

இலங்கைப் போரின் வன்முறைகள் குறித்து மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள், களப் போராளிகள் எனப் பலரும் தங்கள் பதிவுகளை நூலாக வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கள மருத்துவரான பிரையன் செனவிரத்னே எழுதியிருக்கும் ‘இலங்கையில் தமிழர்கள்மீதான ஆயுதப்படையினரின் பாலியல் வன்முறை’ நூலின் தமிழாக்கம் இது.
இறுதிக் கட்டப் போர் குறித்த ஐ.நா. பிரதிநிதி கார்டன் வைஸின் ‘தி கேஜ்’ (The Cage), இங்கிலாந்துப் பத்திரிகையாளர் பிரான்சிஸ் ஹாரிஸனின் ‘ஸ்டில் கவுண்டிங் தி டெட்’ (Still Counting the Dead) போன்ற நூல்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வெளியிலிருந்து இறுதிப் போரின் வன்முறையைப் பதிவுசெய்த வகையில் முக்கியமானவை.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள் குறித்து சிங்களத் தரப்பிலிருந்து கேட்கும் ஒரு குரல் இது. அந்த விதத்தில் இந்த நூல் முக்கியமானது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான ஆய்வை பிரையன் நடத்தியுள்ளார். மனித உரிமை மீறலுக்காக ஐ.நா.வின் கதவுகளையும் அவர் தட்டியுள்ளார்.
இலங்கைப் போர் குறித்த மற்ற நூல்களைப் போல் அல்லாமல், அதன் பின்னணி குறித்து விரிவாகப் பேசுகிறது இந்த நூல். இலங்கையில் தமிழ் மக்கள் வந்தேறிகள் என்கிற ஒரு அபிப்ராயம் சிங்களத் தரப்பினருக்கு உண்டு. உண்மையில் தமிழர்கள் வடபகுதியின் பூர்வக்குடிகள்.
இந்த ஆதி நிலையிலிருந்து பிரையன் இந்த நூலைத் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டில் அகழாய்ந்து எடுக்கப்பட்ட தொல்பொருள்களும் இலங்கை வடபகுதியில் அகழாய்ந்து எடுக்கப்பட்ட தொல்பொருள்களும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவை என இவர் நிறுவுகிறார்.
இன்றைய இந்தியாவின் தென் பகுதியிலிருந்து வந்தவர்கள் தமிழர்கள் என்றால், அதன் வடபகுதியிலிருந்து வந்தவர்கள் சிங்களர் எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், சிங்களர் வந்ததற்கான எந்தச் சான்றும் இல்லை. குறிப்பாகத் தொல்லியல் சான்று இல்லவே இல்லை என அழுத்தமாகச் சொல்கிறார்.
சிங்களர் வரலாற்றைச் சொல்லும் நூல் என முன்னிறுத்தப்படுவது ‘மகாவம்சம்’. இதை ‘அபத்தமான மரபுக் கதை’ என பிரையன் விமர்சிக்கிறார். இந்தச் சம்பவம் பொ.ஆ.மு. (கி.மு.) 5ஆம் நூற்றாண்டில் நடந்ததாக பெளத்த துறவி மகாநாம சொல்கிறார். ஆனால், இதற்கெல்லாம் ஸ்தூலமான சான்று இல்லை. ‘இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடே.
சிங்களர்கள், பெளத்தத்தின் பாதுகாவலர்கள். தமிழர்கள் வந்தேறிகள், நாசகாரர்கள், மதத்துக்கு எதிரானவர்கள்’ என அபாயகரமான முட்டாள்தனத்திற்குள் மகாவம்சம் நுழைவதாகப் பிரையன் இந்த நூலில் விமர்சித்துள்ளார். இந்த நூல் பெளத்த பக்தகோடிகளுக்காக எழுதப்பட்டது என மகாநாம சொல்லியிருந்தாலும், இந்த நூலை ஒரு சரித்திர நூலாகவே சிங்களர் நம்புகிறார்கள். இதற்கு ‘உன்னை அபத்தங்களை நம்பச் செய்வர். அட்டூழியங்களைச் செய்ய வைப்பர்’ என்கிற வால்டேரின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார் பிரையன்.
தமிழர் மீதான வெறுப்பின் பின்னணியை அதன் தொடக்கப்புள்ளியிருந்து அணுகியிருக்கிறார் பிரையன். காலனிப் படையெடுப்புக்கு முன்பு இலங்கையில் மூன்று அரசுகள் இருந்துள்ளன. தமிழ் அரசு, மலையகச் சிங்கள அரசு, கோட்டே சிங்கள அரசு ஆகியவை அவை.
