Published : 28 Apr 2018 09:00 AM
Last Updated : 28 Apr 2018 09:00 AM

நூல் நோக்கு: நிழலுக்குள் நிஜம் தேடும் பதிவு!

புதிய அருள் மொழி!

உடல்-ஆன்மா, அறிவு-உணர்ச்சி, சிந்தனை-சிந்தித்தல் என்பவை எப்படி வேறுபட்டவை என்று சிறிய கதைகள் மூலம் அலுப்பு தட்டா மல் வாசிக்க முடிகிறது. நிர்வாண நிலை, மோட்சம், விடுதலை-விடுதலை நிலை, விழிப்புணர்வு நிலை, துரிய நிலை, சாட்சி நிலை, ஆன்ம சாட்சாத்காரம் என்பனவற்றை, அட இவ்வளவுதானா என்று வியந்து ஏற்கும் வகையில் விளக்கியிருக்கிறார். புத்தர், ரமணர், ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எப்படி ஞானம் அடைந்தனர் என்று சுற்றிவளைக்காமல், குழப்பாமல் கூறியிருப்பதும் சிறப்பு. அச்சம், கோபம் ஆகியவை ஒரு நிமிடத்தின் அறுபதில் ஒரு பங்குக்கு மேல் ஒரு மனிதனிடம் நீடிக்காது, அதைப் பற்றியே சிந்திப்பதால்தான் அது இருப்பதாகக் கருதுகிறோம் என்று கூறி ‘மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது’ என்ற பழமொழிக்கு மிகப் புதுமையான விளக்கமும் தந்திருக்கிறார். தியானம், தவம், நிஷ்டை என்று எதுவுமே இல்லாமல் துயரங் களிலிருந்து மனம் விடுபடும் வழியைக் கூறும்போதுதான், ‘மனதில் உறுதி வேண்டாம்’ என்று வலியுறுத்துகிறார். இருட்டறையில் பல பொருட்கள் இருந்தா லும் நாம் அங்கு ஏதுமில்லை என்றே கருதுகிறோம். மெழுகுவத்தியை ஏற்றியவுடன், இதெல்லாம் இருக்கிறதா என்று வியக்கிறோம். இவ்விதமே உலகில் பல விஷயங்கள் ஏற்கெனவே இருப்பவை, யாராவது வெளிச்சம் காட்டும்போதுதான் நாம் பார்வையடை கிறோம். சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமிய கர்மாவை நினைவில் பதியவைத்துவிடுகிறார். ஆன்மிகத்தைப் புரிந்துகொள்வது கடினமே இல்லை என்பதுடன் நம்மை நாமே புரிந்துகொள்ளவும் வழிகாட்டுகிறார்.

- ஜூரி

மனதில் உறுதி வேண்டாம்

ஸ்ரீ பகவத்

மல்லிகை பிரசுரம்,

சென்னை-24,

விலை - ரூ.100.

044-24720565.

 

நிழலுக்குள் நிஜம் தேடும் பதிவு!

காதல் புகுந்த மனசு எப்போதும் கண்ணாடிப் பாதையில் பயணித்து பளிங்குப் பூக்களைத் தரிசிக்கும். சினிமாவின் உள்ளங்கைகளில் நிஜ காதல் ரேகைகளைத் தேடித்தேடி ஒப்பிடுகிறார். ‘சினிமா வில் இருப்பதைப் போல, நமக்குள்ளும் ஒரு எடிட்டர் இருந்தால் வாழ்க்கை அழகாகிவிடும்’ என்கிற அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் சிறுகதைத் தன்மையை விதைக் கிறார். சினிமாவில் காணும் பிம்பங்களில் தங்களை இணைத்துப்பார்க்கும் மனசு எல்லோருக்கும் உண்டு, அதை வர்ணக் குடையாக புத்தகம் முழுக்கவும் விரித்துப் பிடிக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸியுடன் கவுதம் என்கிற இளைஞனின் வாழ்வில் குறுக்குப் பயணம் மேற்கொண்ட ப்ரீத்தி என்கிற பெண்ணை ஒப்பிட்டு நிறைய நிறைய கேள்விகளை எழுப்புகிறார். நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையேயான அழகானதொரு உணர்வுப் பாலம்தான் இந்த ‘மான்டேஜ் மனசு’. படிக்க சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்ட இப் புத்தகத்தை இளைஞர்கள் உள்பாக்கெட்டில் வைத்துகொள்ளலாம்.

- மானா பாஸ்கரன்

மான்டேஜ் மனசு

க.நாகப்பன்

விலை - ரூ 150

தோழமை வெளியீடு,

சென்னை -78

99401 65767

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x