

அரங்க உத்திகளை நவீனமயப்படுத்தியது, பல காலமாக நிகழ்த்தப்பட்டு வந்த நாடகப் பிரதிகளைச் சீர்திருத்தி, எளிமைப்படுத்தி மீள் பதிப்பித்தது, பலவற்றை நிகழ்த்தியது என்று மட்டுமே பம்மல் சம்பந்தனாரை இன்றைய கலையுலகம் நினைவில் நிறுத்தியிருக்கிறது.
இவ்வாறு வெறும் நாடகப் பனுவல் படைப்பாளியாக அவரைச் சுருக்கிவிடாமல், ‘நாடக வரலாற்று ஆராய்ச்சியாளர்’, ‘19ஆம் நூற்றாண்டின் அரங்க நடிப்பு முறையியல் கோட்பாட்டாளர்’ ஆகிய அவரது முக்கிய நாடக ஆளுமைப் பண்புகளை இந்நூல் நமக்கு மீள் அறிமுகம் செய்கிறது. ஆராய்ச்சியாளர்கள்கூடத் தவறவிட்ட இந்தக் கோணத்தை, சம்பந்தனாரின் ஐந்து விரிவான கட்டுரைகளைச் சரியான அளவில் தொகுத்துக் கொடுத்திருப்பதன் வழியாக இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார், இந்நூலைப் பதிப்பித்துள்ள பேராசிரியர் கோ.பழனி.
இந்தக் கட்டுரைகளில் நுழையும் முன் சம்பந்தனாரின் இந்த ஐந்து தலைப்புகளை எவ்வாறு அணுகுவது என்கிற பதிப்பாசிரியரின் விரிவான முன்னுரை இந்நூலின் மீதான மரியாதையையும் முக்கியத்துவத்தையும் மேலும் அதிகரிக்கிறது. - ஆர்.சி.ஜெயந்தன்
பம்மல் சம்பந்த முதலியார்: தமிழ் நாடக வரலாறு நடிப்பு முறையியல்
பதிப்பு: கோ.பழனி
புலம் பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 98406 03499
மூன்று தலைமுறைப் பெண்கள்: பெண்கள் விரும்பிய துறையைப் படிப்பதற்கும் லட்சியத்தோடு வேலை செய்வதற்கும் இப்போது ஓரளவு வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படித் தாங்கள் விரும்பிய ஒரு துறையில் படித்து, புகழ்பெற்ற பெண்களைச் சமூகம் கொண்டாடினாலும் குடும்பம் கொண்டாடுகிறதா? ‘ஒரு குடும்பத் தலைவியாக, அம்மாவாக நீ இதைச் சரியாகச் செய்யவில்லை, அதைச் சரியாகச் செய்யவில்லை’ என்று குடும்ப அமைப்பு குறைசொல்லிக்கொண்டே இருக்கிறது.
அந்தப் பெண்களைக் குற்றவுணர்வுக்குத் தள்ளிவிடுவதோடு, அவர்களின் முன்னேற்றத்தையும் தடுக்கிறது. இந்தச் சிக்கலைத் தாண்டி பெண்கள் வருவதற்கும் குடும்பம் அதைப் புரிந்துகொண்டு இயல்பாக ஏற்றுக்கொள்வதற்கும் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து, நாவலை எழுதியிருக்கிறார் எம்.ஏ.சுசீலா. தான் பிறந்த அந்தப் புகழ்பெற்ற மருத்துவமனையைப் பார்ப்பதற்கு ஆவலுடன் வரும் காயத்ரிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. பொலிவிழந்து, செயல்படாத அந்த மருத்துவமனையை மருத்துவர் காயத்ரியின் பேத்தியிடமிருந்து விலைக்கு வாங்கி, மீண்டும் செயல்பட வைப்பதற்காக மருத்துவர் காயத்ரியைத் தேடி வருகிறாள், நாவலின் நாயகியான காயத்ரி.
அங்கு காயத்ரிக்கும் மருத்துவர் காயத்ரிக்கும் என்ன தொடர்பு என்பது ஒரு பாகமாகவும் மருத்துவர் காயத்ரி ஏன் அந்த மருத்துவமனையைக் கைவிட்டார் என்பதற்கான காரணம் இன்னொரு பாகமாகவும் விரிந்திருக்கிறது. சிறிய நாவல் என்றாலும் மூன்று தலைமுறைகளை வைத்து, அழுத்தமாகக் கதை சொல்லியிருக்கிறார். - விஜி
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
எம்.ஏ.சுசீலா
ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 9840969757
ஹைதராபாத் சித்திரங்கள்: எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் ஹைதராபாத்தில் எட்டு ஆண்டுகள் வசித்தவர். அந்த அனுபவங்களை மூன்று நாவல்களாக அவர் வெளியிட்டிருந்தார். இப்போது அந்த மூன்று நாவல்களும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது.
