

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருக்கும் தெ.பாஸ்கரபாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, தமிழ் - அறிவியல் ஆசிரியர்களுக்காக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பயிலரங்கம் ஒன்றில் ஆற்றிய உரையின் தொகுப்பாக வெளிவந்துள்ள குறுநூல் இது.
‘கல்வி என்பது கற்றுக்கொடுப்பது மட்டுமல்ல; கற்றுக்கொள்வதும்தான்’ என்று கல்வியாளர்கள் சொல்வதில் உள்ள ஆழ்ந்த பொருளை உள்வாங்கியதன் வெளிப்பாடாகத் தெளிந்த சிந்தனையோடு, சமூகத்தின் வளர்ச்சியில் கல்வியின் தேவை குறித்தும், ஆசிரியர்களின் பணி குறித்தும் மிகுந்த அக்கறையோடு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.
‘ஏன், எதற்கு, எவ்வாறு, எப்படி என்று கேள்வி கேட்கச் சொல்லிக் கொடுங்கள்’, ‘சிந்திக்கக் கற்றுத் தருவது மட்டுமே ஓர் ஆசிரியரின் கடமையாகவும் அடிப்படை அறமாகவும் இருக்க வேண்டும்’, ‘கல்வியை எப்போது வேண்டுமானாலும் நம்மால் கைக்கொள்ள முடியும்; ஆனால், விளையாட்டு அப்படி அல்ல’ ஆகிய மூன்று பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ள உரையில், ஆசிரியர்கள் மாணவர்கள் பால் கூடுதல் கவனம்கொள்ள வேண்டியதன் அவசியத்தைத் தோழமையோடு பகிர்ந்துகொண்டுள்ள விதம் பாராட்டத்தக்கது. - மு.முருகேஷ்
அன்புள்ள ஆசிரியர்களுக்கு
தெ.பாஸ்கரபாண்டியன்
பரிதி பதிப்பகம்
விலை: ரூ.55
தொடர்புக்கு: 7200693200
கடிதங்களில் துலங்கும் போராட்ட வரலாறு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கக் காலத் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் பி.எஸ்.ஆர். என அழைக்கப்படும் பி.ஸ்ரீனிவாச ராவ். இவர் தஞ்சைப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்கள் இடையில் பணியாற்றியவர். முன்னுதாரணமான இடதுசாரித் தலைவர் இவர்.
1936இல் இந்திய விவசாயச் சங்கம் உருவாக்கப்பட்டபோது, தமிழ்நாட்டுப் பகுதிகளில் அதன் கிளைகள் உருவாகத் தீவிரமாகப் பணியாற்றியவர். சுதந்திரம் அடைவதற்கு முன்பு நிலவுடைமையாளர்களுக்கு எதிராகப் போராடியதால் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தனது தலைமறைவு வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி தோழர் சர்மாவுக்கு அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு நூல் இது. சுந்தர்ராஜ் என்கிற புனைபெயரில் பி.எஸ்.ஆர். இந்தக் கடிதங்களை எழுதியிருக்கிறார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காவல் துறை ஒரு பக்கம் வேட்டையாடிக் கொண்டிருக்க..., அதற்கிடையில் தோழர்களின் உதவியால் அவர் ஆற்றிய பொதுப் பணிகள் குறித்த சித்திரத்தை வியக்கத்தக்க வகையில் இந்தக் கடிதங்கள் காட்சிகளாக விவரிக்கின்றன. பொது வாழ்க்கைக்காகத் தன்னலம் களைந்து பி.எஸ்.ஆர், மேற்கொண்ட பயணங்களும் எளிமையான தோழர்களின் பக்க பலமும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
1947 ஜனவரியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான கால கட்டத்தில் சர்மாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் வழி அந்தக் கால கட்ட அரசியலைத் தெளிவாக இக்கடிதங்கள் துலங்கவைக்கின்றன. கடைசிக் கடிதக் காலகட்டத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்துவிடுகிறது.
ஆனால், அதன் மீதான தன் விமர்சனத்தை பி.எஸ்.ஆர். இப்படி வைக்கிறார்: ‘மகாகவி பாரதி மாத்திரம் இன்று உயிருடன் இருந்திருந்தாரேயானால் அவரும் வேலூர் சிறைக்குள் தள்ளப்பட்டிருப்பார் என்றெல்லாம் நான் என் மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்’. - ஜெய்
தலைமறைவு வாழ்க்கையில் எனது அனுபவங்கள்
பி.ஸ்ரீனிவாச ராவ்
அறம் பதிப்பகம்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 9150724997
வித்தியாசமான கதைகள்: எழுத்தாளர் தேவா சுப்பையாவின் ஏழு சிறுகதைகளின் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற பொருளில் எழுதப்பட்டவை. இந்தக் கதைகளில் எழுத்தாளர் கைக்கொண்டிருக்கும் எழுத்து நடை, எளிமையும் சுவாரசியமும் கொண்டது.
‘கருப்பன்’, தமிழ்ப் பண்பாட்டு அம்சத்தை இன்றைய காலகட்டத்தில் குறுக்கு விசாரணை செய்து பார்க்கும் கதை. இந்தக் கதையில் ஒரு பழைய கோடங்கியும் புதிய கோடங்கியும் வருகிறார்கள்.
