நுல் வெளி: அன்பை மறைக்கும் சுவர்
சல்மா எழுதியுள்ள மூன்றாவது நாவல் ‘அடைக்கும் தாழ்’ (2022). இந்நாவலில் காதலுக்கும் மதத்துக்கும் உள்ள உறவுச் சிக்கலைப் புனைவாக எழுதியிருக்கிறார். நாவலுக்கான தலைப்பைத் திருக்குறளில் இருந்து பெற்றிருக்கிறார்.
திருக்குறளின் ‘அன்புடைமை’ அதிகாரத்தின் முதல் குறள் ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் / புன்கணீர் பூசல் தரும்’. ‘அன்பு என்பது மூடிவைக்க முடியாத உணர்ச்சி. ஒருவர் அன்புடையவர் என்பதை அவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு நம்மையறியாமலும் கண் கலங்குவதே காட்டிவிடும்’ என்று நாமக்கல் கவிஞர் இதற்கு உரை கூறுகிறார்.
இந்நாவல் இந்தக் குறளுக்கான கருத்தை மறுபரிசீலனை செய்ய முயன்றிருக்கிறது. மூன்று தலைமுறைகளின் கதை இந்நாவலில் சொல்லப்படுகிறது. காதலுக்கும் மதத்துக்குமான பிரச்சினையை நாவலின் பிற்பகுதி தீவிரமாகப் பேசியிருக்கிறது. முற்பகுதியில் அதற்கான களத்தைச் சல்மா உருவாக்கிக் கொள்கிறார்.
மதம் கடந்த இரு காதல் நிகழ்வுகளைப் பிரதி அணுகியுள்ளது. முதல் காதல், ராஜாங்கத்தின் அண்ணன் அனிபாவுடையது. அனிபா, தனது தோட்டத்தில் வேலைசெய்யும் சித்ராவை விரும்புகிறான். அவளுக்கும் விருப்பம்தான். இந்தக் காதல் ‘16 வயதினிலே’ (1977) வெளிவந்த காலகட்டத்தைச் சார்ந்தது. அனிபாவைத் திருமணம் செய்துகொள்வதில் சித்ராவுக்குத் தடையேதும் இல்லை. பிரச்சினை அனிபா வீட்டில்தான்.
மதமே மாறினாலும் சித்ராவை ஏற்றுக்கொள்வதில் அனிபா குடும்பத்தினர் தயக்கம் காட்டுகின்றனர். சித்ரா, இந்து என்பதுதான் காரணம். சித்ராவுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறுகிறது. அனிபா தற்கொலைக்கு முயல்கிறான். மத இறுக்கங்களுக்கு எதிராக அவனால் ஒன்றுமே செய்ய முடியாது; தன்னை வேண்டுமானால் மாய்த்துக்கொள்ளலாம். மதம் மிகப் பெரியது; அதற்கு எதிராகத் தனிமனிதர்களால் என்ன செய்துவிட முடியும்? அனிபா கதாபாத்திரம் இதற்குச் சிறந்த உதாரணம்.
இரண்டாவது காதல், ராஜாங்கத்தின் மகன் இம்ரானுடையது. இவனிடமும் மத நம்பிக்கை கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. தற்காலத்திலும் மதம் நெகிழ்வுத் தன்மையுடன் இயங்கவில்லை என்பதை இம்ரானின் நடவடிக்கைகளின் வழியாகச் சல்மா நிறுவுகிறார். அனிதா என்ற மலையாளப் பெண் இம்ரானைத் தீவிரமாகக் காதலிக்கிறாள். இவனுக்காகத் தன்னை இஸ்லாமியப் பெண்ணாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்கிறாள்.
