறையின்மையையும் ஒரு கட்டுரை பேசுகிறது. பெண்களை விலக்கிவிட்டு, ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி வளர முடியும் என வினவி, பெண்கள் உற்பத்தியில் பங்கெடுப்பதை முன்னெடுக்க தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டம் எவ்விதம் உதவும் என்பதைப் பன்னாட்டு எடுத்துக்காட்டுகளுடன் நிறுவுகிறது இன்னொரு கட்டுரை.
‘கடவுள் ஏன் சைவர் ஆனார்?’ என்ற கட்டுரை சுவாரசியமானது. ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்ட தமிழணங்கு கறுப்பாக இருந்தாள். அதை ஒட்டி எழுந்த விவாதங்களைப் பேசுகிறது ஒரு கட்டுரை. ‘புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?’, ‘தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?’ உள்ளிட்ட பல கட்டுரைகள் சிறந்த கருத்துகளை முன்வைக்கின்றன. இப்படிச் சமூகம் எதிர்கொள்கிற பல சிக்கல்களைத் தரவுகளோடு அலசி ஆராய்ந்து தீர்வை நோக்கி நகர்த்துகிறது இந்நூல். - பால பன்னீர்செல்வம்
தமிழணங்கு
என்ன நிறம்?
மு.இராமனாதன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 044-24332924,
தமிழர் இலக்கியத் தடயங்கள்: பண்டைய தமிழர்களின் பல்லாயிரமாண்டுக் கால வாழ்வியலை நாம் அறிந்துகொள்ள தொல்லியல் துறையின் அகழாய்வுகள் நமக்குப் பெரிதும் உதவியாக உள்ளன. அத்துடன், சங்க இலக்கிய நூல்களின் வழியாகவும் சில தரவுகளை நம்மால் பெற முடிகிறது.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியின் வழியாக, அன்றைய தமிழர்களின் வாழ்க்கை முறைகளை, பண்பாட்டு விழுமியங்களை அறியும் நோக்கிலான ஐந்து கட்டுரைகளை எழுதியுள்ளார், சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியின் தமிழ் இலக்கியத் துறைத் தலைவரான பேராசிரியர் க.ர.லதா.
அறிமுகக் கட்டுரையில் சீவக சிந்தாமணியின் கதைக்கரு, கதை அமைப்பு, கதைச் சுருக்கம், காப்பியம் எழுதப்பட்ட யாப்பு அமைப்பு எனப் பல தரவுகளை அறியத் தருகிறார். அக வாழ்வில் அமைந்துள்ள வாழ்க்கைக் கூறுகள், புற வாழ்க்கையில் காணப்படும் வாழ்க்கைக் கூறுகள், சிந்தாமணியில் புராண இதிகாச உவமங்கள், ‘சிந்தாமணியும் பிற இலக்கியங்களும்’ கட்டுரைகள் ஆழமாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளன. - மு.முருகேஷ்
சீவக சிந்தாமணியில் தமிழர் வாழ்வியல்
க.ர.லதா
சாரதா பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 044-2811 4402