குறி சொல்லும் வல்லமை பெற்ற இவர்கள், கால மாற்றத்தால் என்ன ஆகிறார்கள் என்பதைச் சொல்கிறது கதை. நாட்டார் பண்பாட்டுடன் ஒட்டியிருந்த இந்த வழக்கம் இன்று அதன் மகிமையை இழந்துவிட்டதை இந்தக் கதை யதார்த்தமாகப் பதிவுசெய்கிறது. ‘சாலிடேர் டிவி’ கதை, தூர்தர்ஷன் காலத்துச் சம்பவங்களைச் சுவாரசியத்துடன் பதிவுசெய்கிறது.
வாரத்துக்கு ஒரே ஒரு தமிழ்ப் படம், வெள்ளிக்கிழமை ‘ஒளியும் ஒலியும்’, சனிக்கிழமை இந்திப் படம் என்கிற அந்தக் காலத்து நினைவுகளைத் தூண்டிவிடுகிறது இந்தக் கதை. ‘1995ஆம் ஆண்டு’ கதை காதலின் தீவிரத்தையும் சமூக விழுமியங்களையும் அதற்கு வரும் எதிர்ப்பையும் பதிவுசெய்கிறது.
‘பாம்பு வந்திருச்சு’ கதை ஒரு வீட்டுக்குள் பாம்பு புகுந்ததை விவரிக்கிறது. பாம்பைப் பிடிக்க மொத்தக் குடும்பமும் இறங்குகிறது. இந்தக் கதை முழுமையும் ஒரு படிமமாக வெளிப்பட்டுள்ளது. இதற்குள் குடும்ப அங்கத்தினர் குறித்தும் அவர்களது வாழ்க்கை குறித்தும் சொல்லிவிடுகிறார் எழுத்தாளர். பாம்பு புகுந்த ஒரு துளையை சிமென்ட் வைத்துப் பூசிவிடுகிறார்கள். ஆனால், பாம்பு அதற்குள் இல்லை என்பதுதான் நிதர்சனம். வாழ்க்கையும் பாம்பைப் போல் நழுவுகிறது. - குமார்
கருப்பன்
தேவா சுப்பையா
சுவடு பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9551065500
பன்மைத்துவம் காக்கப்பட வேண்டும்! - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ‘அணையா வெண்மணி’ என்கிற காலாண்டிதழை நடத்தி வருகிறது. இவ்வாண்டின் முதல் இதழ், 2024 மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்துக்கும் பன்மைத்துவத்துக்கும் இடம் அளிக்கிற கட்சியை மக்கள் தேர்வுசெய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
பொருளாதாரம், நீதித் துறை, சமூகம் உள்ளிட்ட தளங்களில் பாஜக தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் பல கட்டுரைகள் இதில் உள்ளன. கல்வியாளர் முனைவர் வே.வசந்திதேவி, மேனாள் நீதியரசர் து.அரிபரந்தாமன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா போன்றோர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். பாசிச அணுகுமுறையிலிருந்து இந்தியா மீட்கப்பட வேண்டும் என்கிற ஒற்றைக் குரலைஅனைத்துக் கட்டுரைகளும் எழுப்புகின்றன. - ஆனந்தன் செல்லையா
அணையா வெண்மணி
(காலாண்டிதழ்)
ஆசிரியர்: கே.சாமுவேல்ராஜ்
விலை: ரூ.20
தொடர்புக்கு: 9445575740
ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்... ஷெர்லாக் ஹோம்ஸ் உலகின் மிகப் பிரபலமான துப்பறியும் கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் சர் ஆர்தர் இன்கேஷியஸ் கோனான் டாயில். ‘எ ஸ்டடி இன் ஸ்கார்லட்’ (A Study in Scarlet) என்கிற முதல் நாவலில்தான் இந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.
அவருடைய உதவியாளராக வாட்சன் என்கிற கதாபாத்திரம் இந்த நாவலில்தான் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் துப்பறியும் கதை எழுதுவதற்கான முன்னுதாரணமாகவும் ஆர்தரின் இந்த நாவல் இன்றும் விளங்குகிறது. உலக அளவில் அதிகம் வாசிக்கப்பட்ட எழுத்தாளராகவும் ஆர்தர் இருக்கிறார்.
இவரது நாவல்கள் தொலைக்காட்சித் தொடராகவும் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. 1905இல் அவர் எழுதிய ‘The Valley of Fear’ நாவலின் மொழிபெயர்ப்பு இந்த நாவல். டக்ளஸ் என்பவர் மரணத்தைத் தொடர்ந்து அதைப் புலனாய்வு செய்யத் தொடங்குகிறார் ஷெர்லாக் ஹோம்ஸ். ஒரு நூற்றாண்டைக் கடந்த நிலையிலும் இந்த நாவல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் வாசகர்களைச் சுவாரசியப்படுத்துகிறது. - விபின்
அச்சப் பள்ளத்தாக்கு
சர் ஆர்தர் இக்னேஷியஸ் கோனான் டாயில்
(தமிழில்: சிவ.முருகேசன்)
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 044 2489 6979