பிரிட்டிஷ் நிர்வாகியான சர் ஹியூக் க்ளெக்ஹார்னின் நாள் குறிப்பை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார். பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்ட கோல்புறூக்
-கேமரன் சீர்திருத்தம், சிங்களர் பெரும்பான்மையாக வாழும் கொழும்புவில் நிர்வாகத்தை மையப்படுத்தியது.
இதனால் வடக்குப் பகுதியின் முக்கியமான நகரமான யாழ்ப்பாணத்தின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. தமிழர்கள் பலர் சிங்களர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியை நோக்கிப் புலம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. ‘கடுமையாக உழைக்கும் தமிழர்கள் பிரிட்டிஷாரால் மீண்டும் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
இதன் விளைவாக பிரிட்டிஷார் வெளியேறியபோது, நாட்டில் இருந்த இலங்கையரின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் அதிகமான சதவீதத்தில் தமிழர்கள் அரசுப் பணிகளில் இருந்தனர்’ எனத் தமிழர்கள் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுக்கு நூலாசிரியர் பதிலளிக்கிறார். உண்மையில் சிங்களர் விவசாயத்துக்கே முக்கியத்துவம் அளித்துவந்துள்ளனர்.
இதனால் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு வந்த சிங்கள அரசு, அரசுப்பணிகளில் தமிழர்கள் இருப்பதைக் குறைப்பதற்குப் பாகுபாடான சட்டங்களை வகுத்தது. பிரிட்டிஷார் இலங்கையிலிருந்து வெளியேறும்போது தங்களது தேயிலைத் தோட்டங்களுக்கும் ராணுவ நலன்களுக்கும் ஆதரவாக இருக்கும் பெரும்பான்மைச் சிங்களர் கையில் நாட்டை ஒப்படைத்தனர். தமிழ்க் கூட்டாட்சி என்னும் தமிழர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முக்கியமான காரணம் இது எனச் சுட்டி, ‘பிரிட்டிஷாரின் மிகப் பொறுப்பற்ற செயல்’ என விமர்சிக்கிறார் பிரையன்.
ஆனால், பிரிட்டிஷார் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாக ‘முழுக்கத் தவறாக' பெளத்த குருமார்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதனால் அவர்கள் முன்னெடுத்த பெரும்பான்மை சிங்கள பெளத்த எழுச்சியின் ஆதரவில்தான் அரசுகள் அமைந்தன. அவர்களின் குரலாகவே செயல்பட்டன.
போர் முடிந்த பிறகு இலங்கை முகாம்களில் நடந்த பாலியல் வன்முறைகளை பிரையன் சான்றுகளுடன் பட்டியலிட்டுள்ளார். வன்முறையைச் செய்த ராணுவத்தினரின் செயலை மெச்சிய அன்றைய அதிபர் ராஜபக்ச குறித்தும் கோபத்துடன் பதிவுசெய்கிறார். அவரை ஹிட்லருடன் ஒப்பிடுகிறார் பிரையன்.
வடபகுதியில் திட்டமிட்டு நடத்தப்படும் சிங்களமயமாக்கலையும் சான்றுகளுடன் சுட்டிக்காட்டுகிறார். இறுதிப் போர் வன்முறையில் ஈடுபட்ட சிங்கள ராணுவத்தினர், ஐ.நா.வின் அமைதிப்படையில் அங்கம் வகித்ததையும் சொல்கிறார். மேஜர் ஜகத் டயஸ் பல எதிர்ப்புகளுக்கு இடையில் ஐ.நா.வின் இலங்கைத் துணைத் தூதுவராகச் செயல்பட்டார். நடந்து முடிந்த போர் என்பது ஒரு இயக்கத்தின் தவறு அல்ல என்கிறார்.
சிங்கள இனவாதமே அதற்கான காரணம், இந்தப் பிரச்சினையை சர்வதேசக் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்கிறார். 2016இல் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘எழுக தமிழ்’ என்கிற நிகழ்வில் ஒன்றிணைந்து ஒரு போராட்டம் நடத்தியதை பிரையன் சர்வதேசச் சமூகத்தின் முன்னால் ஒரு போராட்டப் பதாகையைப் போல் இந்த நூல்வழி உயர்த்திக் காண்பிக்கிறார்.
இலங்கையில் தமிழர்கள்மீதான ஆயுதப்படையினரின் பாலியல் வன்முறை
பிரையன் செனவிரத்னே (தமிழில்: வெற்றிவேல்)
போதிவனம் பதிப்பகம்
விலை: ரூ.580
தொடர்புக்கு: 9841450437
- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in