இம்ரானுக்காகத் தன்னை வருத்திக்கொள்கிறாள். அனிபாவுக்கு இருந்த தயக்கம் இம்ரானுக்கும் இருக்கிறது. இந்தக் காதல் நிறைவேறாது என்று நினைக்கிறான். இருவருக்கும் இடையில் தகர்க்கவே முடியாத ஒரு சுவரைப் போன்று மதம் இருப்பதை உணர்கிறான். சிந்தனைகள் நவீனமாக இருந்தாலும், யதார்த்தம் அதற்கு எதிராக இருக்கிறது.
அனிதாவினுடைய தந்தையின் இறப்பும் நண்பர்களின் தொடர் வற்புறுத்தலுமே இம்ரான் மனதில் மாற்றத்தை உண்டாக்குகிறது. அனிதா மீது காதல் கொள்கிறான். காலம் இருவருக்கும் இடையில் மெல்ல விரிசலை உண்டாக்குகிறது.
‘லவ் ஜிகாத்’ பரப்புரைதான் அனிதாவின் மன விரிசலுக்குக் காரணமாக அமைகிறது. ‘லவ் ஜிகாத்’ பரப்புரை கேரளத்தில் தீவிரமாகச் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மதத்திலும் மதத்தைக் காப்பாற்றும் கலாச்சாரக் காவலர்கள் எப்போதும் இருப்பார்கள். இந்நாவலில் வரும் கிருஷ்ணன் நாயர் கதாபாத்திரம்தான் அந்தக் கலாச்சாரக் காவலர்.
இந்து மதத்தைச் சார்ந்த ஆண் ஒருவர் முஸ்லிம் பெண்ணை மணந்தால் அதனைக் காதல் என்றும், இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவரை முஸ்லிம் ஆண் மணந்தால் அது கட்டாயத்தின் பேரில் நடத்தப்படும் ‘லவ் ஜிகாத்’ என்றும் பொதுவெளியில் பரப்புரை செய்யப்படுகிறது. இந்தப் புள்ளியில் பிரதி கவனம் செலுத்தவில்லை.
அனிதாவின் கதாபாத்திரம் எதிர்மறையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வாழ்க்கையின் நிதர்சனங்களை அவள் வெளிப்படையாகப் பேசுகிறாள். சல்மா அந்த விதத்தில் பாராட்டத்தக்கவர்.
‘ஒருவர்மீது வந்த காதல், பிறகு இல்லாமல் போவதற்குக் காரணங்கள் இருக்கலாம்தானே?’ என்ற அனிதாவின் தர்க்கத்தில் நியாயம் இருப்பதாகவே பிரதி ஆசிரியர் கருதுகிறார். காதலுக்காக ஒருவர் இன்னொரு மதத்துக்கு ஏன் மாற வேண்டும் என்ற காத்திரமான கேள்வியை இந்நாவல் முன்வைக்கிறது. இதுதான் இந்நாவலின் மையமும்கூட.
பிரதியின் கதையாடலில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. சித்ரா, அனிதா, வினுதா, காவ்யா என நால்வருமே இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் நால்வருமே தாங்கள் காதலித்த ஆண்களுக்காக மதம் மாறுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இவ்விடத்தில், தாங்கள் காதலித்த பெண்களுக்காக மதம் மாறும் முடிவை அனிபா, இம்ரான், பைசல் என ஒருவருமே ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. பெண்கள்தாம் ஆண்களுக்காகத் தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா? மதம் மாறுவதற்கு இஸ்லாம் ஒருநாளும் அனுமதிக்காது என்கிற விமர்சனத்தைச் சல்மா இங்கு முன்வைக்கிறாரா? மதம் சார்ந்து பிரதி பேசுகிறதா? அல்லது பாலினம் சார்ந்து பிரதி பேசுகிறதா இது போன்ற கேள்விகளையும் உள்ளடக்கித்தான் இந்நாவலை வாசிக்க வேண்டும்.
அடைக்கும் தாழ்
சல்மா
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.275
தொடர்புக்கு: 04652-278525, 9677916696
- தமிழ்மாறன்; தொடர்புக்கு: rsthamizhmaaran@gmail.com
