Published : 01 Apr 2018 10:53 AM
Last Updated : 01 Apr 2018 10:53 AM

திருவையாறு ஆராதனையில் சிதார் இசை!: பண்டிட் ஜனார்த்தன் மிட்டா பேட்டி

உலக அரங்கில் சிதார் வாத்தியத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர் சிதார் மேதை பண்டிட் ரவிஷங்கர். அவருடைய சீடர்களில் முக்கியமானவர் பண்டிட் ஜனார்த்தன் மிட்டா. தென்னிந்திய திரைப்படங்களில் ஜி.ராமநாதன் தொடங்கி சமீபத்திய ஜி.வி.பிரகாஷ், அநிருத் வரை ஏறக்குறைய 60 ஆண்டுகள் இவருடைய சிதார் ஒலித்திருக்கிறது. அவருக்கு, அமீர் குஸ்ரோ அறக்கட்டளை சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவப்படுத்தியிருக்கிறது.

86 வயதிலும் இசை அவரை இளமையுடன் வைத்திருக்கிறது.தம்பூரா

ஸ்ருதி பின்னணியில் ஒலிக்க, இசைமயமாக அவர் பேசியதிலிருந்து…

தன்முயற்சியில் சிதார் கற்றுக் கொண்டவர் நீங்கள். சிதார் எப்படி உங்களின் கைவசமானது?

என்னுடைய தந்தை ஹைதராபாத்தில் பிரபல வழக்கறிஞர். ஹார்மோனியம் வாசித்தபடி பாடவும் செய்வார். என்னுடைய சகோதரி சிதார் வாசிப்பார். பிரபலமான கலைஞர்கள் பலரும் கூடும் மேடையாக எங்களின் வீடு இருந்தது. சகோதரியின் திருமணத்துக்குப் பின், சிதார் வாசிக்கப் பழகினேன். சில நாட்களிலேயே அந்த வாத்தியம் வசப்பட்டது. மூன்று ஸ்தாயிகளிலும் ஸ்வரங்களை வாசிப்பது, விஸ்தாரமாக ராக ஆலாபனைகளைக்கூட வாசிக்கத் தொடங்கினேன்.1952ல் ஹைதராபாத் அனைத்திந்திய வானொலியும் சிதார் கலைஞராக எனக்கு கிரேடிங் கொடுத்தது.

பண்டிட் ரவிஷங்கரின் மாணவரானது எப்படி?

1955ல் நான் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை சம்பவம் ஏற்பட்டது. சங்கீத் சம்மேளனுக்காக ஹைதராபாத் வானொலி நிலையத்துக்கு வந்திருந்த பண்டிட் ரவிஷங்கரிடம் என்னை ஹைதராபாத் வானொலி நிலையத்தார் அறிமுகப்படுத்தினர். அடுத்த முறை சந்திக்கிறேன் என்று சொன்ன ரவிஷங்கர், சொன்னபடியே சந்தித்தார். "நீங்கள் இவனை மாணவராக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பொறியியல் படிப்பைக் கூட நிறுத்திவிடுகிறேன்..." என்று ரவிஷங்கரிடம் சொன்னார் என்னுடைய தந்தை. இசை அவ்வளவு பிடிக்குமா? அப்படியென்றால் வந்துவிடு என்றார். அவ்வளவுதான், பண்டிட் ரவிஷங்கரிடம் என்னுடைய பயிற்சி ஹைதராபாத், டெல்லி, பெங்களூர், வாராணசி போன்ற இடங்களில் தொடர்ந்தது. அதுவரை `ஃபொனடிக்’ அடிப்படையில் வாசித்துவந்த என்னுடைய வாசிக்கும் முறையை மாற்றினார். சிதார் வாசிப்பில் இருக்கும் பல வித நுட்பங்களையும் எனக்கு பண்டிட்ஜி கற்றுத் தந்தார்.

