Last Updated : 20 Apr, 2018 08:53 AM

 

Published : 20 Apr 2018 08:53 AM
Last Updated : 20 Apr 2018 08:53 AM

பார்த்திபன் கனவு 27: துறைமுகத்தில்..

கு

ந்தவிக்குச் சொல்ல முடியாத ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. விரைந்து பள்ளியறைக்குச் சென்று மஞ்சத்தில் குப்புறப் படுத்துக்கொண்டு கொஞ்ச நேரம் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். தன்னாலேதான் ராஜகுமாரன் கடுந்தண்டனை அடையப் போகிறான் என்ற எண்ணம் அவள் மனத்தில் வேரூன்றிவிட்டது. இது அவனுக்குத் தெரியும்போது எவ்வளவு தூரம் தன்னை வெறுப்பான் என்ற எண்ணம் அவளைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது.

தான் ஏதாவது செய்துதான் ஆகவேண்டுமென்று அவள் பதைபதைத்தாள். சற்று நேரத்துக்கு எல்லாம் அரண்மனை அதிகாரியை அழைத்து வரச் செய்து, ‘‘உதயவர்மரே! இன்று சக்கரவர்த்தியின் சபையில் சோழ ராஜகுமாரனுடைய விசாரணை முடிந்ததும் அதன் விவரத்தை உடனே எனக்கு வந்து தெரியப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு கண நேரங்கூட இதில் தாமதம் கூடாது’’ என்றாள். அரண்மனை அதிகாரி ‘‘அப்படியே ஆகட்டும்...’’ என்று சொல்லி சபைக்கு ஆளையும் அனுப்பி வைத்தார்.

குந்தவி அன்று வழக்கமான காரியங்கள் ஒன்றும் செய்யவில்லை. நந்தவனம் சென்று மலர் எடுக்கவில்லை. ஆலயங்களுக்கும் போகவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு இராஜசபையில் இருந்து எப்போது ஆள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக அந்த ஆளும் வந்து சேர்ந்தான். விசாரணையையும் முடிவையும் பற்றி விவரமாகக் கூறினான்.

க்கரவர்த்தி ரொம்பவும் கருணை காட்டினாராம். ‘இப்போதாவது பல்லவ சாம்ராஜ்யத்துக்குப் பணிந்து கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டாயானால் உன்னுடைய குற்றத்தை மன்னித்து சோழ ராஜ்யத்துக்கும் முடிசூட்டி வைக்கிறேன்’ என்றாராம். அதை சோழ ராஜகுமாரன் ஒரே பிடிவாதமாக மறுத்துவிட்டானாம். அதோடு நில்லாமல், சக்கரவர்த்தியைத் தன்னுடன் வாட்போர் செய்யும்படி அழைத்தானாம்! அதன்மேல் சக்கரவர்த்தி தீர்ப்பு கூறினாராம். அவனுடைய இளம்பிராயத்தை முன்னிட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்காமல் தேசப் பிரஷ்ட தண்டனை விதிப்பதாகவும் மறுபடியும் சோழ நாட்டுக்குள் அவன் பிரவேசித்தால் சிரசாக்கினைக்கு உள்ளாக வேண்டும் என்றும் சொல்லி, உடனே அவனைக் கப்பலேற்றித் தீவாந்திரத்துக்கு அனுப்பிவிடும்படி கட்டளையிட்டாராம். அதன்படி அவனை உடனே மாமல்லபுரம் துறைமுகத்துக்குக் கொண்டுபோய் விட்டார்கள் என்பதையும் இராஜசபையில் இருந்து வந்த ஆள் தெரிவித்தான்.

விக்கிரமனுக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்ற செய்தி குந்தவிக்குச் சிறிது ஆறுதல் அளித்தது. ஆனால், அவனைக் கப்பல் ஏற்றி அனுப்பப் போகிறார்கள்; இனிமேல் என்றென்றைக்கும் அவனைத் தான் பார்க்க முடியாமல் போகலாம் என்ற எண்ணம் மிகுந்த துன்பத்தை உண்டாக்கியது. அந்த அரசிளங்குமரன் கப்பலேறிப் போவதற்கு முன் ஒரு தடவை அவனைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பொங்கி எழுந்தது. அவளுடைய உடம்பையும், மனத்தையும், ஆத்மாவையுமே இந்த ஆவல் கவர்ந்து கொண்டது. அந்த இராஜகுமாரனை உடனே பார்க்க வேண்டுமென்று அவளுடைய தேகத்தின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. அவனைத் தான் நேரில் பார்த்துப் பேசினால் அவனுடைய மனத்தை ஒருவேளை மாற்றித் தன் தந்தையின் கீழ் சிற்றரசனாக இருக்கச் சம்மதிக்கும்படி செய்யலாம் என்ற ஆசை உள்ளத்தின் ஒரு மூலையில் கிடந்தது.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x