Published : 23 Apr 2018 08:43 AM
Last Updated : 23 Apr 2018 08:43 AM

லட்சம் புத்தகங்கள்: ஒரு வீடு, ஒரு மனிதர், ஒரு பெரும் வாழ்க்கை!

ங்க இலக்கியங்களைத் தேடித் தேடிப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர், நெல்லையில் கணிசமான ஏட்டுச் சுவடிகள் கிடைக்கும் என்று நம்பினார். நெல்லையில் கவிராஜ ஈசுவர மூர்த்தி பிள்ளையின் வீட்டிலிருந்த புத்தக அறையைப் பார்த்தவுடன் உ.வே.சா. பரவசமடைந்தார். “தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை வைத்திருந்தார்களோ என்று எண்ணி மனம் குதூகலித்தது. புழுதி இல்லாமல் ஒழுங்காகச் சுவடிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த முறையைக் கண்டதும் தமிழ்த் தெய்வத்தின் கோயில் என்று எண்ணி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன்” என்கிறார் தமிழ்த் தாத்தா. ஈஸ்வர மூர்த்தி பிள்ளைபோல பலரும் நம்மிடையே உண்டு. வரலாற்று ஆய்வாளர் செ.திவான், அவர்களில் ஒருவர்.

பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்துக்கு எதிர்புறம் உள்ள ஒரு குறுகலான வீதியில் இடது புறம் திரும்பினால், திவான் வீடு. இவரது வீட்டில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஏற்கனவே ஒரு லட்சம் நூல்களைக் கடையநல்லூரில் உள்ள ஒரு பள்ளிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இவரது வீட்டில் சகல தலைப்பிலும் நூல்கள் உள்ளன. கம்ப ராமாயணத்தின் அத்தனை காண்டங்களும் உள்ளன. பெரிய புராணத்தின் பல்வேறு பதிப்புகள், கல்வெட்டு ஆய்வு, வரலாறு தொடர்பான நூல்கள், நவீன இலக்கிய நூல்கள் உள்ளன. நூலின் தலைப்பு சொன்னால் அடுத்த இரண்டு நிமிடங்களில் எடுத்துவிடுகிறார். அந்த அளவுக்கு நேர்த்தியாக அடுக்கிவைத்திருக்கிறார். நூல்களை இலக்கிய அன்பர்களுக்கும் அன்பளிப்பாகவே வழங்கி வருவது இவரது இன்னொரு சிறப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார் திவான். விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் உயிலைத் தேடி எடுத்துப் பதிப்பித்திருக்கிறார். பாளையங்கோட்டையின் வரலாற்றை எழுதவும் திட்டமிட்டிருக்கிறார். செங்கோட்டை வாஞ்சி சம்பந்தமான பல நூல்களை எழுதியுள்ளார் திவான். ‘பரிசு பெறாத பாரதி பாடல்’ எனும் நூலில் பாரதி தொடர்பான அரிய தகவல்களைப் பதிவுசெய்திருக்கிறார். தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு பாடல் போட்டியில் பாரதி அனுப்பிய பாடலுக்குப் பரிசு கிடைக்கவில்லை எனும் வியப்பான செய்தி அவற்றுள் ஒன்று. காலத்தை வென்று நிற்கும் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ பாடல்தான் அது!

- இரா.நாறும்பூநாதன்,

ஏப்ரல் 23 : உலகப் புத்தக தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x