

கடித இலக்கியத்தை உண்மைக் கடிதங்கள், புனைவுக் கடிதங்கள் என வகைப்படுத்துகிறார்கள். தமிழில் இந்த இரண்டு வகைகளுக்கும் உதாரணங்கள் இருக்கின்றன. வல்லிக்கண்ணன் கடிதங்கள், கி.ரா. கடிதங்கள் போன்றவை முதல் வகைக்கும் அண்ணாவின் தம்பிக்கு எழுதிய கடிதங்களை அடுத்ததற்கும் உதாரணங்களாகச் சொல்லலாம். ஷண்முகப்ரியனின் இந்தக் கடிதங்கள் மேற்கண்ட இரண்டு வகைக்கும் இடையிலானவை. சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மு.ராதாகிருஷ்ணனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இவை.
ஷண்முகப்ரியன், கடித நடையிலும் இலக்கியம் படைத்துள்ளார். தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக முன்னிறுத்தக்கூடிய திராணியுள்ள ‘வீண்காவியங்கள்’ கடிதங்கள் வழியாக எழுதப்பட்டதுதான். இவையெல்லாம் அவரது இறப்புக்குப் பிறகு ராதாகிருஷ்ணனின் முயற்சியால் நூல் வடிவம் பெற்றுள்ளன.
‘வெளிச்சம் படாத வேதங்கள்’, ‘அர்த்தம்’, ‘தாம்பத்யம்’ போன்ற குறுங்கதைகளையும் இந்தக் கடிதங்கள் வழி எழுதியுள்ளார். இடையர் ஒருவர், அம்மனைப் போல் ஒரு பெண்ணை வழிபடுகிறார். அதைக் காதலின் உன்மத்தமாகச் சித்தரித்துள்ளார். ஆண்-பெண்ணுக்கு இடையிலான உறவுப்பெயர்களைக் கடந்து, அதைப் பிரபஞ்சம் தோன்றிய முதற்கணத்துக்கு ஷண்முகப்ரியன் இதில் எடுத்துச் செல்கிறார்.
அங்கு எந்த உறவுகளும் இல்லை. இருப்பது ஆணுடலும் பெண்ணுடலும் மட்டும்தான் என்கிறார் ஷண்முகப்ரியன். ‘கசடதபற’ (தீவிர இலக்கிய இதழ்) போலவும் இருக்கக் கூடாது; ஜனரஞ்சக இதழ் போலவும் இருக்கக் கூடாது என ஓர் இடத்தில் சொல்கிறார் ஷண்முகப்ரியன். இதன் வழி அவரது இலக்கிய ரசனையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இவரது நாவல்களை மதிப்பிட இந்தக் கடிதங்கள் திறவுகோலாகப் பயன்படுகின்றன. குடும்ப அமைப்புகள் குறித்த சிலாகிப்பு, கடிதங்களில் பல இடங்களில் தென்பட்டாலும் பொதுவாக அவரது நாவல் உலகம் என்பது அதைக் கேள்வி கேட்பதாக உள்ளது. சமூக விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட மனித மனத்தின் கறாரான யதார்த்தத்தைச் சித்தரிப்பது தான் ஷண்முகப்ரியன் எழுத்தின் பிரதான நோக்கம் என மதிப்பிடலாம்.
‘வெற்றி விழா’, ‘பிரம்மா’ போன்று 50க்கும் மேற்பட்ட படங்களுக்குக் கதை, வசனம் எழுதியுள்ள, ‘பாட்டுக்கு நான் அடிமை’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ள ஷண்முகப்ரியனின் இலக்கிய முகத்தை இந்தக் கடிதங்கள் புலப்படுத்துகின்றன. - ஜெய்
ஷண்முகப்ரியனின் கடிதங்கள்
தொகுப்பு: வழக்கறிஞர் மு.ராதாகிருஷ்ணன்
பனித்துளிப் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 7200501589
நம் வெளியீடு: போர் குறித்த புத்தகம்: உலகின் எங்கோ ஒரு மூலையில் யுத்தம் ஒன்று வெடித்தால் அதில் யார் பக்கம் நியாயம் என்று அமைதிப் பூங்காவில் சாவகாசமாக உட்கார்ந்தபடி நம்மில் சிலர் விவாதித்துக் கொண்டிருக்கையில் அங்கு யுத்த பூமியில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலி கொடுக்கப்படுகின்றனர். நடப்பது என்னவென்று நாம் சுதாரித்துக் கொள்ளுமுன் மேலும் பல உயிர்கள் பறிபோகின்றன.
ஆனாலும் எதனால் தொடங்கியது, இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டால் மட்டுமே போர் நிறுத்தமும் சாத்தியப்படும். அவ்வாறு அண்மையில் நம்மை உலுக்கியெடுக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் குறித்துப் பேசியாக வேண்டும்.
அங்கு என்ன நடக்கிறது, எதனால் ஒவ்வொரு நாளும் மனிதர்கள் வாழும் நிலத்தை மண்டை ஓடுகளின் மைதானமாக மாற்றும் ஏவுகணைகள் ஏவப்படுகின்றன என்பது விவரிக்கப்பட வேண்டும். அந்த விளக்கம் பாதிக்கப்பட்டவர் தரப்புக் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும். இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் குறித்து முழுமையான புரிதலை இந்த நூல் அளிக்கிறது.
கணை ஏவு காலம்
பா. ராகவன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.230
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
***
திண்ணை: பொதியவெற்பனுக்கு விருது
தமிழ் இலக்கியத்தின் தீவிரமான செயல்பாட்டாளர் வே.மு.பொதியவெற்பன். படைப்பாளராக, திறனாய்வாளராக, சிற்றிதழ் ஆசிரியராக, பதிப்பாளராக, புத்தகக் கடைக்காரராகப் பன்முகங்கொண்டு இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் பணிசெய்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர். அவரது இலக்கியச் செயல்பாட்டைக் கெளரவிக்கும் வகையில், சீர் வாசகர் வட்டம் வழங்கும் இலக்கிய விருது, பொதியவெற்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ரூ. 1 லட்சம் பணமும் நினைவுப் பரிசையும் உள்ளடக்கியது.
சென்னையில் ‘என்றும் தமிழர் தலைவர்’ கூட்டம்: இந்து தமிழ் திசை வெளியிட்ட ‘என்றும் தமிழர் தலைவர்’ நூல் திறனாய்வுக் கூட்டம் இன்று (11.05.24) மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ளது. வழக்கறிஞர் அருள்மொழி, கோவி.லெனின், இரா. தமிழ்ச்செல்வன், வெற்றிச்செல்வன், ஆ.வெங்கடேசன், இந்து தமிழ் திசை துணை ஆசிரியர் ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை துணை செய்தி ஆசிரியர் பிருந்தா சீனிவாசன் ஆகியோர் பேசவுள்ளனர். பகுத்தறிவாளர் கழகம் இக்கூட்டத்தை ஒருங்கிணைக்கிறது.
நூல் வெளியீடு: பேராசிரியர் சி.என்.நடராஜனின் ‘தி பிறமலைக் கள்ளர்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ (The Piramalai Kallars of Tamilnadu) நூல் இன்று (11.05.24) மாலை 5 மணிக்கு அழகர்கோயில் சாலையில் உள்ள மதுரைக் காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி தொல்காப்பியர் அரங்கில் நடைபெறவுள்ளது. மானிடவியலாளர் பக்தவதச்ல பாரதி, மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.