Published : 21 Apr 2018 10:08 AM
Last Updated : 21 Apr 2018 10:08 AM

ஒரே ஒரு புத்தகம்தான் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?

வாழ்நாள் முழுக்க ஒரு புத்தகத்தை மட்டும்தான் திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும். எனில், ஒவ்வொரு வாசிப்பிலும் ஏதோ ஒரு வகையில் முடிவின்மையைத் தரும்புத்தகத்தைதான் தேர்ந்தெடுக்க முடியும். அந்த முடிவின்மையை நோக்கிய திசையில்நமது வாசிப்புலகத்தை சுழல விட்டுவிடலாம். தமிழில் ஒன்று, வேற்று மொழியில் ஒன்று என இரண்டு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் நம் படைப்பாளிகள். பலரின் தேர்வும் கலைப்படைப்புகளாகவே இருக்கின்றன.முடிவிலா மீளாப்பாதையில் பயணிக்க கலைதானே ஒரே தீர்வு!

கரமசோவ் சகோதரர்கள்- தஸ்தாயெவ்ஸ்கி

19-ம் நூற்றாண்டின் குழந்தையான தாஸ்தாயெவ்ஸ்கியைப் பெரிதும் வதைத்த பிரச்சினை, கடவுளின் இருப்பு பற்றியது. இது குறித்த தீர்க்கமான சிந்தனைகள் மீதான விசாரணைகளின் கலை வடிவமே ‘கரமசோவ் சகோதரர்கள்’. இந்நாவலில் மனித ஆன்மாவைக் கைப்பற்றக் கடவுளும் சாத்தானும் மனவெளிகளில் கடுமையாக மோதுகிறார்கள். நிகழ்வது, அனல் தெறிக்கும் யுத்தம். மனக்கிடங்குகளின் ரகஸ்ய அறைகள் திறக்கப்படுகின்றன. அதேசமயம், நம் மனக்குகைகளின் திறவு மந்திரங்களாகவும் அவை அமைந்து திகைப்பூட்டுகின்றன. ஒரு காலத்தின் குரல், பல்வேறு முரண்பட்ட குரல்களின் கூட்டிசையாக எதிரொலிக்கிறது. மனித நடவடிக்கைகளுக்குக் காரணமான மனப் பிராந்தியத்துக்குள் தாஸ்தாயெவ்ஸ்கி இந்நாவலில் மேற்கொண்டிருக்கும் சஞ்சாரம் அசாத்தியமானது. பாதைகளற்ற, இருட்டான பிராந்தியம். எனினும், கலை எனும் கைவிளக்கின் துணையோடு, எவ்வித இடருமின்றி பயணித்து அவர் அளித்திருக்கும் உலகம் நமக்கான பெரும் கொடை. இப்படைப்பு, என்றும் எனக்கான கைவிளக்காக இருந்துவருகிறது.

பிரமிள் கவிதைகள்

தாஸ்தாயெவ்ஸ்கி எனக்கான கைவிளக்கு என்றால், தருமு சிவராம் என அறியப்பட்ட பிரமிள் ஒரு தொலை தூர நட்சத்திர ஒளி. காலத்தின் பெளதீக யதார்த்தத்திலிருந்து உருக்கொள்ளும் சிந்தனைகளின் விசாரணைகளிலிருந்து நிகழும் கலைப் பயணங்கள் மீதான என் கலை நம்பிக்கை ஒருபுறம் எனில், பெளதீக யதார்த்தத்தை மீறிய நிதர்சனங்களைப் பற்றிய அறிவின் விசாரமயமான வெளிப்பாடுகளாக அமைந்த பிரமிளின் கவிதைகள் மன ஈர்ப்பின் இன்னொரு புறமாக இருக்கிறது. காலாதீதச் சாயல்கள் கொண்டது பிரமிளின் கவிதை இயக்கம். கவித்துவ அழகும் மெய்யியல் விசாரங்களும் ஓர் இசைமையில் உறவாடும் கவிதை உலகம். நிகழ்காலத்தில் இருந்தபடியே, காலங்களின் நெடிய அறியப்படாத பாதைகளினூடாக இவர் மேற்கொள்ளும் பிரமிப்பூட்டும் பயணங்களும், உரையாடல்களும் பெருமதிப்பு வாய்ந்தவை. என் மனம் லயிக்கும் மகத்தான கவிதைகளாக, ஒவ்வொரு வாசிப்பிலும் திகைப்பூட்டும் தன்மைகளோடு அவை எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன.

