

ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு புனித நூல் உண்டு. இந்திய நாகரிகத்தைப் பற்றிய புனித நூல் ஏ.எல்.பாஷம் எழுதிய ‘வியத்தகு இந்தியா’. விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் பதிப்பின் மொழிபெயர்ப்பினை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பு 1954இல் வந்தது. இதுவரை இரண்டாம் பதிப்பையே நாம் வாசித்து வந்தோம். இந்தப் புதிய பதிப்பினை பூரணச்சந்திரன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.
திராவிடச் சான்று, திராவிட உறவுமுறை உள்ளிட்ட அறிவார்ந்த நூல்களை எழுதிய தாமஸ் டிரவுட்மன் மூன்றாம் பதிப்புக்குப் பெறுமதியான முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இவர் ஏ.எல்.பாஷமின் மாணவர். இதனால் வெளியுலகம் அறியாத செய்திகள் பலவற்றை முன்னுரையில் பேசியிருக்கிறார். இதில் இந்தியவியல் பற்றிய புதிய பார்வையை முன்வைக்கிறார். இதற்காகவே இந்த நூலை வாசிக்கலாம்.
ஏ.எல்.பாஷம் இந்தியாவின் மறைந்து போன ஆசீவகம் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். சம்ஸ்கிருதத்தில் புலமை மிக்கவர். இப்பின்புலத்துடன் பாஷம் இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முக மரபுகளை வரலாற்று வரைவியலாக எழுதியுள்ளார்.
ஆனால், இவருடைய பார்வை முற்றிலும் மாறுபட்டதாகும். இந்தியாவை ஐரோப்பிய அறிவு மரபிலிருந்து அணுகுகிறார். ‘அயல் பார்வையில் இந்தியா’ என்பதே இந்த நூலில் மறைந்திருக்கும் அணுகுமுறை. இதற்கான காரணத்தை முன்னுரையில் விளக்கியிருக்கிறார்.
இந்திய நாகரிகத்தைப் பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை பல ஆயிரம் ஆண்டுகள் நிகழ்ந்த பயணத்தை விவரிக்கும் முறையியல் அபாரமானது. பாஷமின் நுட்பமான தேடுதலும், காத்திரமான பகுப்பாய்வும், நேர்த்தியான எடுத்துரைப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. முதற்பதிப்பில் விடுபட்டாலும் மூன்றாம் பதிப்பில் தமிழ் மரபின் சாரத்தைக் கருத்தூன்றி விவாதிக்கிறார்.
இந்த நூலின் பரப்புக் கடலென விரிகிறது. இந்திய நாகரிகம், பண்பாடு, மதங்கள் எனும் வரிசை ஒரு புறம். சிந்துவெளி நாகரிகம், வேதகாலம், அடுத்தடுத்த பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும், காலனித்துவக் காலம் வரையிலான வரிசை மறுபுறம்.
பிரபஞ்சவியல், நிலவியல், வானியல், பஞ்சாங்கம், கணிதம், மொழி, இலக்கியம், சமூகம், அன்றாட வாழ்வு, கலைகள் எனும் வரிசை இன்னொரு புறம். இவை சார்ந்து எண்ணற்ற பிரிவுகள் தொடர்கின்றன. இந்திய மரபில் இவ்வளவு நீள, அகல, ஆழம் இருக்கிறதா எனும் வியப்பு நம்மைக் கவ்விப் பிடிக்கிறது. இந்த நூல் இந்திய மரபின் கலைக்களஞ்சியம் எனலாம். ஒரு முழுமை நோக்கிய பார்வை இதிலுள்ளது.
மேற்குலகின் செவ்வியல் மரபுக்குரிய பாஷம் இந்திய மரபின் ஆணி வேரினை அலசிக் காட்டுகிறார். இந்த நூலில் இந்திய மதங்கள் பற்றிய அத்தியாயம் மிகவும் நீண்டுள்ளது. இதிலிருந்து அவர் காட்டும் சித்திரம் இதுவரை நாம் காணாதது. ‘வியத்தகு இந்தியா’ எழுதப்பட்டதற்கு ஒரு வலுவான பின்னணி இருந்தது. பாஷத்தின் ஆசிரியர் எல்.டி.பார்னெட் 1913இல் ‘இந்தியாவின் தொல்பொருட்கள்’ (Antiquities of India) எனும் நூலினை எழுதினார். அதன் தொடர்ச்சியாகச் சமகாலம் வரை எழுத முனைந்தார் பாஷம்.
பாஷம் எழுதுவதற்கு முன்பு வின்சென்ட் ஸ்மித் 1904இல் ‘இந்தியாவின் தொடக்ககால வரலாறு’ (Early History of India) எனும் நூலினை எழுதியிருந்தார். அக்காலத்தில் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்நூல் ஒரு தர நிர்ணயத்தை உருவாக்கியிருந்தது. இதில் ஸ்மித் இந்தியர்களையும் அவர்களின் மரபுகளையும் ஏளனப்படுத்தி எழுதியிருந்தார்.
இவர் 30 ஆண்டுக் காலம் இந்திய மக்கள் பணியில் கடமையாற்றியவர். ஸ்மித்தின் கருத்துகளைத் தலைகீழாக்கி, ஓர் அறிவார்ந்த பார்வையில் இந்தியாவைக் காட்டியவர் பாஷம். மேற்குலகத்தாரை இந்தியா பக்கம் திருப்பியதில் ‘வியத்தகு இந்தியா’ வெற்றி பெற்றது. இந்தியர்கள் பெருமையோடு போற்ற வேண்டிய புத்தகம் இது.
வியத்தகு இந்தியா
ஏ.எல்.பாஷம் (தமிழில்: க.பூரணச்சந்திரன்)
அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ.870
தொடர்புக்கு: 04332- 273 444
- தொடர்புக்கு: bharathianthro@gmail.com