அவரின் முதல் நாவல் ‘மற்றும் சிலர்’, மதுரை சின்னாளப்பட்டியில் இருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த, திமுக ஆட்சிக் காலத்தில் இந்தி ஆசிரியர் பணியை இழந்த ஒருவரைப் பற்றிய கதை. ஹைதராபாத் வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் தெலங்கானா போராட்டப் பின்னணியையும் கொண்ட நாவல் அது.
தமிழின் குறிப்பிடத்தக்க நாவல். ‘நகரம் 90’ என்கிற நாவல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அங்கு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிரிவுகள் செய்த குழப்பங்கள், மதக் கலவரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றி, பதவிக்காக சாதாரண மக்களைப் பலிகொண்ட அரசியல் சூழல் என அன்றைய ஆந்திரப்பிரதேச அரசியல் பற்றிய நாவல் இது. ‘குமுதம் - ஏர் இந்தியா’ நடத்திய இலக்கியப் போட்டியில் இது பரிசு பெற்றது.
‘சுடுமணல்’ மூன்றாவது நாவல். தேசியம் என்பது மாயம் என்பதை நிரூபிக்கும் வகையில், தண்ணீர்ப் பிரச்சினை வரும்போதெல்லாம் தமிழர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் வேறு மாநிலச் சூழலில் அந்நியமாக்கப்படுவதும் பற்றிய அனுபவங்களை ஹைதராபாத் பின்னணியில் இந்த நாவல் பேசுகிறது. மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்நாவல் பெயர்க்கப்பட்டுள்ளது. வேற்று மாநிலச் சூழலில் தமிழர்களின் அந்நியமாதல் சூழலை இவை விவரிக்கின்றன. - பெரம்பலூர் காப்பியன்
ஹைதராபாத் நாவல்கள்
சுப்ரபாரதிமணியன்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.480
தொடர்புக்கு: 98404 80232
காஷ்மீர் பயண அனுபவங்கள்: நேரில் கண்ட நிகழ்வுகளை எழுதியுள்ள அருணாராஜின் ‘மேகி தேசம்’ பயண நூலாகவும் அரசியல் பிரதியாகவும் வடிவெடுத்துள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து வெளியே காரில் பயணிக்கிற அவருக்கு அந்த நகரம் அழுக்கு நிறத்துடன் காணப்படும் வறண்ட பூமியாகக் காட்சியளிக்கிறது.
‘‘நூறடிக்கு ஒரு ராணுவ வீரன் துப்பாக்கியுடன் இருக்கும் ஊர் எனக்கு அழகாகத் தெரியவில்லை” என்ற எண்ணத்துடன் காஷ்மீருக்குச் செல்கிறவரின் அனுபவங்கள் மாறுபட்டவை. மாலை ஆறு மணிக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டதுபோல நகரம் பேரமைதியில் மூழ்கியிருக்கிறது.
மனிதர்கள் அற்ற தெருக்களில் வழிந்திடும் மௌனம், ஒருவகையில் கொடூரமானதுதான். அவர் பயணத்தில் தான் பார்த்த காட்சிகளையும் எதிர்கொண்ட அனுபவங்களையும் வெறுமனே விவரிப்பதுகூட நுண்ணரசியல் சார்ந்து மாறுகிறது. அந்த வகையில் மேகி தேசம், சராசரியான பயண நூல் என்று கடந்திட இயலாத பிரதியாகும்.
அருணாராஜ் தன்னுடைய காஷ்மீர் பயணத்தில் முதல் நாள் ஒரு கடையில் சில பெண்களையும் ஆறாவது நாள் ஏரியில் படகோட்டுகிற ஒரு பெண்ணையும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளையும் தவிர வேறு எந்தப் பெண்ணையும் பார்க்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.
பெண்கள் இல்லாமல் காஷ்மீர் எப்படி இருக்க முடியும் என்ற குழப்பத்தில் அருணாவின் பயணம் தொடர்கிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிற பெண்களின் கல்வி கேள்விக்குறிதான். மாதக்கணக்கில் இணையத்தொடர்பு, தகவல் தொடர்பு இல்லாமல் வாழுமாறு நெருக்கடிக்குள்ளாகியுள்ள காஷ்மீரிகளின் அன்றாடத் துயர வாழ்க்கையில், சுற்றுலா மூலம் கிடைக்கிற வருமானம் தான் வாழ்வாதாரமாக இருக்கிறது.
