Last Updated : 14 Apr, 2018 09:50 AM

 

Published : 14 Apr 2018 09:50 AM
Last Updated : 14 Apr 2018 09:50 AM

அம்பேத்கரைச் சரியாக வாசிப்பது எப்படி?: மேதைமையை முழு அளவில் வெளிக்கொணர்வதற்கான முயற்சி!

ம்பேத்கர் தன் வாழ்நாளில் சாதித்த தலித் மக்களின் அணிதிரட்டல் தலித் வரலாற்றில் முக்கியமான கட்டமாகும். ஆனாலும் அவரின் இறப்பிற்குப் பின்னால் அவருடைய நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களின் போதுதான் தலித் மக்களின் அணிதிரட்டல் பெரிய அளவில் சாத்தியமானது. அதற்கு முக்கியக் காரணம், அவரின் எழுத்துகளும் பேச்சுகளும் அப்போதுதான் பெரிய அளவில் மக்களைச் சென்றுசேர்ந்தன. அவற்றில் முதன்மையானது வசந்த் மூனின் கடும் உழைப்பாலும், மஹாராஷ்டிரா மாநில அரசின் நல்ல முடிவாலும் வெளியிடப்பட்ட ‘பாபாசாஹேப் அம்பேத்கரின் எழுத்தும், பேச்சும்’ நூல் தொகுதிகள்.

இன்றைக்கும் அரசியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், சட்டம், சமயம் என்று அந்தந்தத் துறைகளில் சிறப்பான ஆய்வு நூல்களாகக் கொண்டாடப்படக்கூடிய தகுதியை அவரின் நூல்கள் பெற்றிருந்தபோதிலும், அந்தச் சிறப்பைப் பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. அரசியல் களத்தில் நிகழ்த்தப்படும் தீண்டாமைக் கொடுமை அறிவுத்துறைகளிலும் நெடுங்காலமாகத் தொடருகிறது. இது இந்த நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், இந்தியச் சமூகத்தின் மேன்மைக்கும் ஏற்படும் பேரிழப்பு.

முன்னோடி பெருமுயற்சி

மஹாராஷ்டிரா அரசு 1976-ல் அந்த மாநிலக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு, அம்பேத்கரின் எழுத்துக்களையும், உரைகளையும் தொகுத்து வெளியிடுவதற்காக வசந்த் மூனை சிறப்பு அதிகாரியாக நியமித்து 'பதிப்புக்குழு' ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த பதிப்புக் குழுதான் 1979 தொடங்கி இன்று வரை 22 தொகுதிகளை வெளியிட்டுள்ளது. இவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 37 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அம்பேத்கர் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள இந்த நூல்கள், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

மஹாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் உதவியுடன் வசந்த் மூன் வெளியிட்டதை இந்த நாட்டுக்கு அளித்த மிகப்பெரும் அறிவுக்கொடை என்றே போற்ற வேண்டும். அதே வேளையில், இந்தத் தொகுதிகளில் உள்ள சில குறைபாடுகளை நாம் எளிதில் கடந்துசென்றுவிட முடியாது. அது அம்பேத்கரின் மேதைமையை முழு அளவில் வெளிக்கொணர்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியே. அம்பேத்கரின் சிந்தனைகளை அறிந்துகொள்வதற்கு எல்லோரும் நாடும் மூல நூல்களாக இந்த 22 ஆங்கிலத் தொகுதிகளும் உள்ளதால், இதனை முறைப்படுத்தி மறுபடியும் தொகுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அது எப்படிப்பட்ட முறைப்படுத்தலாக இருக்க வேண்டும் என்பதே நம் முன்னால் உள்ள சவால்.

