நூல் நயம்: கவிதையின் ரசனைப் பாலம்

நூல் நயம்: கவிதையின் ரசனைப் பாலம்
Updated on
2 min read

திரைப்பட இயக்குநராகவும் எழுத்தாளராகவும் கவிஞராகவும் அறியப்படும் ராசி அழகப்பன், 20 கவிதை நூல்களுக்கும், 2 கட்டுரை நூல்களுக்கும் எழுதிய 22 அணிந்துரைகளின் அணிவகுப்பாக மலர்ந்துள்ளது இந்நூல். கவிதைகளைப் பற்றிய பார்வையாக மட்டுமில்லாமல், கவிஞருக்கும் தனக்குமான நட்பு குறித்தும், கவிஞரது பண்பு நலன் குறித்துமான சிறிய முன்னோட்டத்தோடு நூலுக்குள் நம்மை அழைத்துச்செல்கிறார் நூலாசிரியர்.

ஒரு கவிதை நூலானது வாசகருக்கு எவ்விதமான வாசிப்பு அனுபவத்தைத் தர வேண்டுமோ அத்தகைய அனுபவத்தைத் தானும் வாசித்துப் பெற்று, நூலினுள் ரசித்த சில கவிதைகளையும், மனசுக்குப் பிடித்த சில கவிதைகளையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஒரு நீள்கவிதையின் ஏதேனும் ஓரிரு வரிகள்கூட வாசகருக்குப் புதிய அனுபவத்தைத் தரக்கூடும் என்பதால், அதற்கேற்றவாறு கவிதையின் ஓரிரு வரிகளைக்கூட மேற்கோளாகத் தொட்டுக்காட்டிப் போகிறார். ‘நான் படைப்பாளர்களின் கருத்துகளை முதலில் ஆழ்ந்து சுவைத்து, பிறகு ஒரு நண்பன்போல் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் ரசனைப் பாலமாக அணிந்துரை எழுதியுள்ளேன்” என்று நூலாசிரியர் சொல்வது முற்றிலும் உண்மையே. - மு.முருகேஷ்

சொல் நடை
ராசி அழகப்பன்
பேஜஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9176804412

முல்லைப் பெரியாறு அணை வரலாறு: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, ஐந்து மாவட்டங்களின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைத்த பென்னிகுக், தமிழர்களின் மனத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். அவர் மறைந்து 100 ஆண்டுகளைக் கடந்த பிறகும் பென்னிக்குக் பற்றிய புத்தகங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு முன்பு பென்னி குக் பற்றிய செய்தியைப் படித்த இந்த நூலாசிரியர், ஆர்வ மிகுதியால் தொடர்ச்சியாகப் பயணம் செய்து, ஆவணங்களைச் சேகரித்திருக்கிறார்.

தம் அனுபவங்களையும் ஆவணங்களையும் வைத்து, ஒரு நாவலை எழுதியிருக்கிறார். இந்த அணைக்காக முதன்முதலில் சேதுபதி மன்னர் மேற்கொண்ட முயற்சியில் தொடங்கி, இந்த அணையின் வரலாற்றை அணைச்சாமியார், டேவிட் ஆகிய இரு கதாபாத்திரங்கள் வழி இந்த நாவல் விவரித்துச்செல்கிறது. - எஸ்.சுஜாதா

நீர் விளக்கு பென்னிகுக்
பொ.கந்தசாமி,
கவிமுரசு வெளியீட்டகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 9080461839

பாலஸ்தீனப் போருக்குப் பின்னே... இந்நூலின் பேசுபொருளை, அதன் தலைப்பிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம். பாலஸ்தீன அரபு மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அந்நியர் ஆக்கப்பட்டதிலிருந்து இன்று அவர்கள் மீது இஸ்ரேல் போர் நடத்திக்கொண்டிருப்பது வரைக்குமான நெடிய வரலாற்றின் ஒவ்வொரு கட்டமும் எளிமையான அத்தியாயமாக இதில் விளக்கப்பட்டுள்ளது.

1991இலேயே வெளிவந்த நூலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இது. 1930களில் காந்தி, நேரு ஆகியோர் யூதர்களின் உணர்வை மதிப்பவர்களாக இருந்தாலும், பாலஸ்தீனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண்பதையே தங்கள் நிலைப்பாடாக வெளிப்படுத்தினர். இத்தகைய தகவல்கள், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இச்சிக்கல் சார்ந்து இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டியவை. - ஆனந்தன் செல்லையா

நீதிக்குப் போராடும் பாலஸ்தின மக்கள்
என்.ராமகிருஷ்ணன், விஜய் பிரசாத் (தமிழில்: கி.ரமேஷ்)
சவுத் விஷன் புக்ஸ்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 94453 18520

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in