யுவபுரஸ்கார், பால சாகித்ய விருதுகள்

யுவபுரஸ்கார், பால சாகித்ய விருதுகள்
Updated on
1 min read

சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கான ‘யுவ புரஸ்கார்’ விருதையும் சிறுவர் இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய’ விருதையும் 21 இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு வழங்கிவருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் ஆர். அபிலாஷுக்கும், பால சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இரா. நடராசனுக்கும் தமிழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதிவரும் ஆர். அபிலாஷ், கவிதை, கட்டுரை, கதை என இலக்கியத்தின் எல்லாத் தடங்களிலும் இயங்கிவருகிறார். ‘இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்’ கவிதைத் தொகுப்பு ‘கால்கள்’ நாவல் உள்ளிட்ட ஐந்து நூல்கள் இதுவரை வெளியாகி யுள்ளன. தனது முதல் நாவலான ‘கால்களு’க்காக அபிலாஷுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாவலின் மையம் மதுக்‌ஷரா என்ற மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணின் கதைதான். உடல் குறைபாட்டையும் அதனால் உண்டாகும் மனக் கஷ்டங்களையும் இந்த நாவல் பேசுகிறது.

தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இரா. நடராசன், சிறுகதை, நாவல், அறிவியல் நூல்கள் எனப் பல தளங்களிலும் இயங்கிவரும் முன்னணி எழுத்தாளர். ‘புத்தகம் பேசுது’ இதழின் ஆசிரியராகவும் செயலாற்றிவருகிறார். இவரது ‘ஆயிஷா’குறுநாவல் மிகப் பரவலான கவனம் பெற்ற நூல். இது தவிர ‘ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்’, ‘கலிலியோ’, ‘இது யாருடைய வகுப்பறை..?’ ‘விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ சிறுவர் நூலுக்காக இந்தாண்டுக்கான ‘பால சாகித்ய அகாடமி’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறுவர் கதையாக இங்கே பிரபலம் பெற்றுள்ள வேதாளம் பிடிக்கப் போன விக்ரமாதித்தன் கதை வழியாக அறிவியலையும் சிறுவர்களுக்குச் சொல்லும் முயற்சியாகத்தான் நடராசன் இக்கதைகளை எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in