குலைந்து கிடக்கும் தொகுப்புகள்

அம்பேத்கரின் எழுத்துக்களையும், உரைகளையும் எப்பாடுபட்டாவது வெளியுலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு செய்த பணி என்பதால் கிடைத்தவற்றை எல்லாம் முதலில் வெளியிட்டுவிட்டனர். அவற்றை முறைப்படுத்தி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் அப்போதைக்கு உடனடித் தேவையாக இல்லாமல் போனதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அனைத்துத் தொகுதிகளும் வெளியிடப்பட்ட நிலையில், அவரின் எழுத்துக்களை, உரைகளை அடுத்த கட்டத்துக்கு, எடுத்துச்செல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

அவற்றைக் காலவரிசையாகவும், பொருள்வாரியாகவும் முறைப்படுத்த வேண்டியது இன்றைய காலக்கட்டத்தின் தேவையாயிருக்கிறது. ஒரே பொருள் பற்றி அம்பேத்கர் பேசிய பேச்சுக்கள் அல்லது எழுதிய எழுத்துக்கள் இந்த தொகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிதறிக் கிடப்பதால், அந்தக் குறிப்பிட்ட பொருளைப் பற்றி அம்பேத்கரின் பார்வை என்ன என்பதை அறிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக, அவர் பொருளாதாரம் தொடர்பாகப் பேசியவை, எழுதியவை அனைத்தும் பல்வேறு தொகுதிகளில் பரவிக்கிடக்கின்றன. இதனால், தொடர்ச்சியாக வாசித்து அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. மேலும், 1915லிருந்து 1956 வரை அம்பேத்கரின் பொருளாதாரம் பற்றிய சிந்தனைப்போக்கு எவ்வாறு உருப்பெற்று வளர்கிறது என்பதை ஒருவர் தெளிவாகக் கண்டுணர முடிவதில்லை. இந்தக் குறைகளைக் களைய வேண்டுமென்றால், பொருளாதாரம் பற்றிய அவரின் ஆய்வு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், சிந்தனை தெறிக்கும் உரைகளையும் தொடர்ச்சியான தொகுதிகளாகத் தொகுக்க வேண்டியது அவசியம்.

பகுதி வகைப்படுத்தலின் தேவை

காலவரிசை முறைப்படுத்துதலில் எவருக்கும் கருத்து மாறுபாடு வருவது மிக அரிது. ஆனால், ஒரே கட்டுரையிலும், உரையிலும் பல்வேறு பொருள் பற்றி கருத்துக்கள் இருக்கலாம். அதுதான் அவரின் அறிவின் வீச்சு. அம்பேத்கரை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வகைப்படுதலைப் பற்றி பல்வேறு விதமான அணுகுமுறைகள் இருக்கலாம். இந்த வகைப்படுத்தல்கள் அம்பேத்கரின் எழுத்துக்களிலும், உரைகளிலும் முதன்மையானதாக அல்லது பெரும்பான்மையாக விவாதிக்கப்படும் பொருளின் அடிப்படையிலும் அனைவரும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் செய்யப்பட வேண்டும்.

அரசியல், சமூகம், பொருளாதாரம், சட்டம், மானுடவியல், சமயம் என்ற இந்த ஆறு பொருள்களில் செய்யப்பட்டுள்ள வகைப்படுத்தல்களை மறுபடியும் பகுதி வகைப்படுத்தல் செய்யப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சமூகம் என்னும் பொருளின் அடிப்படையில் உள்ள உரைகளை சாதியமைப்பு, தீண்டாமை, கல்வி, பெண் விடுதலை என்று வகைப்படுத்த வேண்டும். அந்த வகைப்படுத்தல் காலவரிசையில் அமைய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சமூகம் என்னும் பொருளின் அடிப்படையில் உள்ள உரைகளில் சாதியமைப்பு மற்றும் தீண்டாமை குறித்து அம்பேத்கர் 13 உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். அவற்றை ஆண்டு, மாதம், தேதி வாரியாக வரிசைப்படுத்தித் தந்தால் வாசிப்போர் சாதியம் மற்றும் தீண்டாமை குறித்து அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுக்கச் சொல்லிய அனைத்து கருத்துக்களையும் எளிதில் உள்வாங்கிக்கொள்ள வசதியாக இருக்கும்.

அந்த அடிப்படையில் அம்பேத்கரின் எழுத்துக்களையும் உரைகளையும் கால வரிசையிலும், பொருள் வரிசையிலும் தொகுத்துவருகிறேன். இந்த முறைப்படுத்தலின் மூலம் அம்பேத்கரியத்தை சரியான திசையில் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

- க.வீரபாண்டியன்,

இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரி,

தொடர்புக்கு: veerapandiang@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x