திரைப்படங்களில் வாசிக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

முதன் முதலாக `பாக்யதேவதா’ எனும் திரைப்படத்தில் வாசிக்கும் வாய்ப்பை இசையமைப்பாளர் வேணு வழங்கினார். புதிதாக தொடங்கப்பட்ட சாரதி ரிகார்டிங் ஸ்டுடியோவில் கண்டசாலா, பி.சுசீலா பாடிய பாடலுக்கு 1958-ல் நான் சிதார் வாசித்தேன். அஸ்வத்தாமா (வீணை காயத்ரியின் தந்தை) மெட்ராஸுக்கு அழைத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா எனப் பல மொழிப் படங்களில் வாசித்தேன்.

ரிகார்டிங்கில் மட்டுமே திரைப்பாடல்களுக்கு வாசித்தேன். ஆனால் மேடையில் மக்கள் முன்பாக நான் முழுக்க முழுக்க இந்துஸ்தானி நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்திவந்தேன். பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதியின் தாத்தா வீணை ராகவனுடன் இணைந்து முதன்முதலாக ஜுகல்பந்தி நிகழ்ச்சியை அளித்தேன். பிரபலமான கர்னாடக இசைக் கலைஞர்களுடன் இணைந்து ஜுகல் பந்தி வாசித்திருக்கிறேன்.

பண்டிட் ரவிஷங்கருடன் இணைந்து கச்சேரி செய்திருக்கிறீர்களா?

குருஜியுடன் சேர்ந்து மெட்ராஸ் ஐ.ஐ.டியில் 1983ல் ஜாகீர் உசேன் தபேலாவுடன் வாசித்திருக்கிறேன். அது மறக்கமுடியாத அனுபவம். அதேபோல் குருஜியின் மகள் அனுஷ்கா ஷங்கரின் அரங்கேற்றம் டெல்லியில் நடந்தபோது, அந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக குருஜியுடன் சேர்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேற்கத்திய வாத்தியங்களே கர்னாடக இசைக்கு பக்கவாத்தியமாகும் போது சிதார் ஏன் அந்த இடத்துக்கு வரமுடியவில்லை. சிதாரின் தனித்தன்மைதான் காரணமா?

வயலின், மாண்டலின், சாக்ஸபோன் எல்லாமே மேற்கத்திய வாத்தியம். ஆனால் அவற்றை கர்னாடக இசைக்கு எடுத்தாளும் அளவுக்கு சிதார் வாத்தியத்தை எடுத்தாள்வது சாத்தியப்படவில்லை. சிதாரின் கீழே இருக்கும் தந்திகளில் அசைவு அதிகம் என்பதால் கர்னாடக இசைக்கு பயன்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. வீணை சிட்டிபாபு கூட முயற்சி செய்து பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் நாதம் சிதாரில் வரவில்லை.

மறக்க முடியாத தருணங்கள்?

கண்டசாலா இசையமைத்துப் பாடியிருக்கும் `பகவத் கீதா’ இறைப் பணியில் சிதார் வாசித்திருக்கிறேன். இப்போதும் திருப்பதியில் அது ஒலிக்கிறது.

ஒருமுறை மியூசிக் அகாடமியில் என்னுடைய கச்சேரிக்கு வந்த பாலமுரளி கிருஷ்ணா, “கமகங்கள் எல்லாம் நன்றாக வருகிறதே… ஏன் நீங்கள் கர்னாடக இசை வாசிக்கக் கூடாது” என்று கேட்டார். அவ்வளவு பரிச்சயம் இல்லை என்று சொன்னேன். நான் சொல்லித் தருகிறேன் என்று சாருகேசி ராகத்தில் ஒரு கீர்த்தனை, இன்னும் இரண்டு தியாகராஜர் கீர்த்தனைகளை சொல்லிக் கொடுத்து, 1976-ல் நடந்த திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் வாசிக்கவைத்தார். முதன்முதலாக திருவையாறு ஆராதனையில் வாசித்த இந்துஸ்தானி இசைக் கலைஞர் நான்தான். அந்தப் பெருமையை அளித்தது பாலமுரளி கிருஷ்ணாதான்.

- வா. ரவிக்குமார், தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x