Published : 28 Apr 2018 08:45 AM
Last Updated : 28 Apr 2018 08:45 AM

கலை இலக்கியத்துக்கு அரசியல் ஒவ்வாததா?

அயல் இலக்கியங்களோடு ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே நமது கலைப் படைப்புகளில் அரசியல் பிரக்ஞை செயல்பட்டிருக்கிறது. காவிரிப் பிரச்சனையைக்கூட ஓர் உதாரணமாகச் சொல்லலாம். கால் நூற்றாண்டைக் கடந்த இப்புரட்சி பெரும் இடப்பெயர்வுக்கும், கிராமங்களின் வீழ்ச்சிக்கும், கலாச்சார மாற்றத்துக்கும் காரணமாக இருந்திருக்கிறது. ஆனால், இது பெருமளவில் சிறுகதைகளிலோ நாவல்களிலோ பிரதிபலிக்கவில்லை. படைப்பாளிகள் சிலரிடம் காரணம் கேட்டோம்.

எழுத்தாளர்களுக்கான இடம் இங்கே இல்லை!

சாரு நிவேதிதா

சுதந்திரப் போராட்டம் குறித்து தி.ஜா., மௌனி, புதுமைப்பித்தன் யாருமே அப்போது எழுதவில்லையே. சி.சு.செல்லப்பாதான் 20 வருடங்கள் கழித்து எழுதுகிறார். என்ன காரணம்? முக்கியப் பிரச்சினையாக இருந்தாலும் அது வரும் போகும், நாங்கள் காலத்தையும் தேசத்தையும் கடந்துவந்தவர்கள் என்று நினைத்திருக்கலாம். எழுத்தாளர்களுக்கான இடம் இங்கே இல்லை. சிம்பு, மன்சூர் அலிகான், நெப்போலியன் கருத்து சொன்னால் கால் பக்கத்துக்கு வரும். நானும் ஜெயமோகனும் தினமும் வலைப்பூவில் எழுதுகிறோம். எங்களது எழுத்துகளைப் பத்திரிகைகள் பிரசுரித்தாலும் யாரோ எழுதியிருக்கிறார்கள் என நினைத்து கடந்துபோய்விடுவார்கள். மலையாளத்தில் நான் எழுதினேன் என்றால் எனது கேள்விக்கு அங்கே முதலைமைச்சர் பதிலளிக்கிறார். இப்படி சொன்னாரே என்ன நினைக்கிறீர்கள் என பத்திரிகைக்காரர்களும் கேட்கிறார்கள். இங்கே அது சாத்தியமா? பெரும்பாலான எழுத்தாளர்கள் அரசுத் துறைகளில் அல்லது தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கிறார்கள். பிரச்சினை குறித்து எழுதினோம் என்றால் வேலை போய்விடும் என்ற பயமும் இருக்கிறது. இங்கு எழுத்தாளனுக்கு எழுத்து சோறு போடவில்லையே?

தஞ்சை எழுத்தாளர்கள் காலம் முடிந்துவிட்டது!

ஜெயமோகன்

லக்கியத்தில் உடனடியாக எதிர்வினையாற்றும் வழக்கம் தமிழில் இல்லை. சுதந்திரப் போராட்டம் குறித்து அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த எத்தனை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள்? புதுமைப்பித்தன் எழுதவில்லை. குபரா, ந.பிச்சமூர்த்தி இப்படி யாருமே அப்போது எழுதவில்லையே. 1970-க்குப் பிறகுதான் சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்டம் குறித்து ‘சுதந்திர தாகம்’ எனும் நாவலை எழுதுகிறார். நியூஸ்போல சுடச்சுட எழுத வேண்டியதில்லை. அப்படியான வழக்கமும் தமிழில் இருந்ததில்லை. 15, 20 வருடங்கள் கழித்து வரலாம். யாருமே எழுதவில்லை என்றும் சொல்ல முடியாது. காவிரி குறித்து சி.எம்.முத்து, சோலை சுந்தரப் பெருமாள் எழுதியிருக்கிறார்கள். தஞ்சை ப்ரகாஷ் தவிர மற்ற எல்லா தஞ்சை எழுத்தாளர்களுமே காவிரி குறித்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், தஞ்சாவூர் எழுத்தாளர்களின் காலம் முடிந்துவிட்டது. தஞ்சாவூர் எழுத்தாளர்களில் அடுத்த தலைமுறை வரவில்லை.