காஷ்மீரிய ஆண்கள் கோவேறுக் கழுதைப்பயணத்தில் நாள்தோறும் 50 கி.மீ. தொலைவு மலைப்பாதையில் சிரமத்துடன் ஏறி இறங்குகிறார்கள். சுற்றுலாப் பயணிக ளிடம் சால்வைகள் விற்றல், சிறிய கடைகள், நூடுல்ஸ் விற்பனை போன்ற வழிகளில்தான் சொற்ப வருமானம் பெற முடிகிறது.
சுற்றுலாவின் மூலம் கிடைக்கிற வருமானத்தைச் சேமித்து வைத்து, கடுமையாகப் பனி கொட்டுகிற மாதங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள், காஷ்மீரிகள். இயற்கையின் பேரழகுடன் வாழ்கிற காஷ்மீரிகளின் மறுபக்கமான அவல வாழ்க்கையை நூல், நுட்பமாக விவரித்துள்ளது.
காஷ்மீரில் யதார்த்தமாக என்ன நடக்கிறது என்று அருணாராஜ் கோட்டோவியமாக விவரித்துள்ள தகவல்கள், இன்றைய அரசியல் சூழலில் முக்கியமானவை. பயண நூலின் தொடக்கம் முதலாக எல்லாவற்றையும் பகடி செய்வதுடன் சுய பகடியும் செய்கிற அருணாராஜின் மொழி, வாசிப்பில் சுவராசியமானது. - ந.முருகேசபாண்டியன்
மேகி தேசம்
அருணாராஜ்
நிகர்மொழிப் பதிப்பகம்
விலை: ரூ:250
தொடர்புக்கு: 84284 77477
சரோஜா தேவியின் கதை: ஆண் குழந்தையை எதிர்பார்த்திருக்க, பெற்றோருக்கு நான்காவது பெண் குழந்தையாகப் பிறந்திருந்த சரோஜா தேவியை, யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று அவரது தாத்தா சொல்லியிருக்கிறார். 13 வயதில் சினிமா வாய்ப்பு தேடி வர, பெற்றோர் சம்மதத்துடன் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒரு படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். நுழைந்து இவரிடம் பேச்சுக் கொடுக்க, அவர் சென்ற பிறகுதான் அவர் எம்.ஜி.ஆர். என்றே இவருக்குத் தெரிந்திருக்கிறது.
பிறகு எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் வேறு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லையென்று எம்.ஜி.ஆரே இவரை வைத்து ‘நாடோடி மன்னன்' திரைப்படம் எடுக்க, அது சூப்பர் ஹிட் ஆகி, சரோஜா தேவியைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடியது. இதயக்கனி எஸ்.விஜயன் எழுத்தில் சரோஜா தேவியின் வாழ்க்கை சுவாரசியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. - சுஜாதா
நான் சரோஜா தேவி பேசுகிறேன்
இதயக்கனி எஸ்.விஜயன்
அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை: ரூ.270
தொடர்புக்கு: 9289281314
ஒரு பண்பாட்டுப் பின்புலக் கதை: திடமான அனுபவத்தின் அடிப்படையிலான கதைகள் இவை. கதைக்காக மாறன் தேர்வுசெய்துள்ள மொழியும் இயல்பான மக்களின் மொழியில் உள்ளது. அதனால் சில இடங்களில் கதை மொழி காத்திரம் கொண்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் தலைப்புக் கதை ஒரு பண்பாட்டுப் பின்புலத்துடன் கட்டப்பட்டுள்ளது. கன்னிப் பெண்ணாக இறந்தவர்களின் சடலங்களை, கன்னிப் பெண்ணாகக் காரியம் செய்யக் கூடாது என்பது ஒரு பகுதியிலுள்ள நம்பிக்கை.
அந்தச் சடலங்களுடன் உறவுகொள்வதைச் சடங்காகவும் அதைச் செய்வதற்கு ஓர் இனப் பிரிவும் இருக்கிறது என்கிற பண்பாட்டுத் தகவலை இந்தக் கதை சொல்கிறது. அதை வைத்துப் பின்னப்பட்ட கதை, உணர்ச்சிப்பெருக்குடன் முடிகிறது. இந்தக் கதையின் சில பலவீனங்களுக்கு அப்பாற்பட்டு, அது முன்னிறுத்தும் பண்பாட்டு அம்சம் முக்கியமானதாக இருக்கிறது.- விபின்
வெங்கம்பய
மாறன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 9940446650