கச்சத்தீவு குறித்த முழுமையான ஆவணம்

கச்சத்தீவு குறித்த முழுமையான ஆவணம்
Updated on
2 min read

கச்சத்தீவு உரிமைப் பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சினை. கச்சத்தீவு நிலப்பரப்பு உருவானதில் தொடங்கி, அதன் வரலாற்றை வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் இந்நூலில் முழுமையாகப் பதிவுசெய்துள்ளார்.

கச்சத்தீவில் மீன்வளம் மட்டுமல்லாது, சில கிழங்கு வகைகள், சாயவேர்கள், மூலிகைகள் கிடைத்ததாகவும் அதற்காக ராமநாதபுரம் சேதுபதி மன்னரிடமிருந்து கடல்சார் வணிகம் செய்யும் இஸ்லாமியர் சிலர் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

பொ.ஆ. (கி.பி.) 1531ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் உடையான் சேதுபதி செப்பேட்டில் அவருக்குச் சொந்தமான எட்டுத் தீவுகளில் ஒன்றாகக் கச்சத்தீவு குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்நூல் ஆதாரபூர்வ செய்தியைச் சொல்கிறது.

அதுபோல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ராமநாதபுரம் ஆட்சியர் எட்வர்டு டர்னரிடமிருந்து கீழக்கரை மாப்பிள்ளை மரைக்காயர் மகன் ஜனாப் முகமது அப்துல் காதர் மரைக்காயருக்கும் முத்துசாமி என்பவருக்கும் சாயவேர் எடுக்க, கச்சத்தீவு குத்தகைக்கு அளிக்கப்பட்ட சான்றையும் நூலாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

மேலும், அந்தத் தீவில் உள்ள அந்தோணியார் கோயில் குறித்தும் விரிவான தகவல்கள் இந்நூலில் உள்ளன. தொண்டி அருகேயுள்ள நம்புதாழையைச் சேர்ந்த சீனிக்குப்பன் என்பவர்தான் அந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார். சுதந்திரத்துக்குப் பிறகு இலங்கை மெல்லமெல்ல இந்தத் தீவைச் சொந்தம் கொண்டாடத் தொடங்கியதைச் சில நூல்களை முன்னிறுத்திக் கூறுகிறார் நூலாசிரியர்.

இதன் தொடர்ச்சியாக இலங்கை 1955இல் கச்சத்தீவில் ராணுவப் பயிற்சி நடத்தவும் முயன்றுள்ளது. இந்தப் பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. அதற்கு அன்றைய பிரதமர் நேரு அளித்த பதிலையும் இந்த நூல் சுட்டிக் காட்டத் தவற
வில்லை.

கச்சத்தீவு பிரச்சினையைப் பேசிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அனந்தன் நம்பியார், மூக்கையா (பார்வார்டு பிளாக்), எஸ்.எஸ்.மாரிச்சாமி (திமுக), அப்துல் சமது (முஸ்லிம் லீக்), ராஜ நாராயணன் (சோஷலிஸ்ட் கட்சி) உள்ளிட்டவர்களையும் இந்த நூல் நினைவுபடுத்துகிறது.

கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்பதற்கான வலுவான சான்றுகள், அது ஏன் இந்தியாவுக்கு அவசியம் என்பன போன்றவற்றைத் தெளிவாக இந்நூலில் விளக்கியுள்ளார் இராதாகிருஷ்ணன். கச்சத்தீவு, இந்திய அரசால் இலங்கைக்குக் கையளிக்கப்பட்டதற்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியலையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. இப்படிப் பல அம்சங்களில் சம காலப் பிரச்சினையைப் பேசுவதில் கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. - விபின்

கனவாகிப் போன கச்சத்தீவு
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
புஸ்தகா பதிப்பகம்
விலை: ரூ.230
தொடர்புக்கு: 74185 55884

எளிய தெளிவுரை: ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று ‘மணிமேகலை’. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகக் கருதப்படுகின்றன. சிலப்பதிகாரத்தின் நாயகன் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையை வைத்து, அந்தக் காலத்திலேயே ஒரு காப்பியத்தை இயற்றியிருக்கிறார் சீத்தலைச்சாத்தனார். மணிமேகலை அன்பே வடிவானவர்.

துறவறம்பூண்டு, அமுதசுரபியைப் பெற்று, மக்களின் பசி தீர்க்கிறார். அறத்தைப் போதிக்கிறார். கருணை காட்டுகிறார். காப்பியம் முழுவதுமே மனிதநேயத்தால் நிரம்பியிருக்கிறது. இந்த நூலுக்குக் காலம்காலமாகப் பலரால் தெளிவுரை எழுதப்பட்டுவருகிறது. தற்போது முனைவர் கு.கணேசனின் சுவாரசியமான தெளிவுரை வெளிவந்திருக்கிறது. - விஜி

மணிமேகலை
தெளிவுரை: கு.கணேசன்
மணிவாசகர் பதிப்பகம்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 93805 30884

திண்ணை: பால்வண்ணம் இலக்கிய விருது: பால்வண்ணம் நினைவு இலக்கிய விருது விழா இன்று (25.05.24) மாலை 5.30 மணி அளவில் பாளையங்கோட்டை, ராஜேந்திர நகர் முதல் தெருவில் உள்ள சரோஜ் நினைவகத்தில் நடைபெறவுள்ளது. கி.அமுதா செல்வியின் ‘பசி கொண்ட இரவு’, சாரோனின் ‘கரியோடன்’, ஆயினா முஹம்மத்தின் ‘ஆகாத தீதார்’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளுக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதும் புலியூர் முருகேசனின் ‘பீ தணக்கன்’ சிறுகதைத் தொகுப்புக்குச் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சிறப்பு விருதும் அளிக்கப்படவுள்ளன. எழுத்தாளர் வண்ணதாசன் விருதுகளை வழங்கி, விருதாளர்களைப் பாராட்டிப் பேசவுள்ளார்.

பவாவின் கதையாடல்: எழுத்தாளர் பவா செல்லத்துரை பெருங்கதையாடல் நிகழ்ச்சி இன்று (25.05.24) மாலை 6 மணி அளவில் கோயம்புத்தூர், வெள்ளக்கிணறு ஸ்ரீ கண்டி பார்ம்ஸில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் குறித்துக் கதையாடல் நிகழ்த்தவுள்ளார். ஜெயகாந்தன் நண்பர்களும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன.

தமிழில் அறிவியல்! - சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் மையத்தில் ‘தமிழில் அறிவியல்: சாதனைகளும் சவால்களும்’ என்கிற தலைப்பில் கூட்டம் இன்று (25.04.24) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையச் செயல் இயக்குநர் இ.கி.லெனின் தமிழ்க்கோவன், பேராசிரியர்கள் ஆர்.ராமானுஜம், த.வி.வெங்கடேஸ்வரன், திரை இயக்குநர்கள் தீபக், ஆர்.ரவிக்குமார், விஞ்ஞானி பி.காமாட்சி ஆகியோர்
கலந்துகொண்டு பேசவுள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in