- சி.மோகன்

 

பைபிள்

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு எங்கோ ஒரு நிலப்பரப்பில் பேசிய இளைஞனின் குரல் இன்றும் நம்மைத் தொடுகிறது என்பது அற்புதம்தான். புத்தகம் எனும் உயிரியின் உச்சபட்ச சாத்தியம் என்றே இதைக் கருதலாம். ஏசுவின் சொற்களால் உளயெழுச்சி கொள்வது மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும் ஒன்று. காரணம், அது மானுடத்தின் உச்சகட்ட கவித்துவ வெளிப்பாடு. ஆன்மாவிலிருந்து வருகைதரும் ஒன்றின் அழகு அதில் உள்ளது. அழுக்கடைந்த சாலையோர சுற்றுச்சுவரில், ஷேர்ஆட்டோ முதுகில் என தினமும் அவனது வரிகள் மனதில் தொற்றிக்கொள்கின்றன. அவை தர்க்கபூர்வமானவையல்ல, கச்சிதம் கொண்டவையல்ல. துலக்கப்படாத அதன் நேரடித்தன்மை காட்டுமலர்களின் நிர்வாணத்தைப் போன்றது. பிராயத்தில் அதன் விசித்திர மொழிநடை எனக்கு கற்பனை உலகை உண்டாக்கியது. அதனாலேயே, தச்சன் மகனும் தேவகுமாரனும் சேர்ந்து எழுதிய புதிய ஏற்பாடை புராதனமான புதுமை மங்காத பிரதி என்பேன்.

பாரதி கவிதைகள்

ஒரு படைப்பை விரும்புவது என்பது ஓரெல்லைக்கு மேல் படைப்பாளியை விரும்புவதாகிவிடுகிறது. இவ்விதமாகத்தான் கலை இலக்கியத்திலும் தொன்மங்கள் உருவாகின்றன. தமிழ் மனதில் பாரதி ஒரு தொன்மமாகிவிட்டவர். தவிர, ஒரு கவிஞராக அவர்தான் எனது முதல் நாயகன். தனது மரபின் செழுமையையும் அதே நேரம் உலகளாவிய மாற்றத்தின் தட்பநிலையையும் உட்செறித்துக்கொண்டவர். இலக்கியம் மட்டுமின்றி ஆன்மிகம், வரலாறு, தத்துவம், அரசியல், அறிவியல் என அனைத்து திசையிலும் ஆர்வம்கொண்டு திறந்திருந்த ஒரு தன்னிலை அவருடையது. ஆரம்பகால நவீன மனதின் தத்தளிப்பையும் முரண்பாடுகளையும் அவரது வரிகளிடையே வாசிக்கலாம். எதைக் குறித்து சிந்திக்கும்போதும் பாரதியின் ஏதாவது ஒரு வரி கடந்துசெல்வது வழக்கம். அதனால்தான், ‘நல்லது தீயது நாமறியோம்’ என்பது போன்ற ஒரு கூற்று இப்போதும் என்னிடம் பேரதிர்வை உண்டாக்குகிறது. வேறெந்த காரணத்தையும்விட அந்த நபர் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது, ஒரு வழித்துணைபோல, அவ்வளவுதான்.