பிரச்சினையின் வேர்களைத்தான் எழுத்தாளன் எழுதுகிறான்

எஸ்.ராமகிருஷ்ணன்

காவிரிப் பிரச்சினை என்றில்லை, எந்தப் பிரச்சினை குறித்துமே யாரும் எழுதவில்லை. பிரச்சினையின் வேர்களைத்தான் எழுத்தாளன் எழுதுகிறான். பிரச்சினையை எழுத வேண்டியது ஒரு ஊடகவியலாளரின், ஆய்வாளரின் பணி. கர்நாடகத்திலும் இது குறித்து படைப்புகள் வரவில்லை. விவசாயத்தைப் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது. அதைக் காவிரி குறித்து எழுதப்பட்டதாக நாம் பார்ப்பதில்லை. தண்ணீர்த் தட்டுப்பாடு ஆப்பிரிக்காவில் நம்மைவிட அதிகம். அது குறித்து எத்தனை ஆப்பிரிக்கக் கதைகள் வந்திருக்கின்றன? வன்முறையை எழுதவில்லை, ஏன் உரிமை மறுக்கப்பட்டது என்றுதான் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அங்கே பாதிக்கப்படுவது கறுப்பினத்தவர்கள்தான், வெள்ளையர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதைத்தான் அவர்கள் எழுதுகிறார்கள். தண்ணீர்த் தட்டுப்பாட்டில் கறுப்பின மக்கள் அவதியுறுவதன் வேர்களைத் தேடித்தான் படைப்பாளிகள் பயணிக்கிறார்கள். அமெரிக்காவில் வாழும் கறுப்பினர்கள்கூட அவர்களின் அமெரிக்க வாழ்க்கை குறித்துதான் எழுதுகிறார்கள். நாஜி கொடுமைக்கு எதிராக உடனடியாக யாரும் எழுதவில்லை. 25 வருடங்கள் கழித்தே படைப்புகள் வந்தன. அது குறித்து எழுதியவர்கள் அப்பிரச்சினையின்போது பிறக்கவே இல்லை. இங்கே சுதந்திரப் போராட்டம் குறித்து எத்தனை படைப்புகள் அப்போது எழுதப்பட்டன? சோழர்கள் காலப் பிரச்சினை குறித்துக் கம்பன் எழுதவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பற்றி, அவர்களது அடிப்படை உரிமைகளைப் பற்றியே எழுத்தாளன் எழுதுவான். அது நிறைய எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல, உடனுக்குடன் இலக்கியத்தில் எழுத வேண்டியதில்லை. 50 வருடங்கள் கழித்து ஒருவன் காவிரிப் பிரச்சினை குறித்து எழுதலாம்!

கலையும் நீரும் ஒன்றுதான்!

கோணங்கி

லக்கியத்தில் உட்பகுதியாக அரசியல் இருக்க வேண்டும்; நமது எலும்புகள்போல. படைப்பாளிகள் அவசியம் பேச வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். செயற்கையாக நமது பூமியைப் பாலைவனமாக உருவாக்க முயல்கிறார்கள். அதற்கான எல்லா வாய்ப்புகளையும் உருவாக்கிவிட்டார்கள். எல்லோரும் இணைந்து மீட்டெடுக்க வேண்டும். இந்த எண்ணத்தின் நீட்சியாகவே ‘காவேரியின் பூர்வ காதை’ எழுதியிருக்கிறேன். 30 வருடங்கள் காவிரிக்கரையில் அலைந்து திரிந்து நிறைய தரவுகள் சேகரித்திருக்கிறேன். இது வெறுமனே கட்டுரைப் புத்தகம் மட்டும் அல்ல. தொன்மங்களையும் எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகத்துக்காகச் சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எனது ‘த’ நாவலில் 15 அத்தியாயங்கள் காவிரி குறித்து எழுதியிருக்கிறேன். தஞ்சாவூர் பக்கம் கூட்டம் கூட்டமாகக் கதிர் அறுக்க காவிரியை நோக்கி மக்கள் கிளம்பியிருக்கிறார்கள். உள்நாட்டு அகதிகளான அறுப்புக்காரர்களின் கண் வழியாகக் காவிரியை எழுதியிருக்கிறேன். பெரும் பஞ்சத்தைப் போக்கியது காவிரிதான்! தண்ணீர் பெரும் அரசியலாக மாறியிருக்கிறது. தண்ணீருக்காகப் பெரும் போரே நடக்க வாய்ப்பிருக்கிறது. படைப்பாளிகள் எல்லோரும் கைகோக்க வேண்டும். நீதியைவிட நீர் மிக உயர்ந்தது. நெல், கணிதமாக ஒருகாலத்தில் செயல்பட்டிருக்கிறது. பெரிய மூங்கில்போல நெல் இருந்தது. அப்படியான நெல் காவிரியில்தான் உண்டு. காவிரியின் நெல் என்பது மிகப் பெரிய கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது. அப்பெரும் மூங்கிலை ஏந்திப் போரிட்டாக வேண்டும்!

தொகுப்பு:த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x