- சபரிநாதன்

தாண்டவராயன் கதை- பா.வெங்கடேசன்

புனைவும் வரலாறும் மணல்கடிகாரமாக ஒன்றையொன்று தம்மை நிரப்பிக்கொள்ளும் புள்ளியே பா.வெங்கடேசனின் படைப்புலகம். நாவல் முழுக்க கதைகளும் அக்கதைகளுக்குள் சிக்கிக்கொண்டு மீள வழியில்லாமல் சுழலும் பிற கதைகளுமென ஒரு மாய யந்திரத்தை வெங்கடேசன் சிருஷ்டித்திருப்பார். பன்முக வாசிப்பைக் கோரும் இந்நாவலில் இதுவரை மூன்று முறை நுழைந்து சிக்கி மீண்டு வெளியெறியிருக்கிறேன். டிரிஸ்ட்ராம் ஒரு மையப்புள்ளி. அவனைச் சுற்றிப் படரும் கதாபாத்திரங்களும், இந்தியாவின் பின்காலனிய சூழுலும், ஹைதர் அலி திப்புவின் அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனியின் நடவடிக்கைகளும் என சக்கரவியுகத்தினுள் சிக்கிக்கொள்ளும் டிரிஸ்ட்ராம் வரலாற்றின் மீது எழுப்பும் கேள்விகள்தான் கதைகள். வெங்கடேசனின் புனைவுகள் எல்லாமே வரலாற்றை குறுக்கீடுசெய்கின்றன.

பிரேக் சிமெட்ரி- உம்பர்தோ ஈகோ

இதுவும் ‘நேம் ஆப் தி ரோஸ்’ நாவலைப் போல ஒருவகையில் துப்பறியும் தன்மையுடையதுதான். உள்மடிப்புகளாக இறங்கும் படிக்கட்டுகள் வழியே இருண்ட அறைக்குள் அழைத்துச்சென்றுவிடுவார். ஸிமோநினி எனும் ரசகியங்களைக் கடத்தும் உளவாளியின் பார்வையில் நாவல் நகர்கிறது. ஸிமோநினி மட்டுமே ஈகோவின் கற்பனைப் பாத்திரம். மற்றவை அனைத்தும் நிஜமானவை. அதாவது, கற்பனைப் பாத்திரமான ஸிமோநினியை நிஜ மனிதர்கள் ஊடே வரலாற்று சம்பவங்களைக் கோர்த்து உருவாக்கும் உலகம்தான் புனைவுவெளி. சிக்மன்ட் ப்ராய்டு, கரிபால்டி, அலெக்ஸான்டர் டுமா என ஒவ்வொருவருடனும் ஸிமோநினி சந்திக்கும் புள்ளியும், ஜிஸிவி, ஃப்ரீமேஸன், யூதர்கள், ஐரோப்பிய அதிகாரம் என ஈகோ உருவாக்கும் அடுக்குகளும்தான் நாவல்.

- தூயன்

நெற்குஞ்சம்தேன்மொழி

சிறுகதைகளில் உலகத்தரம் என்பதை நாம் ஜெர்மானிய, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வைத்து நிர்ணயித்தால் அவற்றுக்குக் கொஞ்சமும் தரம் குறையாத படைப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அப்படியான நூல்களின் வரிசையில் இடம்பெறத்தக்கது ‘நெற்குஞ்சம்’. கவிதையால் கூரேற்றப்பட்ட சொற்களைக் கொண்டு நெய்யப்பட்ட இந்தக் கதைகளை சிறுகதை வடிவில் எழுதப்பட்ட கவிதைகள் எனலாம். ஆண்கள் எண்ணியே பார்க்க முடியாத படிமங்களையும், கோணங்களையும் இத்தொகுப்பு கொண்டிருக்கிறது. யுக்தி, மொழி, கதைக்குள் ததும்பி நிற்கும் அனுபவம், அவற்றால் பேசப்படும் மனிதர்கள் - எல்லாமே இத்தொகுப்பை தமிழ்ச் சிறுகதை உலகில் நிராகரிக்க முடியாத ஒன்றாக ஆக்குகின்றன.

தி புக் ஆஃப் மார்ஜின்ஸ்- எதுமோன் ழாபேஸ்

‘எழுத்து என்பது யுத்தத்தின் எதிர்பாராத கட்டங்களை சொல்லில் நிகழ்த்துவது’ எனக் குறிப்பிட்ட எதுமோன் ழாபேஸ் எழுதிய ‘தி புக் ஆஃப் மார்ஜின்ஸ்’ நான் மீண்டும் மீண்டும் வாசிக்கும் நூல். கெய்ரோவில் பிறந்து யூதர் என்பதால் எகிப்து அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்டு ஃப்ரான்ஸில் குடியேறியவர். ‘புலப்படாததைக் காணும் வழிதான் மரணம்’ என்ற அவரது எழுத்துகள், கவிதைக்கும் தத்துவத்துக்கும் இடையிலான பிரிவினையைத் தகர்ப்பவை. ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் அவரது படைப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் பதினான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இந்த நூலின் சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன்.

- ரவிக்குமார்

கில்காமெஷ்

சுமேரியாவில் அக்காட்டன் மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் 12 களிமண் கட்டிகளில் குன்னிஃபம் எழுத்துகளில் எழுதப்பட்டது. பல நூற்றாண்டுகள் பூமியில் புதைந்துகிடந்த கில்காமெஷ் காப்பியத்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் தொல்லியல் அறிஞர்கள் கண்டெடுத்தார்கள். வழக்கொழிந்துபோன மொழியின் படைப்பைப் படித்து ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்த்தார்கள். கில்காமெஷ் காப்பியம் நல்லதற்கும், கெட்டதற்கும், நட்புக்கும், வாழ்வுக்கும், சாவுக்கும் விடைகாணும் முயற்சியில் பயணிக்கிறது. பைபிளில் வரும் ஆழிப் பேரலையும், பிரளயமும் முதன்முதலாக கில்காமெஷில் சொல்லப்படுகிறது.

மிராசு சி.எம்.முத்து

மிராசுதர்களின் வாழ்க்கையை வனப்போடும், வசீகரத்தோடும் சொல்கிறது. மிராசுகர் காமுகர்கள், பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள், வஞ்சகர்கள் என்று ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை உடைக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, சமூகரீதியிலும், கலாச்சார முறையிலும் ஏற்பட்ட வெளிப்படையான மாறுதல்களின் வழியாக மிராசுகளின் வாழ்க்கை மாறுதலுக்கு உள்ளானதைக் கலாபூர்வமாக சொல்லியிருக்கிறார். கள்ளும், சாராயமும் குடித்துவிட்டு, கறியும், மீனும் தின்றுவிட்டு சுகஜீவியாக வாழ்ந்த ஒரு மிராசு குடும்பத்தின் கதையைச் சொல்வதுபோல சொல்லப்படாத பல மிராசுகளின் கதைகள் இருக்கின்றன. தமிழின் மகத்தான நாவல்களில் ஒன்று.

- சா.கந்தசாமி

லெவ் டால்ஸ்டாய்- விக்டர் ஸ்லோவ்ஸ்கி

கலைஞனாக தன் காலத்தை அதன் முழுமையோடு எதிர்கொண்டவர் டால்ஸ்டாய். 19-ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தின் மீது கவிந்திருந்த நெருக்கடிகளை உண்மையின் துணையோடு பரிசீலித்தவர். உலகம் தோன்றிய காலத்திலிருந்து வாழ்ந்து மறைந்த மகத்தான 10 மனிதர்களில் ஒருவர் எனவும் ஹெர்குலசுக்கு நிகரானவர் எனவும் கொண்டாடிய தலைமுறை இருந்தது. அவரது வாழ்வையும் கலையையும் கலை நேர்த்தியுடன் முன்வைக்கிறது. ஆன்மாவின் கட்டளையை ஏற்றுத் தனது 83-ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி மிகச் சிறிய ரயில்வே ஸ்டேஷனில் மடிந்த அந்த மகத்தான மனிதனின் சந்தோஷங்களையும் துயரங்களையும் போராட்டங்களையும், ஒரு கலைஞனாக உலகுக்கு அவர் அளித்த கொடைகளையும் பற்றிப் பேசும் படைப்பு. மனதளவில் சரிந்துபோகும் தருணங்களில் மீண்டெழுதலுக்கான வழியாக இந்தப் புத்தகம் இருந்திருக்கிறது.

புதுமைப்பித்தன் கதைகள்

காலனியத்தின் நுகத்தடிக்குக் கீழே பாழ்பட்டுக் கிடந்த ஒரு சமூகத்தின் வாழ்வைத் தனது படைப்புக்களின் வழியே பரிசீலித்தவர். தன் காலத்தை அவரளவுக்குக் கேள்விக்குள்ளாக்கிய, கேலிசெய்த, விமர்சித்த, அதன் சகல கூறுகளையும் முற்றொருமையுடன் முன்வைத்த படைப்பாளிகள் தமிழில் இல்லை. தன் காலத்தின் தூர்ந்து கிடந்த படைப்பு மொழியை அவர் ஓயாது செப்பனிட்டுக்கொண்டிருந்தார். ஒரு கலைஞனாக வாழ்வது என்றால் என்ன என்பதை அவர் தன் படைப்புச் செயல்பாடுகளின் வழியாகவும் வாழ்வின் வழியாகவும் உணர்த்த முற்பட்டவர். அவரது கதைகள் வரைந்து காட்டிய தமிழ் வாழ்வின் சித்திரங்கள் தமிழ் நவீன இலக்கியத்தின் போக்குகளை வடிவமைத்தவை. மகத்தான அவரின் சிறுகதைகளில் ஒன்றைக்கூட நான் இழக்கச் சம்மதிக்க மாட்டேன்.

- தேவிபாரதி

அபிதான சிந்தாமணி- ஆ.சிங்காரவேலு முதலியார்

புறச்சூழல் உருவாக்கும் தனிமையும், புத்தகங்கள் உருவாக்கும் தனிமையும் ஒன்றல்ல. முன்னதற்கான மருந்தாகக்கூட பின்னதைச் சொல்லலாம். முடிவுறாத் தனிமையில் விடப்பட்ட ஒருவரிடமிருக்கும் புத்தகமும் முடிவுறாததாகவும் அவரை எவ்வித உடனடி நடவடிக்கையிலும் இறங்கிவிடத் தூண்டாத ஒன்றுமாக இருப்பது நல்லது. அகராதிகளே முடிவுறாதவை. தொகையால் 28, வகையால் 140, விரியால் 28 கோடியுமான நரகத்தில் எவ்விதமான தண்டனைகள் உண்டென இந்நூலை வாசித்து யோசிப்பதே சுவாரசியமானது. இறந்தகாலத்தைக் கட்டமைப்பது சிறந்த பொழுதுபோக்கு. இவ்வகராதியை வாசித்து கற்பனையில் ஓர் உலகைப் படைத்துக் கிடப்பதே காலச்சுமை தெரியாத ஒன்றாக இருக்கும்.

தி பினாமினாலஜி ஆஃப் மைண்ட்- ஹெகல்

ஒரு புத்தகம் முடிவுறாமல் மட்டுமல்ல புரியாமல் போவதும் எண்ணற்ற முறை வாசிப்பதற்கான ஒரு தகுதி. எனது தனிப்பட்ட அனுபவத்தில் இரண்டு பக்கங்களைக்கூட தாண்ட முடியாத புத்தகம் என்றால் இதுதான். தத்துவத்தில் ஹெகலின் தற்போதைய இடம் பெரிதும் மற்றவர்களின் நிழலால் மறைந்திருப்பதாக இருந்தாலும் இப்புத்தகம் பல ஆண்டுகள் வாசிப்பைக் கோருகிற ஒன்று. இருத்தலியல், இயங்கியல், கம்யூனிசம் இவற்றின் மீது இப்புத்தகத்தின் தாக்கமுண்டு. விரைவில் இவ்விரு புத்தகங்களோடு உலகினின்று விலகிய தனிமை வாய்க்கப்பெற்றால் மகிழ்ச்சியாக ஹெகலை முதலில் வாசிப்பேன்.

- பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

 

தொகுப்பு: த. ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x